பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 23, 2011

ஒற்றை காகமென


அன்புத் தோழியே
நலமா...
நாம் பேசிக் கொண்டிருக்கும்
இந்த நாட்களிலேயே
உன்னுடன் பேசாமல்
சில எண்ணங்களை
ஒளித்துவைக்கிறேன் நீ
வேதனை கொள்வாய் என...
மாற்றிக் கொண்ட
மின்னஞ்சல் கடவுச் சொற்களோடு
காணாமல் போயிருக்கும்
என் மீதான
உன் நம்பிக்கைகளும்...
பணியின் நெருக்கடிகளும்
உறவுகளின் கண்டிப்புமாய்
இனி பேச்சுக்கள்
குறுஞ் செய்திகளாகும்
நாட்களை எதிர் நோக்கி என் காலம்...
என்ன செய்வது என்று
எனை கேட்கும் கேள்விகளில்
மறைந்திருக்கிறது உன் தவிப்பு...
கொடுத்து விட்ட மனதிற்கு
காதலை பெற்றதன்
விலையாக பறி போகலாம்
நம் பெயர் சொல்லாத உறவு...
தினமும் என் அலைபேசியில்
ஒலிக்கும் உன் குரல்
நினைவில் படிந்து
நீங்க மறுக்கும் கனவெனப்
போய்விடுமா என்ன?
நடு இரவில் கரைந்து
செல்லும் ஒற்றை காகமென
அலைகிறேன் வெளியெங்கும்
நம்மைச் சுமந்து கொண்டு
நீ வரும் நாள் ஒன்றை எதிர் பார்த்து...
வரா விட்டால்
ஆறுதல் சொல்லி விடாதே
எனக்கு தெரிந்தே இருக்கிறது
என்னை நேசிக்கும்
எல்லோரும் தயாராய்
வைத்திருக்கிறார்கள்
பிரிந்து செல்வதற்கான
ஒரு காரணத்தையும்....

1 comment:

Guna Always with you said...

Crow's doesn't live as single, so don't say you as Crow