பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 7, 2011

மரணமொன்று


மரணங்கள் புதிரானவை....
சில நண்பர்களின்...
முகம் மட்டுமே தெரிந்த சிலரின்...
முகம் கூட தெரியா பலரின்....
நினைவிலிருந்து கொண்டே
இருக்கிறார்கள்!!!
மருத்துவ மனையில்
இறுதி நாளில்
என்னோடு பேச ஆசைப் பட்ட
நண்பன் என்ன சொல்ல நினைத்திருப்பான்
விபத்தொன்றில்
எல்லோரையும் காப்பற்றி
வாகனத்தை ஓட்டிச் சென்றவன்
மட்டும் இறந்து போனானே ஒருவன்
அரளி விதையை அரைத்துக் குடித்த
பக்கத்து வீட்டுப் பெண்ணும்
புடவையில் குழந்தையை
கட்டிக் கொண்டு
ஊர்க் கிணற்றில் விழுந்து மிதந்த
ஒருத்தியும்
ஏன் இன்னும் நினைவை விட்டு
போகவே இல்லை
வீட்டுக் கூரையில்
தொங்கிய அண்ணனும்
கோவிலுக்கு சென்று
உடலாய் திரும்பிய அடுத்த தெருக்காரரும்
துணியில் சுற்றப்பட்டு
மருத்துவ மனையில்
கொடுக்கப் பட்ட பச்சை குழந்தையும்
இங்கே அனைவருக்குமே
மரணம் ஒன்று தானோ?
இவர்கள் மட்டும் ஏன் நினைவிலேயே
எத்தனையோ
இறந்தவர்களின் அடக்கத்தில்
நான் இருந்திருந்தும்
இவர்கள் மட்டும் இன்னமும்...
அகால மரணங்கள்
மனதை விட்டு
எளிதில் விலகுவதில்லை தான்
கும்பகோணமும்
சுனாமியும் சுமக்க முடியா
வலிகளாய்...
ஒரு மரணத்திற்கு
செல்வதை விட
மரணத்தை எதிர் நோக்கியிருக்கும்
ஒருவரை
காணச் செல்வது
கொடுமையானது...
மௌனமாய் அமர்ந்து
வார்த்தைகளின்றி
கண்களில் நீர் வழியும் நிலை
கொடூரம் தான்...
....
........
...........
எல்லாம் போகட்டும்......
உடலால் புதைந்து போனவர்களை விட
வெறும் உடலை சுமந்து
கொண்டு
புதைக்கப் பட்ட மனதினை
கொண்டிருப்பவர்களுக்காக
விழித்துக் கொண்டிருக்கிறது
என் மரணம்....

No comments: