பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 16, 2012

கொன்றைப் பூக்களும் ஒரு காதலும்...


ஒரு மாலை பொழுதின் நடை பாதை ஓரத்தில்
கொன்றைப் பூக்களை உதிர்த்தபடி
நின்றிருந்த சிறு மரத்தினடியில்
சுரிதாரில் பூக்களை இறைத்த படி நீ
வண்ணத்துப் பூச்சிகளை உதிர்க்கிறது மனம்
கண்களின் வழியே பறவைகளென மாறி
வண்டுகளாய் அடைகிறது உன்னை
அதுவரை வேடிக்கை பார்க்க வந்தவனை
வாடிக்கையாய் வரவைத்தவள் நீ
பார்வைகளைப் பரிமாறிக் கொண்ட
ஒரு மழைக் காலமும்
மரியாதை பேச்சுகளுடனான
ஒரு குளிர் காலமும் கடந்திருந்தது
”போடா” என நீ அழைத்த மற்றொரு அதீதப்
பொழுதினை சுமந்து கடந்தது
ஒரு வசந்த காலம்
வண்ணம் சுமக்கும் கல்லூரியின் நிழற்குடை
கணினி பயிலும் சிறப்பு வகுப்பென
கோடையும் கடந்துவிடுகிறது
அலைபேசிகள் பரிமாற்றம் பெற
இரவுப் பொழுதுகள் உறங்கா விடியலில்
அந்திப் பொழுதுகள் சந்திப்புகளாய்
இருவரின் கனவுகளும் மின்னிப் பரவி
மின்மினிகளென ஒளியூட்டியது
இருள் சூழும் காகிதப் பூ மரத்தை
காதலுக்கு பிடிக்கிறதோ இல்லையோ
வதந்திக்கு பிடிக்கிறது காதலை
இருவருமே மறுக்கவில்லை இருபுறமும்
பிறிதொரு நாளில்
உன் தந்தை அழைப்பதாய் நீ அழைக்க
கைபிடித்து கதை பேசி புன்னகையுடன்
வழியெங்கும் நம் ஊர்வலம்
நம் கடைசி மகிழ்வு அது
உன் தந்தைக்குப் பின்னால் நீ
எனக்கு பின்னால் உன் தாய்
நலவிசாரிப்புகள் இல்லை
ஆதரவான கை குலுக்கல் இல்லை
என்ன செய்கிறாய் ?
வெறுப்பும் கோபமுமாய் ஒலித்த குரல்
உன்னைக் காதலிப்பதை
முழுநேர வேலையாகவும்
என் அலுவலகத்தில் பகல் மட்டும்
வேலையுமாய் இருப்பதை சொன்னேன்
உயிர்க் கவிதை பெற்றவர்கள்
சொற்கவிதைகளை ரசிப்பதில்லை போலும்
அதன் பிறகு மௌனம் மட்டுமே
மெல்ல வெளி வருகிறேன்
பதறிய படி ஓடி வந்து
ஆங்கிலத்தில் மன்னிக்கக் கோரினாய்
அதுவே என் காதலுக்குமாய்
அலை பேசி எண்கள் மாறிப் போனது
வீடும் தெருவும் கூட
நடந்து அலைந்து களைத்ததில்
நகரம் பெரியதாக ஆகியிருந்தது
இப்பொழுதெல்லாம் அலைபேசிக் கோபுரங்கள்
வெறும் இரும்புக் கூடுகளாகவே தெரிகிறது
அழிந்து போன சிட்டுக் குருவிகளும்
என் காதலுமாய் ஊர் முழுக்க சாட்சியென
இப்பொழுதும் கொன்றைப் பூக்கள்
உதிர்ந்து கொண்டுதானிருக்கிறது
நீ நின்ற அதே இடத்தில்...

1 comment:

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

நல்ல அனுபவக் கவிதை...கற்பனையாக எடுத்துக் கொள்ள மனம் மறுக்கிறது.அருமை