பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 20, 2012

எழுதப் படாக் கனவு....


எழுதிவிடாக் கவிதையொன்று
தவித்து வெளியெங்கும் அலைகிறது
எனைச் சுற்றும் தனிமைப் பொழுதுகளில்
ஒரு பெரு மழையென பொழிய
ஒயாது அலைகளின் சீற்றமென
பசித்த வேங்கையொன்றின் விழியென
தவமிருக்கிறது என்னை குறியாக்கி...

உன் வீட்டு சமையலறை குழாயில்
சொட்டிக் கொண்டிருந்த நீரில் அதன்
மெளனம் சிதறிக் கொண்டிருந்தது
பனிக் காலத்து அதிகாலைக் கோலங்களில்
நீ சிறைப் பூட்டியிருந்ததும் தெரியும் தான்
அடர் வனத்தின் தனி களிரென அங்குமிங்கும்
அலைகிறது தன் இணை சொற்களைத் தேடி...

திசை மாறிவிட்ட கலமென நீர் விரிவில்
தனித்து சுழல்கிறது இன்னுமொரு சொல்
நடுங்கும் உன் உதடுகளில் வெடிக்கக் காத்திருக்கிறது
அதன் அடுத்தடுத்த மீதங்கள்
வெட்டப் படும் ஒரு மரத்தின் நுனியில்
ஒரு சிறு அரும்பெனவும் காத்திருக்கலாம்
கனியையும் அதனுள் விதையையும்
இன்னுமொரு மரத்திற்கான கனவையும்
வேதனையோடு சுமந்து கொண்டு...

ஒரு மலையோ பாறையோ தடுத்து விடும்
நீர்க் குவியலென காத்திருக்கிறது இன்னுமொரு
செயற்கை கடல் தன் வலிமையை மறைத்து
இப்படி மட்டுமே இருந்து விட வாய்ப்புகளில்லை
ஒரு காகிதப் பெட்டியில் அடைபடும்
புகையாகவோ வாசனைப் பொருளாகவோ
குப்பைத் தொட்டியில் தவறி விழுந்த
சில்லரை நாணயமெனவோ காத்திருக்கலாம்...

அகால மரணத்தின் அந்த ஒற்றை நொடியாகவும்
குழந்தையின் முதல் புன்னகையெனவும்
உன் தோட்டத்தில் ரீங்கரிக்கும் ஒரு
தேனீயின் தேடலிலும் ஒளிந்திருக்கலாம்
சில வேளைகளில் கார்மேகத்தில் மறைந்து
விண்மீன்களில் ஒளிரக் கூடும்
நான் தேடும் ஒற்றைச் சொல்லோ
அல்லது என்னைத் தேடும் பல சொற்களோ...

எழுதிவைத்த ஒன்றிரண்டும் ஏளனம் செய்ய
தேடும் சொற்கள் மறைந்து கொள்கிறது
எழுதப் பட்ட வரிகளின் பின்னால் சுவடென
சகிக்க முடியா யதார்த்தங்களிலும்
கோட்பாடுகளிலும் புதைக்க முடியாமல்
இதயம் கிழிபட வீழ்ந்து கிடக்கிறேன்
எழுதப் படா கவிதையின் மயானமொன்றில்
சிதறிக் கிடக்கும் மீத சொற்களின் கனவுகளோடு...

No comments: