பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 31, 2012

ஒரு தேநீர் சந்திப்பில்...

ஒரு தேநீர் பருகிய
மாலை நேரம் நினைவிருக்கிறதா?
மெல்லிசை பரவிய
தருணத்தின்
ஆவி பறந்த கோப்பைகள்
நினைவிலிருக்கிறது
பிரிந்து விடலாமா
முதல் வார்த்தையை
நீ ஒலித்தாய்
இயலாதென்பதை
நான் ஒளித்தேன்
தோற்றப் பிழையோ
காட்சிப் பிழையோ
ஏதுமின்றி முடிந்து போனது
அந்நாள்
நினைவில் பிழைகள் ஏதுமின்றி
எப்பொழுதும் இருவருமாய்
செல்வதும்
திரும்புவதுமே வழக்கம்
நீ மட்டும் முதலில்
திரும்பிய நாள் அன்று
நான் மட்டும் தனித்து
தவித்துக் கிடந்த நாள் அன்று
இதே போன்றொரு
காலை வேளை
தேநீர் சந்திப்பில் தான்
சொன்னாய்
என் கவிதைகளை நேசிப்பதாக
இன்றும் அப்படித் தான்
எப்பொழுதுமே
உன் கவிதைகளை
நேசிக்கிறேன் என்பதாய்
சொல்லிச் செல்கிறாய்
இடையில் வந்தவனும்
பிரிந்தவனுமாய் நிற்கிறேன்
சுற்றிலும் பரவிக் கிடக்கிறது
நீ வாசித்த
கவிதைகளின் வாசமும்
உன் சுவாசமும்...

No comments: