பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 24, 2012

தேவதையின் பொழுதுகள்...


எப்பொழுதும் ஏதாவது ஒரு
கதைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்
தன் பொம்மையிடம்
உயிரற்ற பொருள்களையெல்லாம்
உயிர் கொடுத்து நடமாடச் செய்யும்
வித்தை கற்றவள் அவள் மட்டுமே

ஒரு விடுமுறை நாளில்
தன் சிறிய தோழியின்
உடை அலசி
குளிக்க வெந்நீர் வைக்கிறாள்
கதிரவின் வெப்பத்தில்
குளிருக்கு கம்பளி போர்த்துகிறாள்
அரவணைப்பில் மயங்க வைக்கிறாள்
உடல் நிலை சரியில்லையென
மருத்துவமனை கூட்டிச் செல்கிறாள்

தன் பசி மறந்து
வேளை தவறாமல் உணவூட்டுகிறாள்
நிலவை காட்டுகிறாள்
பூக்களை பறித்துச் சூட்டுகிறாள்
அவள் அன்னையாகிறாள்
தோழியாகிறாள்
கல்விக் கூடம் அழைத்துச் செல்கிறாள்
மாலை வேளைகளில்
விளையாட்டுப் பொருளாகி
வேடிக்கை காட்டுகிறாள்

இரவில் கதை சொல்கிறாள்
அதில் பறவைகளை
விலங்குகளை
ஒரு ராஜ குமாரியை
தனது பாட்டியை எல்லோரையும்
கதாப்பாத்திரமாக்குகிறாள்
பிறகு தூங்க வைக்க
தாலாட்டுகிறாள்
பிறகு தான் தேவைப் படுகிறது
அவளுக்கான அரவணைப்பும்
தாலாட்டும்....

1 comment:

திருமதி ஜெயசீலன் said...

ஸூப்பர்.
நீங்கள் கவிதை புத்தகம் வெளியிட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் முயற்சிகலாம்