பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2011

உன்னிலேயே முடியும்

இந்த இரவு வேளையின்
தனிமை பொழுதுகளில்
உறக்கம் தொலைத்து அலைகிறேன்
மீண்டும் ஒருமுறை
உன் குரல் கேட்கத்
துடிக்கும் ஆவலுடன்...
நீ என்னை வெறுத்தொதுக்கிய
நொடிகளில் உணர்கிறேன்
இதுவரை அறிந்திராத
வெறுமையின் நிறங்களை...
மித மிஞ்சிய
கனவுகளில் வாழ்ந்த
வாழ்வினை பலியிடுகிறேன்
கோபங்களின் வாசலில்...
வார்த்தைகளால் நேசிக்கத்
தொடங்கிய நம்மை
வார்த்தைகளே
பிரிக்கும் அவசரங்களில்...
அதிகமான நேசம்
அதிகமான எதிர்பார்ப்புகள்
சூழ்நிலை கைதிகளாய்
பொறுமை தொலைத்த
விட்டில் பூச்சிகளாய்
வேதனையின் வெளிச்சம் நோக்கி..
உணவே பிடிக்காமல்
கடந்து விட்ட இரு நாட்களில்
மனதை மட்டும்
நிறைத்துக் கொண்டிருக்கிறேன்
நினைவுகளின் பசிக்கு...
உன் நிழலின் எச்சங்ககளை
மட்டுமாவது விட்டு செல்
உயிருடன் இருக்கும்
என் நினைவுகளுக்கு துணையென...
ஒரே ஒருமுறை
விட்டுக் கொடுத்திருக்கலாம்
பெண்ணே
ஒருநாள் காத்திருப்பின்
துயரம் போக்க...
தொடங்கியவரே
முடிப்பது தான் நியதி
உனக்காக தொடங்கியது
உன்னிலேயே முடியும்...
அனைத்து சொந்தங்களுமாய்
ஆனவள் நீ
அதனால் தானோ என்னவோ
அனைத்தையும் எடுத்து
சென்று விட்டாய் உன்னுடன்...
இன்று துணையென
இருக்கும் நம் நேசத்தின்
நினைவுகளில்
இந்த ஒரு பிறவியில்
வாழ்ந்துவிட முடியும் என்னால்...

No comments: