பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Aug 1, 2011
" இங்கே சில கனவுகள் உறங்குகின்றன"
அன்பு தேவதையே,
நான் இதுவரை உனக்கு கடிதங்கள் எழுதியதில்லை... எழுதிய கடிதங்கள் முழுமையற்று போனது... ஆனால் இன்று இந்த சூழலில் உனக்கு எழுத வேண்டி வரும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை...உண்மையில் கடிதம் என்பது தூரங்களின் வடிவம்... உனக்கும் எனக்கும் அப்படியொன்றும் அதிக தூரமில்லை...இன்னொன்று கடிதங்கள் உணர்வுகளின் வெளிப்பாடே அன்றி வேறொன்றுமில்லை...
உன்னை காதலிக்க துவங்கிய அந்த நொடிகள் தான் எத்தனை அழகானவை, அற்புதமானவை... என் மனதில் சிறு சிறு கனவின் விதைகளை நீ நட்டுச் சென்ற அந்த ஆழமான பொழுதுகள்... இன்று அந்த கனவுகள் மலராய் பூத்துக் குலுங்கும் நேரத்தில் நீ அருகில் இல்லை... மனதில் மலர்ந்த மலர்களை ரசிக்கவும் இயலாமல், களையென பிடுங்கி எறியவும் முடியாமல் என் கண்ணீர்த்துளிகளை அவற்றின் வேர்களில் பாய்ச்சுகிறேன்....
நீயும் நானும் கொண்ட நேசம் ரம்மியமானது... அதிகாலை பொழுதைப்போல, முழு நிலவின் பிரகாசத்தைப் போல, கைதேர்ந்த ஒரு ஓவியரின் விலை மதிக்க முடியா படைப்பைப் போல, வசீகரிக்கும் ஒரு கவிதையைப் போல, மெல்லிய மழையின் தீன்டலைப் போல, சிறு குழந்தையின் முத்தத்தைப் போல எத்தனை இயல்பாய் நீ எனக்குள் நிறைந்திருக்கிறாய்....
என் காதலை எப்படி நிரூபிக்கப் போகிறேன், நியாயத் தராசினைக் கொண்டு எடை போடா முடியுமா என்ன? வாமனனைப் போல் அடிகள அளந்து என் தலை மீது வைக்கவோ? அனுமன் போல நெஞ்சு கிழித்து உன் முகம் காட்டவோ முடியுமா என்னால்?... ஆர்ப்பரிக்கும் மழையைப் போல் புவியை நிறைத்து, அருவிஎனப் பெருகி எப்படிச் சொல்லப் போகிறேன். நதியைப் போல் நீளுமோ, கடலைப் போல் ஆழமாகவோ... என் கவிதைகளில் கிறுக்கிக் கொண்டா? பின் அடையாளம் எதுவென்பாய்? இதோ என் உறக்கம் தொலைத்த விழிகளும், தத்தளிக்கும் கனவுகளும், வார்த்தைகள் அற்றுக் கிடக்கும் கவிதைகளும், காரணமின்றி கண் நிறைக்கும் நீரும்.... இவை இன்றி வேறென்ன சொல்லிவிட முடியும் நம் நேசத்தைப் பற்றி...
என் சின்னஞ் சிறிய உலகின் தேவதை நீ... என் கவிதைகளின் இளவரசி நீ... என் ஆசைகளின் முதற்ப் புள்ளி, என் எழுத்துக்களின் பொருட்ச் சொல். ஒரு ஜன்னலின் கதவுகளை திறந்து உலகின் பரந்த வெளிகளுக்கு என்னை அழைத்துச் சென்றவள் நீ... ஒவ்வொரு நொடியும் வாழும் கலையினைக் கற்றுக் கொடுத்தவள் நீ... மரணித்துக் கொண்டிருந்த மனதொன்றை அன்பெனும் மருந்திட்டு காப்பறியவள் நீ.. என் தாயின் மறு பிரதி நீ... என் சேயின் கருப்பொருள் நீ... என் காலங்களில் வசந்தமாய், கோடை யாய், குளிராய் என அனைத்து மாற்றமும் நீ...
முடவன் ஒருவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட கதையாய் உன் மீதான என் காதல். காதலுக்கு எதிர்ப்புகள் இருக்கும் பலவகைகளில்.. இன்று என் மித மிஞ்சிய காதலே எதிர்ப்பாய் மாறிப் போனது... என் காதல் எனக்குத் தெரியாமலே உன்னைச் சுற்றி வலைகள் விரித்த போது நீ கதறினாய்... உன் கால்கள் அதில் சிக்குண்ட போது வலைகள் உன்னை நெருக்கியதே தவிர, என் வலைகளை நீக்கி விட முடியவில்லை என்னால்... இறுதியில் ஒரு நாள் நீ எனக்குத் தெரிந்தே வலைகளை அறுத்த பொழுது, நடுங்கும் கைகளுடன் உன்னிடம் மண்டியிட்டேன், தவித்துப் போன மனதுடன்....
அதீத காதலின் வலிகளை அடைந்தவள் நீ, கொடுத்தவன் நான்... உன் கதறல்கள் என்னை சேராதபடி தடுத்துக் கொண்டிருந்தது என் அதிகக் காதலின் ராகங்கள்.... இறுதியில் என்னை விட்டு செல்லும் ஒரு நாளில், நான் என் உயிருடன் சண்டையிட்டு சாவின் பாதையில் நடக்கத் துவங்கினேன்.ஒரு மிகப் பெரிய முகக் கண்ணாடியினை வைத்து போரிடு என்பது போல இருக்கிறது... இங்கே என் எதிரில் நிற்பவை என் கனவுகளும், ஆசைகளும், வாழ்விற்கான என் கற்பனைகளுமே... என் கூரிய கவிதைகளால் நான் அவற்றை வெட்டி வீழ்த்தும் பொழுது நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் குருதியின் சுவடுகள் என் ரணங்களிலிருந்து.... என்றுமே வென்றுவிட முடியாத எதிரிகளுடன் போரிட்டு வீழும் பொழுது ஒருவேளை அக்கண்ணாடி அகற்றப் படலாம்....
சிந்தனை தடை பட்ட, உணர்வுகள் எரியூட்டப்பட்ட ஒரு உலகத்தில் இனி நான் கழிக்கப் போகும் ஒவ்வொரு நொடிகளும் கொடிய விரல்களென மாறி என் குரல்வளை நசுக்கும்.... தாகத்திற்கென நான் மழையை எதிர் நோக்கி கிடக்கும் வேளைகளில் சூரியனின் கதிர்கள் என்னைப் பொசுக்கிக் கொண்டிருக்கும்... இந்த உலகம் என்றுமே காதலுக்கானது, காதலர்களுக்கான ஒன்று அல்ல என்பதை என் வறண்ட குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...
என் கவிதை வாழ்வின் இறுதி அத்தியாங்கள் உனக்கானவை.. எனவே இனி அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை... எனக்குள் இருக்கும் உன்னால், உனக்காக பரிசென வைத்திருக்கப் போவது அவற்றை மட்டுமே.... என் இதயத்தின் கடைசி துடிப்பு, மூச்சுக் காற்றின் இறுதித் துளிக் காற்று, கண் நிறைக்கும் கனவுகள் என அனைத்துமே உனக்கானவை.... நான் மரித்துவிடும், மண் மூடும் நொடியொன்றில் கலங்கி விடாதே, ஆறுதல் சொல்ல அங்கே நான் இருக்கப் போவதில்லை....
நேசம் என்பது புனிதமானது மட்டுமில்லை, புதிரானடும் தான்.... யார் மீது யாருக்கும், காரணங்களே இன்றியும்... மிக மிக வேகமாய் காதலின் படிகளில் ஏறிய எனக்கு, இறங்கத் தெரியாத இன்று குதித்து உயிர் விட மட்டுமே தெரிகிறது... இனி என் கல்லறையில் எழுத ஒரு வாசகமும் உண்டு..." இங்கே சில கனவுகள் உறங்குகின்றன"
இறுதியாய் ஒன்று, நான் தவறுகள் செய்தவன்... மன்னித்துவிடாதே... தண்டித்து விடு... மன்னிப்பைக் கோரும் அளவிற்கு நான் எந்த நொடியிலும் வாழ்ந்து விடவில்லை... இனி என் நினைவுகளில் நீ விட்டுச் சென்ற வானமும், நட்டுச் சென்ற மலர்களின் சுகந்தமும், உனக்கே உனக்கான கவிதைகளுமாய்.... என் இறுதிப் பயணத்தை நோக்கி....
"காதலுக்காக
எதை வேண்டுமானாலும்
விட்டுக் கொடுக்கலாம்
காதலையும் கூட...."
என்றும் நினைவுகளுடன்..
மழை....
லேபிள்கள்:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment