பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 15, 2012

எடுத்து வந்த கவிதை...

யாருக்கும் கிடைக்காத
கவிதையொன்று எனக்கு கிடைத்தது
யாருமற்ற தெருவில்
ஒரு மழைக் கால இரவொன்றில்
பதினொன்று என்று குறியிடப்பட்ட
புளிய மரத்திற்கு அருகில் கிடந்தது
அக் கவிதை மழையில் நனைந்திருந்தது
குளிர் அதனை நடுக்கி இருக்கக் கூடும்
அதன் எழுத்துகள் கோணலாகி இருந்தது
அருகில் வரையப்பட்டிருந்த
ஒரு வண்ணத்துப் பூச்சி
தன் சிறகுகளின் வர்ணத்தை இழந்திருந்தது
என் அறைக்கு கொண்டு வந்தேன்
சுவரில் ஒட்டி வைத்தேன்
தினமும் இரவில் உயிர்பெற்று அலைகிறது
இன்னும் படித்து விடாத அக்கவிதை
ஒரு சில முற்றுப் புள்ளிகளையும்
ஆச்சர்யக் குறிகளையும்
இறுதியாய் ஒரு கேள்விக் குறியோடும்
இருக்கக் கூடும் அக்கவிதை
இனியும் என்னால் உறக்கத்தை
தொலைத்து விட முடியாதென்று
அதே புளிய மரத்தை நோக்கிச் சென்றேன்
இடம் இருந்தது
மரம் இல்லை
நான் எதை எடுத்து வந்திருக்கிறேன் என்பதை
இப்போது உணர்ந்து கொண்டேன்...

No comments: