அவர்களின் பிரிவுக்கு
அவர்களே தான்
காரணமாய் இருந்திருக்கிறார்கள்
அவர்கள் கண்களை
வீசிக் கொண்டது
அதே மக்களின் வீச்சரிவாளுக்கு
மேலாகத்தான்
அவர்கள் நெருங்கி வந்த போதும்
வீதிகள் இப்படித்தான்
பிரிக்கப் பட்டிருந்தன
மாடி வீட்டுக்காரர்கள்
குச்சு வீட்டுக்காரர்களோடு
அதிகம் பேசிக் கொள்வதில்லை
இப்போது போலவே
வீரத்தோடு உயர்த்திக் காட்ட
கைதான் இல்லை
இழுத்துக் கொண்டு ஓட
கால்கள் கூடவா இல்லை?
வேறொருவனுக்கு வாக்கப்பட்டு
புதுச் சரடு மின்ன அவ்வப்போது
வாசலில் எட்டிப் பார்க்கிறாள் அவள்
எதோ கொடுக்க எதோ வாங்க
கடை எடுபிடியாய்
அடிக்கடி வந்து போகிறான் அவன்
மழை வந்தாலும் வராவிட்டாலும்
அவனோடு ஒரு குடை
எப்போதும் வருகிறது
மறந்து விட்டுப் போன குடையை
வாங்க வருகிறான் அவன்
எடுத்துக் கொடுக்கிறாள் அவள்
கோழைகளுக்கு மழையில்
நனைய கொடுத்து வைக்கவில்லை
என்றாலும் குடையை
மறந்து விட்டுப் போகும்
மதி நுட்பமேனும் வாய்த்திருக்கிறதே...
-தாமரை...
No comments:
Post a Comment