பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 5, 2012

இந்த அந்திமாலையைக் கூட…


இந்த அந்திமாலையைக் கூட நாம் இழந்துவிட்டோம்
துயர இரவு இவ்வுலகின் மீது கவிந்தபோது
நாம் கையோடு கைகோர்த்துச் சென்றதை
யாரும் பார்க்கவில்லை
தொலை தூர மலைமுகடுகளில் அஸ்தமனத்
திருவிழாவைச்
சாளரத்தின் வழியே நான் பார்த்திருக்கிறேன்.

சில சமயங்களில் ஒரு துண்டுச் சூரியன்
என் கைகளுக்கிடையே ஒரு நாணயத்தைப் போல்
சுடர் விட்டது.

என் துயரத்தைப் பற்றித் தான் நீ அறிவாயே-
அது என் ஆன்மாவை இறுகப் பற்றுகையில்
உன்னை நான் நினைத்துப் பார்த்தேன்.

அப்போது நீ எங்கே இருந்தாய்?
வேறு யார் உன்னோடு இருந்தது?
அவன் என்ன சொன்னான்?
துயருறும் போதும், நீ எங்கோ இருக்கிறாய்
என் உணரும் போதும்
காதல் என்னை ஏன் முழுமையாக ஆட்கொள்கிறது?

ஒவ்வொரு மாலையும் நான் படிக்கும்
புத்தகம் கீழே விழுந்தது.
அடிபட்ட நாயைப் போல் என் அங்கி
காலருகே சுருண்டு கிடந்தது.

சிலைகளை அழிக்க அந்தி எங்கே செல்கிறதோ
அங்கே நீ மாலைதோறும் மாலை தோறும் விலகிச்
சென்று கொண்டே இருக்கிறாய்.

No comments: