பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 29, 2012

அம்மாவுக்காக

இன்றும் கூட மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரவு வேளைகளில் லாந்தர் விளக்கை ஏற்றி வைக்கிறாள் அம்மா, தனது நாற்பது வருட காலத்தை மின்சாரமின்றிக் கடந்தவள், நான் படிக்கும் நாட்களில் ஏறக்குறைய என் கல்லூரி காலம் முடியும் வரை என் வீட்டில் மின் இணைப்பு இல்லை. சிவப்பு வண்ணமடித்த விளக்கை மாலை ஆறு மணிக்கு ஏற்றி வைத்து படிக்கச் சொல்லுவாள். அப்பா எப்பொழுதோ காலி செய்த குவாட்டர் பாட்டிலில் துண்டுத் துணியால் திரி செய்து அதை விளக்காக்கி அதன் வெளிச்சத்தில் சமைக்கத் துவங்கும் அம்மா, அன்று காட்டு வேலையின் இடை நேரத்தில் பறித்த கீரைகளை மண்சட்டியில் வேகவைத்து சோற்றோடு பிசைந்து எனக்கு கொடுத்த அந்த நாட்களை எப்படி மறக்க...

முதலில் எழுத்து வேலைகளை முடித்து விட்டு நான் படிக்கத் தொடங்கும் போது பதினோரு மணி ஆகிவிடும். அதன் பிறகும் அம்மா படுக்கையில் அமைதியாக விழித்திருப்பாள். நான் உறங்கப் போகும் நேரத்தை கணக்கிட்ட படி. காலை ஆறு மணிக்கு என் தந்தை என்னை எழுப்பும் போது சரியாக நான் உறங்க சென்ற நேரத்தை சொல்லி "பாவம் விட்ட்ருங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்" என்று சொல்லியதை அரைகுறை தூக்கத்தில் கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தெரியாது அம்மாவுக்கு எப்படி இது தெரியும் என்று, ஏனென்றால் என் வீட்டில் அப்பொழுது சுவர் கடிகாரம் கூட இல்லை. பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் புகைவண்டி ஓசை, தொழிற்சாலை மணியோசை என அவளின் நேரம் கணக்கிடும் முறை நானறியா ஒன்று.

தினமும் எட்டு ரூபாய்க்கு கூலி வேலை செய்து தினமும் அரிசி வாங்கி, டீ தூள் சர்க்கரை வாங்கி என்னை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்தவள் அம்மா.இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது, கடைக்கு செல்வதெனில் என்னை மட்டுமே அனுப்புவாள், காரணம் அதில் மீதமாக பெரும்பாலும் ஐந்து அல்லது பத்து பைசா கிடைக்கும். எதாவது தின்பண்டம் வாங்கிக் கொள்ள எனக்கு அனுமதியும் கிடைக்கும். எல்லோரும் மிதிவண்டி ஒட்டிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு கிடைத்த டயர் வண்டியோடு சுற்றிக் கொண்டிருப்பேன். வாடகை சைக்கிள் மணிக்கு ஒரு ரூபாய். ஞாயிறு விடுமுறை நாளில் நிச்சயம் எனக்கு அந்த வாய்ப்பு உண்டு. எனக்கு அரை மணி நேரம், அக்காவுக்கு அரை மணி நேரம் என காலத்தையே பகிர்ந்த தருணம் அது.

அன்றிலிருந்து இன்றுவரை என்ன படிக்கிறேன் என கேட்டதே இல்லை. சிறுவர்மலர், பாலமித்ரா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என கிடைக்கும் எல்லாவற்றையும் ஓசியில் படித்து விடுவேன். குட்டி கபீசும், இரும்புக் கை மாயாவியும் இன்னும் நினைவில் இருக்க எதை வேண்டுமானாலும் படிக்கட்டும் என்று அம்மா எனக்கு கொடுத்த அதிக சுதந்திரம் இருந்தது. பத்தாம் வகுப்பு படித்து முடித்த வேளை, லாரி ஒர்க்சாப்பில் எனக்கு வேலை. ஒரு மாதம் முடிகையில் ஓரளவு மதிப்பெண்களுடன் தேறி இருந்தேன். பாலிடெக்னிக்கில் இடம் கிடைத்தது. அனைத்தும் இலவசம் என்றும், ஆண்டுக்கு புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களுக்காக 4000 ரூபாய் கட்ட சொன்ன போது யாருமே அன்றைய இரவில் தூங்கவில்லை.

இடையில் அக்கா படிப்பை நிறுத்தி விட்டு நூல் மில்லில் வேலைக்கு சேர்ந்ததும், அப்பாவின் வருமானம் கணிசமாக குறைந்ததும், அம்மா தன்னால் முடிந்தவரை குடும்ப பாரம் சுமந்ததுமாய் ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. லாரி ஒர்க்சாப்பில் வாழ்க்கை நிரந்தரப் படும் என்று நினைத்த வேளையில், பக்கத்து வீட்டு ஓரளவு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இருவர் எனக்கான பணத்தை அதிகாலை அம்மாவிடம் கொடுக்க, அம்மா அழுது நான் பார்த்த முதல் நாள். அது வரை எதைப் பற்றியும் கவலைப் படாத, எந்த துயரத்தையும் தாங்கிக் கொள்ளும் இரும்பு மனுசி அவள் என்றே நினைத்திருந்தேன்.

படித்து முடித்து இன்று சம்பாதிக்கும் பொழுது தெரிகிறது அன்றைய ஒரு ருபாய் எத்தனை மதிப்புடையது என்று. அம்மாவிடம் கொடுக்கும் பணத்திற்கு எந்தக் கணக்கையும் இதுவரை கேட்டதில்லை நான், அது போல் என்னிடமும் அம்மா எவ்வளவு சம்பளம் என்று கேட்டதே இல்லை. ஒருமுறை உறவினரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னதைக் கேட்டேன் "அவன் வயசில் அவனுக்கு எதுவும் வாங்கி தர முடியல, இப்போ அவனா எதை வாங்கினாலும் நான் கேட்க மாட்டேன்". அம்மா இது வரை என்னை ஒரு பணம் சம்பாதிக்கும் ஒருவனாக பார்த்ததே இல்லை. உனக்கு சரியானதை செய் என்பார், எனக்கு பிடிக்காத இடத்லிருந்து திடீரென வேலையை விட்டுப் போகும் போதும் என்னிடம் எதுவும் கேட்காமல் சிரித்தபடி சோறு போட்ட அம்மா என்றுமே தேவதை தான்.

இன்றும் ஏன் லாந்தர் விளக்கு எரிகிறது எனக் கேட்டேன் ஒரு நாள். அது என்னமோ தெரியல "எனக்கு அந்த வெளிச்சம் இருந்துட்டே இருக்கணும் போல இருக்கு குமாரு" என்று சொல்லும் போது அவள் கண்களில் எதோ ஒரு வலி இருந்தது. அது எனக்கானதாகவும் இருக்கலாம். இன்னமும் இரவு வேளைகளில் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது லாந்தர் விளக்கு அம்மாவுக்காக....

No comments: