பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 8, 2012

தேவதையின் வாசம்

தேவதையின் வாசம் அறையெங்கும்
சற்று முன்பு தான் வந்திருக்கலாம்
நான் இல்லாத நேரம்
சற்றே தயங்கி இருக்கலாம்
வெள்ளைக் கொக்கின் சிறகில்
ஒரு மெத்தை செய்து வைத்திருந்தேன்
அதை ரசித்திருக்கலாம்
அறையெங்கும் இரைந்து கிடக்கும்
புத்தகங்களையும்
ஒதுக்கி வைக்கப் பட்ட காலி மதுப் புட்டிகளையும்
கருகி தீந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளும்
தேவதையை சரிவர வரவேற்றிருக்காது தான்
நடுவில் தொங்கும் துணி கயிற்றில்
சாயம் போன உள்ளாடைகள்
மடிக்கப் படாத போர்வை
சுருட்டப் படாத கோரைப் பாய்
தேவதைக்கு இது புதியதாய் இருந்திருக்கலாம்
நாசி துவாரங்களில் துர்நாற்றம்
கால்களில் பிசுபிசுப்பென
ஓரமாய் வீசப் பட்ட லுங்கிகளை
வெறுத்துப் பார்த்திருக்கலாம்
வேறு வழிகள் இல்லை
கேட்டு விடலாம் யார் வேண்டுமென?
தயங்கியபடி சொன்னது
என் பெயரை
என் முகவரியை
நானில்லை அது என்று சொல்லி
கீழிறங்கும் தேவதையை
வேடிக்கை பார்க்கிறேன்
எனைச் சுற்றிலும் மணம் கமழ
பூக்களில் சிலவற்றை உதிர்த்துச் சென்றிருக்கிறது
நிறைகிறேன் நான்...

.....
...
..
நேயர் விருப்பப் பாடலொன்று
வானொலியில் ஒலிக்கிறது
"என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளை எங்கிருந்தாய்"....

No comments: