ஒரு கொலை மற்றும் ஒரு தற்கொலை
இவற்றை தவிர்க்கும் பொருட்டு
நாம் பிரிந்தோம்...
இருவரும் பிரிந்தது ஒரு மைதானமல்ல
வெவ்வேறு திசைகளில் போக...
மலைப் பாதையில்
மேல் நோக்கிய பயணத்தில் நீ
பள்ளத்தாக்கில் நான்...
கைக்கு கிடைத்த
செடி கொடி இண்டு இடுக்குகளைப்
பற்றியபடி மேலேறி வர
நடத்திய மரணப் போராட்டமே
பயணமாக நான்....
என்னை மீண்டும் கீழே தள்ளிவிடக்
காத்திருந்ததில் உன் பயணம்
மறந்தவனாய் நீ...
என் திசைகளில் நீ இல்லை
உன் எல்லா திசைகளிலும்
நான் இருந்தேன்...
முகமற்ற அருவத்தை வீழ்த்த
காற்றை பாளம் பாளமாக
வெட்டிய படி நீ
கொஞ்சம் கொஞ்சமாய்
பைத்திய காரனாகிக் கொண்டிருந்தாய்...
நான் திரும்பியும் பார்க்காமல்
நகர்ந்த போது
நீ
என் ஆடைகளைப் பறித்து
நிர்வாணமாக்க முயன்றாய்...
என் சிம்மாசனத்தை
நான் அடைந்த போது
உன் மகுடம்
கீழே விழுந்திருந்தது..
உன் முகமிருக்கும் இடத்திற்கு
என் பாதம் உயர்ந்த போது
கட்டுகளற்ற வெறிநாயாய்
உன் நாக்கை அவிழ்த்து விட்டாய்...
நான்
உன் வீட்டின் வழியே
மேள வாத்தியங்களோடு
ஊர்வலம் போன போது
நீ
என் பழைய கடிதங்களில்
பூதக் கண்ணாடி வைத்து
தேடிக் கொண்டிருந்தாய்...
நான்
மேலே மேலே நகர்ந்து
மேகங்களை அடைந்து
மழையை பொழிவித்த போது
நீ
நகர முடியாத
பெரு வியாதிக்காரனாய்
ஊர் எல்லையில் கிடந்தாய்
அழுகிய விரல்களோடு...
"பத்தினிகள் அற்ற ஊரில்
இன்னும் எப்படி
மழை பெய்கிறது? என்று
முனு முணுத்துக் கொண்டே
உன் பசிக்கு
ஏந்தினாய்
என் மழையை...
-தாமரை...
No comments:
Post a Comment