பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 28, 2011

பருத்திக் காடும், பொன் வண்டும்...


பள்ளிக் கூடம் லீவு விட்டால்
மாமா வீடு போவோம்
பஸ்ஸிலே பாதி தூரம்
கால் நடையா மீதி தூரம்...

குத்தைகைக்கு காடு புடிச்சு
மழை பெய்யும் போது மட்டும்
கடலைக் காய் நடும் மாமா
மீதி காலமெல்லாம் பருத்தி செடி வச்சிருப்பார்...

விடுமுறை காலமெல்லாம்
பருத்தி வெடிச்சிருக்கும்
மேகக் கூட்டம் வந்து
காடெல்லாம் நிற்பது போல்...

விடியும் முன்னே எழுந்து
ஒவ்வொரு செடியா பருத்தி பஞ்சு தேடி
எடுத்து கோணியில சுமந்து வந்து
குடிசைல பொதி வைப்போம்...

பணை வெல்லம் போட்டு
அத்தை குடுக்கும் வரக்காபி
அத்தனை ருசி இருக்கும்
அந்த முன்மதிய நேரத்திலே...

பக்கத்திலே இலந்தை மரம்
காய்ச்சு பழுத்திருக்கும்
வேலியோரம் சூரிப் பழம்
பொருக்கி எடுக்க சண்டை வரும்...

பொழுது சாயும் வேளையில
பொன் வண்டு புடிக்கப் போய்
தீப் பெட்டிக்குள்ள அடைச்சு வச்சு
கொண்டு வந்து இரவெல்லாம்
முழிச்சிருந்தேன் பொன்வண்டு ஒளிருமென...

ஞாயிற்று கிழமை வந்த
கொண்டாட்டம் தான் எனக்கு
சேவல் சண்டை வேடிக்கைக்கு
கூட்டிப் போவார் எங்க மாமா...

திரும்பி வரும் போது
கையில பத்து ருபாய் நோட்டு தந்து
செலவு பண்ணாம வச்சுக்க
புத்தியும் சொல்லிடுவார்...

இப்பவும் காடிருக்கு
பருத்தியும் இல்லாம
கடலையும் இல்லாம
நிரப்பி வச்சு கல்லு நட்டி...

எங்கே இருக்கும் அந்த
இலந்தை மரமும்
பொன் வண்டு பூச்சியும்
தேடித் போக நானுமில்லை
என்னை நானே தொலைச்ச பின்ன...

No comments: