ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்து,
என் நாளங்களில்
நூற்றாண்டுகளின் சாரத்தைப் பாய்ச்சுபவளே !
உன்னை வெற்றி கொள்ள
உன் விரிந்த சதை மேல்
என் ஆன்மா கவிகிறது.
ஒரு வேங்கையைப் போல் சோம்பல் முறித்துக் கொண்டு
என் இதயம் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது.
விண்மீன்களை ஒளி பற்றிக் கொள்வது போல்
சிதறிய என் உயிர் உன்னைப் பற்றிக் கொள்கிறது.
காற்றைத் தழுவும் பாய்மரம் போல
என்னை நீ அணைக்கிறாய்.
விதையைப் பெறும் பாத்தியைப் போல
உன்னை நான் அணைக்கிறேன்.
என் துயரங்கள் உன்னைச் சுடவில்லையெனில்
அவற்றின் மீது படுத்துக் கொள்.
என் சிறகுகளுடன் உன்னைப் பினைத்துக் கொள்.
அவை உனக்குப் பறக்கும் ஆற்றலைத் தரலாம்.
என் ஆசைகளைச் சீராக்கு.
அவற்றின் போராட்டம் உன்னைப் புண்படுத்தலாம்.
துயரத்தை நான் இழந்த பிறகு
எனக்கென நீ மட்டுமே இருக்கிறாய்
வாளைப் போல் என்னைக் கிழித்தெறி.
அல்லது, ஓர் உணர்கொம்பைப் போல்
என்னை மென்மையாகத் தொடு
என்னை முத்தமிடு
என்னைக் கடி
என்னைக் கொழுந்துவிட்டெரியச் செய்.
எனது ஆண்விழிகள்
எல்லையற்ற உன் கடல் விழிகளில்
உடைந்தழியும் கப்பலாவதற்காக
நான் கரைக்கு வருகிறேன்.
No comments:
Post a Comment