பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 23, 2011

தேவதை

உன்னைப் போல ஒரு பெண்
குழந்தை வேண்டுமென
ஆசையாய் பெற்ற
மகளிடம் மாட்டிக்கொண்டு
விழித்த கதை தெரியுமா உனக்கு...
அது நீ உன் தாயை
பார்க்கச் சென்ற ஞாயிறு
தூங்கி விழித்த பின்
அருகில் வந்து
தோள்களில் ஆடி
விளையாட அழைக்கிறாள்
மரமொன்றின் கீழ்....

பிஞ்சு குரல் ஒலிக்கிறது
அப்பா இதன் பெயரென்ன?
"மரம்" என்கிறேன் நான்
பிறகு ஏன்
எங்க மிஸ்"tree " என்கிறாள்?
அது ஆங்கிலம் என்றேன்...
இது என்ன?
ஒரு பூவை காட்டி
மலரென்றேன்
ஐயோ எங்க மிஸ் flower என்கிறாள்
அதுவும் ஆங்கிலத்தில் தான்
என்றேன்...
எல்லா மொழியிலும்
ஒரே பேரு தான இருக்கணும்
ஏன் வேற வேறயா இருக்கு? என்கிறாள்
சிறிது நேரம் மௌனமாகிறேன் நான்

மீண்டும் தொடர்கிறாள்
வேறு ஒன்றிலிருந்து
என்னை இங்கே பாப்பா
என்கிறீர்கள்
என் பள்ளியில் என்னை
பெரிய பெண் என்றே
அழைக்கிறார்கள் என்றாள்
நீ மற்றவர்களை விட
உயரமாக இருப்பதால்
என்றேன்...
அப்பா உங்களுக்கு
பூதமும்
பூச்சாண்டியும் தெரியுமா?
தெரியாது என்றேன்,
எங்க மிஸ்க்கு தெரியும்
படிக்கலான புடிச்சு குடுபாங்க...


அம்மா எப்ப வருவாங்க?
சாயந்திரம் என்றேன்
அது எப்போ வரும்?
சூரியன் மறையும் போது
சூரியன் ஏன் மறையுது?
அதுக்கு ஒய்வு வேணுமில்ல
அப்போ அதுக்கு வீடு இருக்கா?
உலகம் தான் அதனோட வீடு
வீட்டுகுள்ள எப்படி போகும்?
...........
.....
....
..

ஒய்ந்து உறங்கும் வேளையில்
புன் முறுவல் முகத்தில்!!
ஒரு வேளை தேவதைகள்
தேவதைகளின் கனவுகளில்
மட்டும் தான் வருவார்களோ?
எல்லாம் சரி....
இக் குட்டி தேவதையின்
கேள்விகளுக்கு
எப்படி பதில் சொல்கிறாய்
என் பெரிய தேவதையே!!
எனக்கென்னவோ
ஒரு குட்டி தேவதை
போதாதென்றே தோன்றுகிறது
எப்பொழுது வருவாய்?

1 comment:

Anonymous said...

Super.