பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 25, 2011

மறக்க துடிக்கும் நாளொன்று...


நெடு நாட்கள் கழித்து
புகையால் நிரம்புகிறது
நுரையீரல்
இப் புகையோடு சேர்த்து
உன் நினைவுகளையும்
வெளியேற்றி விட
முடியுமா என்ன?

எத்தனையோ மறக்க
நினைத்த கணங்களோடு
சில நாட்களும்
சேர்ந்து கொள்ள
நீள்கிறது காலம்...

நினைப்பதையெல்லாம்
சொல்லிவிட முடியாது
அது போல் தான்
எழுதி விடவும்
முடிவதில்லை என்னால்...

இதுவரை முற்றுப் புள்ளியில்
முடிந்து விடாத என்
கவிதைகளில்
இறுதி வார்த்தைக்கு பிறகு
நழுவி விழுகிறது
கண்ணீர்த் துளியொன்று...

அன்று யாருமற்ற
தனிமை பொழுதின் தொடக்கத்தில்
பூக்களோடு நான் காத்திருந்தது
உனக்கு வாழ்த்து
சொல்வதற்கென்று
நினைத்தாயா...

காலணிகள் எப்பொழுதும்
தெருவின் ஓரத்திலேயோ
வீட்டின் மூலையிலோ
அனாதையாய்
விடப் படுகின்றன
மனதின் ஓரமாய் நானும்...

உறவுகளும்
நண்பர்களும் வாழ்த்த
மீண்டும் மனம் நகரும்
அந்த காலம் தேடி
நான் இல்லாத அந்த
நாட்களை நோக்கி....


மறதி ஒரு வரம்
மறக்க வேண்டிய நிமிடங்கள்
மறக்க முடியா நிகழ்வுகளாய்
மாறி விடுவது
வேடிக்கை தான்...

நிஜங்களும்
நிழல்களும்
ஒன்றாக முடியாதென
உண்மை மெதுவாய் சிரிக்க
விடிகிறது
சிவந்த கண்களோடு
மறக்க துடிக்கும்
அதே நாளொன்று...

No comments: