பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 2, 2012

ஆறுதல்...

எனக்குத் தெரியும்
உனக்கான ஆறுதலை
உனக்கான அன்பை
உனக்கான சில நொடிகளை
மட்டுமே எதிர்பார்க்கிறாயென
எத்தனையோ அழைப்புகள்
மௌனமாய் வேடிக்கை பார்க்கிறேன்
குறுஞ்செய்திகளை புறக்கணிக்கிறேன்
அன்பை வெளிப்படுத்தும்
சில வார்த்தைகளுக்காய்
கையேந்தி நிற்கிறாய்
நானோ கண்டும் காணாதவனாய்
நீ என்னை புறக்கணிக்கப் போவதில்லை
ஒரு நாள் ஓடிக் களைத்து
ஆசுவாசப் படுத்திக் கொள்ள
உன் மடி தேடுகையில்
நீ காத்திருக்கலாம்
இது நாள் வரை எங்கிருந்தாயென
கேள்விகளோடு மறுத்தும் விடலாம்
நீ என் உலகமடி
எங்கும் சுற்றினும்
உனக்குள் சுற்றுகிறேன்
எதை தேடினும்
உன்னை அடைகிறேன்
உனக்கான கவிதைகளை
என் விரல்கள் எழுதியபடியே
நீ பெரும் கடல்
மூழ்கடிப்பதும்
தக்கை கொடுத்து பயணம்
தொடர்வதும் உன் முடிவில்
தேவைப்படும் போது
கிடைக்காத ஆறுதலும்
எவ்வகையிலும் பயனில்லை
மழையிடமும் வெயிலிடமும்
ஆறுதல் தேடி
எந்த பூவும் வேண்டி நிற்பதில்லை
நான் மழை
நான் வெயில்
நான் நீ சொல்லும் அதே பைத்தியகாரன்
நான் என் இறுதி வரை
உன்னை நேசிக்கும் அதே நான்....

No comments: