இங்கு திருமணங்கள்
எல்லாம் சொர்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன...
எல்லோருக்குமே வாய்ப்பதில்லை
ஆசைப் படும் வாழ்வு...
கவிதையாய்
கனவுகளாய்
ஒவ்வொரு விதைகளாய் நடப்பட்டு
ஒரு அழகிய மலர்ச் சோலை
என
அனைவரினுள்ளும் ஒரு
வாழ்க்கையின் தேடல்...
இளமைக் கனவுகள்
யதார்த்த வாழ்வில்
வெறும் கதைகளிலே மட்டுமே
சாத்தியமாகிறது ...
கவிதைகளும்
கனவுகளும்
கற்பனை கோட்டைகளும்
கலைந்து போக
படிப்பும்
பதவியும்
பண வசதியும்
எழில் தோற்றமும்
தீர்மானிக்கும் பெரும்பாலும்
நிகழ் காலத்தை....
மனதின் தேவைகளை விட
ஒப்பந்த சித்தாந்தங்களே
மணமேடையில்
அமர்கின்றன...
காலம் கரையும்
கட்டுப் பாடுகளோடு....
தெரிந்து கொள்ளும் ஆர்வங்கள்
ஆசைகளென மிளிர
ஆசைகள் விருப்பகளாய்
விருப்பங்கள் தேவைகளாய்
தேவைகள் பழக்கமென
மாறிப் போய்
பழக்கங்களின் அடிமைகளாய்
நாம்....
பாடவும்
ஆடவும்
விளையாடிக் கொண்டும்
இருந்த பெண்கள்
மஞ்சள் கயிறில்
கட்டுண்டு...
பொருளாதார தேவையும்
போட்டி உலகமுமாய்
வியாபார சிந்தனைகளோடு
சிக்குண்ட மூளையுமாய்...
தனித் தனியான
உலகங்கள் ஒரே
வீட்டில் மட்டுமல்ல
ஒரே படுக்கையறையிலும்...
கனவுகளை தொலைத்த
ஒருவனின் இரவுகள்
மதுவின் மயக்கத்தில்
விரிகின்றது
கானல் நீரென...
அனைத்தும் புதைத்த
பெண்களுக்கு
அடுப்படியும்
குழந்தைகளும்
ஆறுதலாய்...
சொந்தங்கள்
உறவுகள்
சமூக சம்பிரதாயங்கள்
தேவைகளின் தூண்டல்கள்
மட்டுமே இன்னமும்
பேச வைத்துக் கொண்டிருக்கிறது
நல்லதொரு குடும்பமென்று...
அன்றாட மன்னிப்புகளிலேயே
தினமும் படுக்கைகள்
விரிக்கப்படுகின்றன...
தெரிந்தே இருந்தாலும்
விதிவிலக்காய்
விட்டு விடுவதில்லை
எந்த பெண்ணையும் ஆணையும்
மீண்டும் ஒரு முறை
அதே கணக்குகள்
அதே இரவுகள்
அதே மன்னிப்புகள்
வேறு வேறான உலகங்கள்...
காதலாகவே
வாழும் சிலரை
விட்டு விடலாம்
அவர்கள்
நிச்சயம் யதார்த்தமென
சொல்லும் வாழ்வை
மறந்தே இருக்கட்டும்...
எனக்கும் சொல்கிறாய்
நீ
உனக்கென ஒருத்தி
வேண்டுமென்று...
கானல் நீரில்
நான் தேடுவது
கவிதைகளை மட்டும் தான்
பசிக்கான மீன்களையோ
உடல் வருடும் விரல்களையோ அல்ல...
ஆகவே
இங்கு
இன்னுமும்
ஒளித்து வைத்து
யாருக்கும் தெரியாமல்
சிந்தும் பலரின் கண்ணீர்த்
துளிகளில்
மீதமிருக்கிறது
நிறைவேறா கனவொன்று...
No comments:
Post a Comment