பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Nov 13, 2011

சிறு துளிகள் - நான்கு


நீ அழும் போது
ஆறுதல் சொல்ல முதலில் வருபவர்
நீ நேசித்தவராக இருப்பதில்லை...
உன்னை நேசித்தவராகவே இருக்கிறார்கள்...

எனக்கும் உனக்குமிருந்த
அனைத்து வேற்றுமைகளும் காணாமல் போனது
காதலெனும் ஒற்றுமையால்...

எல்லோரிடமும் புதைந்திருக்கிறது
யாரிடமும் சொல்லப்படாத ஒரு உண்மை...

எல்லோரும் விடுமுறையில்
சுற்றுலா செல்வது போல
நான் உன் ஊருக்கு வருகிறேன்,
நீ வாழும் வீட்டை ரசிக்க...

ஏன் என்கிற
உன் ஒற்றை கேள்வியை
எதிர் கொள்ள இயலாமல்
நீ வரும் வழியில் பதுங்குகிறது
என் காதல்...

உன்னைப் பற்றிய கவிதைகளில்
ஏதாவது ஒரு எழுத்துப் பிழை
திருஷ்டிப் பொட்டென...

சில நேரங்களில்
தடம் புரண்டு விடுவது
ரயில் மட்டுமல்ல,
வாழ்வும்...

கடைசியாய் நான்
உன்னிடம் பேசிக் கொண்டிருந்த போது
சொல்லாமல் விட்டது
உன்னை நேசிப்பதை மட்டும் தான்...

நீ செல்லும் வரை
நீ தான் என் உலகம்,
நீ சென்ற பின்பு
என் உலகெங்கும் நீ...

நீ தூக்கி எறிந்து விட்டுப் போன பின்னரும்
நம் நேசத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு
அழுகிறது மனசு...

இரவு தொடங்கியதும்
கனிகள் தேடும்
வௌவாலெனப் பறக்கிறது
நினைவுகள் உன்னைத் தேடி...

ஒரே ஒரு முறை
தோளில் சாய்ந்து
சிந்திச் சென்ற கண்ணீர் துளிகள்
இன்னும் சுடுகிறது என்னில்...

என் முகம் பார்த்த பின்
நீ உறங்கச் செல்வதும்,
உன் முகம் பார்த்த பின்
நான் உறக்கம் கலைவதும்...
வடிவங்களற்ற கவிதை மொழி...

உனக்கென்ன பேசாமல் சென்று விட்டாய்,
இன்னும் உன் பின்னால்
அலைந்து கொண்டிருக்கிறது இதயம்
உன் சொற்களை பிடித்து என்னிடம் சேர்க்க ...

நீ கவனிக்கும்
ஒவ்வொரு நொடியும்
எத்தனை பறவைகள் பறக்கின்றன
மனதினுள்...

பெற்றோரை இழந்து
தவிக்கும் சிறுவனாய்,
உன் மொழியின்றி தவிக்கிறது
எனது கவிதையொன்று...

உன் குரல் கேட்கா நாளில்
எதோ ஒன்றை இழந்து விட்டதாய் உணர்கிறேன்...

தெருவெங்கும் புழுதி காற்று கண் நிறைக்க
நினைத்துப் பார்க்கிறேன்
என் கண்ணில் விழும்
ஒரு தூசுக்கென
நீ பதறிய நிமிடங்களை...

என் வாசல் கொடியில் காயும்
உன் சுடிதார் பூக்களோடு
பேசிக் கொண்டிருக்கிறது
ஒரு வண்ணத்துப் பூச்சி...

என்னை சலனப் படுத்துவதில்
உனக்கும் மழைக்கும் அப்படி என்ன போட்டி...?

உன்னிடம் கோபம் கொள்ளாமல்
யாரிடம் கோபம் கொள்ள...?
சரி வா!
சமாதானம் பேசலாம்
சண்டை போட்டுக் கொண்டே...

No comments: