பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 6, 2012

பூக்களை சுமந்த பாதை...


எவனோ ஒருவன் தொடர்வது
அனுமானமெனத் தெரிகிறது
நிச்சயம் திரும்பி பார்க்கையில்
அவன் இருக்கப் போவதில்லை
என்னைத் தொடர்வதில்
அவனுக்கு என்ன பலன்?

வேவு பார்த்துக் கொண்டே
குறித்துக் கொள்கிறான்
நான் இடரும் இடங்களில்
நான் நல்லவனா சந்தர்ப்பவாதியா
எனும் அவனது தேடல்
சுத்தமான சுயனலவாதியுடையது...

நான் சந்தர்ப்பவாதியாக
இருக்க வேண்டும் என்பதே அவன் ஆவல்
என்னைக் குற்றவாளியாக்கி
தன்னை சூழல் என்ற பெயரில்
நல்லவனாக்கி கொள்வதே
அவனுள் படரும் ரகசியம்
பேசாமல் இருப்பது போல்
பேசிக் கொண்டே இருக்கிறான்
என் தவறுகளை..

குற்றம் சுமத்தி என்னை
அவனிடமிருந்து பிரித்துக் கொள்வதே
அவன் தேவை எனினும்
அதை அவன் சுலபமாக
செய்துவிடப் போவதில்லை
எப்படியும் என்னில் வழியும்
குருதியும் கண்ணீரும்
அவன் பாதங்களை கழுவ வேண்டுமென
விரும்பி தொடர்கிறான் நிழலென...

முன்பொரு நாளில்
தவறு எனத் தெரிந்த ஒன்றை
இருவருமே தான் செய்தோம்
எனைத் தொடரும் முன்
பிரிய வேண்டும்
பிரிவதற்கென காரணங்கள்
சுடும் கற்களென அடுக்கப் பட
பொய்க் கோட்டைகள் வலிமை படுகிறது...

நம்பிக்கை ஒன்றையே
நம்பிக் கொண்டிருந்த என்னை
அதைக் கொண்டே வீழ்த்த முடிகிறது
கற்பூரம் என்று இல்லாவிட்டாலும்
நான் கழுதையல்ல
புரியும் உணமைகளோடு
இரவுகள் விழிக்கிறது
இருளிலும் தேடுகிறாய்
எனக்கெதிரான சாட்சிகளை...

சரி
இனி நானும் நடிப்பதை தவிர
வேறு வழிகளில்லை
உனக்கென நான் நின்றுவிடுகிறேன்
கூண்டுக்குள்
ஆதாரங்கள் நிரூபிக்கப் படும்
சாட்சிகள் சொல்லுவார்கள்
பிரிவு தீர்ப்பு வழங்கும்
உன் நீதி மன்றம்
மௌனம் சுமந்து நான் வெளியேற
புன்னகையோடு பார்ப்பாய்
இனி எந்தக் கவலையுமில்லை என...

இறுதியாக
உன்னிடம் சொல்ல விரும்புவதெல்லாம்
ஒன்று தான்
இன்றைய உன் புன்னகை
நாளைய கண்ணீரை ஒளித்திருக்கிறது
என் பாதைகளை அடைக்கும் முன்
அவை உனக்கான பூக்களை
சுமந்தவை என்பதையும் நினைவுகொள்...

No comments: