பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 31, 2011

கனவுப் பிரதி...


நிசப்தங்களின் வெளியில் பேசிக் கொண்டே அலைகிறது
எல்லைகளற்று விரியும் மௌனத்தின் குரல்
சற்று தொலைவில் ஒரு விண்மீனையோ
அகன்று விரிந்த வானத்தின் நீட்சியினையோ
தேடத் துவங்குகிறது தனிமை குரலின் பிரதிகள்
எதிலுமே லயித்து விடா மனதை வெகு விரைவில்
அணைத்துக் கொள்கிறது பெருவெளியின் தனிமை
காற்றையும் மரங்களையும் பூக்களையும்
வருடிய விரல்கள் நதியில் குளித்து நீள்கிறது
சூரியனின் கிரகணங்களில் குளிர் காய
இதுவரை ஆசுவாசப்படுத்திக் கொண்ட கனவுகள்
கடந்து செல்வதை வேடிக்கை பார்க்கிறேன்
முன்னொருமுறையும் இப்படித் தான்
யாருக்கும் தெரியாமல் என் கனவுகளை ஒரு
மூடியிட்ட கண்ணாடி புட்டிக்குள் அடைத்தேன்
மயங்கி மயங்கி ரசிக்கும் இரவுகளில்
அதீத ஒளி வெள்ளம் பரவி நனைக்கிறது என்னை
நொடி முட்கள் கடக்கும் ஒசையில் தெளிவாகிறது செவி
தூரத்தில் ஒலிக்கிறது நான் என்றோ அழுத குரல்
எல்லாவற்றிலும் சேர்ந்து கொண்ட பிரம்மையில்
எதிலுமே இல்லாமல் தனித்திருக்கிறது மனம்
எதிரெதிர் திசையில் ஒற்றையடிப் பாதையில் பயணிக்கும்
நினைவுகளும் கனவுகளும் முட்டி மோதி நிற்கிறது
சமரசங்களை விரும்பாமல்
ஆகச் சிறந்த நூலகத்தில் யாருமறியா ஒன்றாய்
தூசிகளுடன் காத்திருக்கிறது என் கனவுப் பிரதி
....
...
..
மேலும் மேலும்
சொற்களை அலங்காரமாய் நிரப்பி
நீ இல்லா துயரமொன்றை தொலைக்கும்
அக் கணத்தில்
உன் நினைவுகளின் வெளிக்குள்
உலகொன்றை நெய்கிறது கனவு
தொலைந்து போவதற்கு கூட
உன்னைத் தான் தேட வேண்டியிருக்கிறது...

No comments: