பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 30, 2012

அவளுக்கு கவிதை பிடிக்கும்

அவள் அவனை விடவும் அழகு
அவள் அவனுக்கு சமமாக படித்தவள்
அவள் அவனுக்கு மேலான வசதி படைத்தவள்
அவளுக்கு அவனைத் தான்
மணம் முடித்தார்கள்
கல்லூரி வாழ்க்கை முடிந்ததும்
அவர்களாகத் தான் கேட்டார்கள்
இவர்கள் சம்மதித்தார்கள் அவ்வளவு தான்
படித்தவன் என்றார்கள்
பண்பாளன் என்றார்கள்
கைநிறைய சம்பளம் என்றார்கள்
வீடு என்றார்கள்
கார் என்றார்கள்
இன்னும் எத்தனையோ...

அவளோ கவிதைகளின் ரசிகை
காவியங்களை நேசிப்பவள்
மனதை உருக்கி விடும் படங்களை
கண்ணீரோடு கடப்பவள்
நாஞ்சில் நாடனும், புதுமை பித்தனும்
பெரியாரின் சிநேகமுமாய் வாழ்ந்தவள்
தடம் புரண்ட பயணமென இன்று
மின்னஞ்சல் முகவரி தொடங்கி
முக நூல் நட்பு வரை அவனைக் கேட்டுத் தான்
இருக்கும் இருபதோ முப்பதோ
அவனின் சொந்தங்களும் கல்லூரி நட்புகளுமே
மாற்றுவதும் விலக்குவதும் அவன் விருப்பமாய் ...

அவன் குடிப்பதை யாரும் சொல்லவில்லை
அவனும் சொல்லவில்லை
முதலில் செல்லும் முன் அனுமதி வாங்கினான்
எப்பொழுதாவது ஒருமுறை என்று
பின்னர் குடிக்கும் முன் அனுமதி கேட்டான்
நண்பர்களின் வற்புறுத்தல் என்று
அதுவும் பின்னர் தகவல் சொல்வதாயிற்று
இப்பொழுதெல்லாம்
அவன் கேட்பதுமில்லை சொல்வதுமில்லை
வீடு திரும்பும் போது தான் தெரியும்...

முதலில் கோபம் கொள்வதாகவும்
பின்னர் திட்டுவதாகவும் தொடங்கி
இப்பொழுது எப்பொழுது அடி விழும்
என்பதாக நடுங்கிக் கிடக்கிறாள் அவள்
அவன் மிதப்பில் வருகையிலெல்லாம்
அவள் மரமாகி கிடக்க வேண்டும்
இல்லையெனில் படுக்க வேண்டும்
படித்தவன் என்றார்கள்
பண்பாளன் என்றார்கள்
யாருமே சொல்லவில்லை
அவளுக்கு கவிதை பிடிக்கும் என்றும்
அவனுக்கு குடிக்கப் பிடிக்கும் என்றும்...

No comments: