பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2012

அலறல்...

சற்று முன் என்னைக் கடந்த தொடர்வண்டி
என்னையும் சுமந்து கொண்டிருக்கிறது
அதன் குளிர் சாதனம் பொருத்தப் படாத
s3 பெட்டியின் ஏதாவது ஒரு காலி இருக்கையில்
நான் என்னை அமர்த்தி இருக்கலாம்
ஆம் அப்படித் தான் இருக்க வேண்டும்
உன்னோடு கதைகள் பேசியபடி
பயணமொன்றை துவங்குவதில்
நான் ஆனந்தமடைகிறேன்
சினிமா பற்றி பேசு
கவிதைகள் பற்றி பேசு
கதைகள் இலக்கியம்
விண்வெளி
இன்னும் நான் அறிந்திராத எல்லாவற்றைப் பற்றியும்
நானும் பேசுவேன்
எல்லாம் தெரிந்தவன் போல்
ஜன்னலில் ஓடும் மரங்களையும்
சில பாலங்களின் கீழ் நகரும் நதியினையும்
ரசிப்பதாக நடிக்கிறேன்
அடிக்கடி கதவோரம் நின்றபடி
உனக்குத் தெரியாமல் ஒரு சிகரெட்டைப் புகைத்தபடியும்
இந்தப் பயணம் எனக்கு முக்கியமானது
உன்னுடனான பயணம் என்பதை விட வேறெதுவும் இல்லாததால்
மற்றபடி உனக்கு இது வழக்கமான ஒன்றாக இருக்கலாம்
.....
...
..

அடுத்ததாய் வந்து நிற்கும் ரயிலின் அலறல் கேட்கிறது
நீ இல்லை என்பதும்
நீ போய் விட்டாய் என்பதும்.....
என் கனவுகளிலிருந்து விழித்துக் கொள்ள
அவகாசம் தருவதில்லை நீ எப்போதும்...

No comments: