பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 29, 2012

உன்னோடு ஒருநாள் - ஒன்று

இன்று ஞாயிற்றுக் கிழமை, இருவருக்குமே விடுமுறை தினம். மணி ஏழு. நேற்றிரவு பார்த்த திகில் படமொன்றால் கட்டியனைத்த படி தூங்கிப் போயிருந்த நீ, எனக்கு முன் விழித்திருந்தாய். மெல்ல காதோரமாய் வந்து இன்னிக்கு மாட்டிகிட்ட டா என்கிறாய். எனக்குள் கொஞ்சம் பயமும் கொஞ்சம் சந்தோசமுமாய் கலந்து படுக்கையிலிருந்து எழுந்து விடலாமா வேண்டாமா என்றபடி உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன். போர்வை விலக்கி தலையணையாய் என்னை மாற்றிக் குறுக்கே படுத்துக் கொள்கிறாய். நான் எழுந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் நீ இப்படி செய்வது உன் வழக்கம்.

எழுந்து குளியலறைக்குள் சென்று வருகிறேன், அதற்குள் சூடான தேநீர் வைத்திருக்கிறாய். ஞாபகம் வச்சுக்கோடா இன்னிக்கு நான் தான் என்கிறாய் சிரித்தபடி, வேறு வழியின்றி நானும் புன்னகைக்க, நேரம் கடக்கத் தொடங்குகிறது. அடச் சே இன்னிக்கு எந்த புதிய படமும் வெளிவர வில்லை. போன வாரம் போல் உன்னிடம் தப்பிகக் இயலாது. வகையாய் மாட்டிக் கொண்டேன்.சரி சரி என் படி காலை சமையலுக்குள் நுழைகிறேன். எப்பொழுதும் விடுமுறை தினமென்றால் நளபாகம் எனக்கானது. உனக்குப் பிடித்த சிலவற்றை எனக்கு சமைக்கத் தெரியும் என்பதால் நீயும் சமாளித்துக் கொள்கிறாய் அடிக்கடி குறிப்புகள் கொடுப்பதோடு சரி.

காலை உணவு முடிந்தது, அடுத்ததாய் காத்திருக்கும் ஒரு வார துணிகளைப் பொறுக்கி எடுத்த படி மொட்டைமாடிக்கு செல்கிறோம். பக்கத்து வீட்டு அக்கா உன்னைப் பார்த்து புன்னகைக்க என்னை தள்ளியபடி முதலில் ஓடுகிறாய். இந்த வாரம் துவைப்பது நீ, அலசுவது நான். அடுத்த ஒரு மணி நேரம் கழிகிறது. வீட்டுக்குள் வந்ததும் கணினியை ஆன் செய்ய விழைகையில், குறுக்கே வந்து தடா என்கிறாய். வேறு வழிகளில்லை. உன்னுடைய ஸ்கூட்டியில் காய்கறி வாங்க அடுத்த பயணம். அடுத்து மதிய சமையல். உணவு, மதிய நேர தூக்கம் என நேரம் கடந்து விட மாலையாகிறது.

வாங்க சார் என எழுப்பி அழைத்துச் செல்கிறாய். இனி தப்பிக்க வழிகளே இல்லை. உன் நெடு நாள் ஆசை. ம்ம் நடக்கட்டுமென அமைதியாய் அமர மெல்ல டிரிம்மரை எடுத்து என் ஆறு நாள் தடியை செதுக்கத் துவங்குகிறாய். எல்லாம் முடிகையில் மீசையை சரி செய்வேன் என அடம் பிடித்து, நான் உன் கையை பிடிக்க, நீ திமிறி அழுத்த பாதி மீசை காணமல் போயிருக்கிறது. போடி என அடிக்க துரத்த, ஓடிச் சென்று ஒளிகிறாய். சிரித்தபடி முழு மீசையை எடுத்து விட்டு வருகிறேன், என்னையே எனக்கு புதிதாகப் பார்ப்பது போல் தெரிகிறது. இது வரை ஒரு நாள் கூட மீசை இல்லாமல் இருந்ததில்லை நான். நாளை அலுவலகத்தில் வரும் கேள்விகளை சிந்திக்கத் தொடங்கியிருந்தேன்.

அதன் பிறகு மீண்டும் தேநீர், சிறிது தொலைக்காட்சி என கழிய, இரவு உணவுக்குப் பின்னதான வேளையில் படுக்கையில் நான்.அருகே வந்து அமர்ந்து கொண்டு மன்னிசுடு டா என்கிறாய். இப்படி உன்னைப் பார்க்க எனக்கே பிடிக்கல, இனிமே இந்த மாதிரி விளையாட மாட்டேன் என்ற படி அருகில் சாய்ந்தாய். உன்னை இழுத்து அணைத்தபடி, விடுடா புஜ்ஜிமா, என் ஆபிஸ்ல பக்கத்து சீட் பொண்ணு ஒன்னு என்னை மீசை இல்லாம பார்த்தா நல்லா இருக்கும்னு அடிக்கடி சொல்லிட்டு இருந்துச்சு, காலைல அந்த பொண்ணுகிட்ட கேட்டுட்டு சொல்றேன் என்றேன் சிரிப்பை மறைத்தபடி . அருகிலிருந்த தலையணையை கையிலெடுத்தாய். மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறி சில நொடிகளில் இலவம் பஞ்சையும் சேர்த்துக் கொண்டு சுழலத் தொடங்கியது. இருவருக்குமான தலையணை யுத்தம் தொடங்கியது பிறகு முடிந்தது.

காலையில் பக்கத்து வீட்டுக்கார அக்கா கேட்கும் போது உன் உதட்டின் காயத்துக்கு காரணத்தை சொல்லிவிடு என்றபடி கிளம்பினேன், அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கு இன்னும் ஆறு நாள் இருப்பதை சபித்தபடி...

"உன்னோடு கழிக்கும்
ஒவ்வொரு நாளையும்
திருவிழாவாக்கி விடுகிறாய்
உன் காதலால்..."

No comments: