பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 27, 2013

வர்ணங்கள் அழகானவை

வண்ணங்களைச் சுமந்து
அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தன
அவ்வண்ணத்துப் பூச்சிகள்
பனித் துளிகளில் கரையாத
மழைக் காலத்தில் சாயமிழக்கா
அவ்வர்ணங்கள் அழகானவை
பறக்கும் பூக்கள் அவை
மிதக்கும் பூக்கள் அவை
சிறகடிக்கும் பூக்கள் அவை
தும்பை செடி தேடி தன் உறிஞ்சு குழல்களால்
தேனெடுக்கும் அழகில்
காலம் மறந்திருக்கிறேன்
அதே தும்பைச் செடிகளால்
துரத்திச் சென்று அமிழ்த்திப் பிடித்திருக்கிறேன்
இறகுகளைக் கையில் பற்றி
துடிப்பதை ரசித்திருக்கிறேன்
மீண்டும் பறக்க விடுகிறேன்
மீண்டும் பிடிக்கிறேன்
அடையாளமென
விரல்களில் தங்கியிருக்கிறது
கருப்பும் சிவப்புமாய் அதன் வர்ணங்கள்
பனித் துளி கரைக்காததை
மழைத் துளியில் சாயமிழக்காததை
எப்பொழுதும்
மனித விரல்கள் சாத்தியப்படுத்துகின்றன
தன் குரூரங்களால்...

No comments: