பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 3, 2011

கோலங்கள்...


என் வீடு சின்னஞ் சிறிய குடிசை
முன்னால் அகன்ற வாசலும்
வேப்பமரமும் மருதாணிச் செடியும்
ஓரமாய் ஒரு செம்பருத்தியும் உண்டு...
அம்மா அதிகாலையில் சிறியதாய் கோலமிடுவாள்
நெளிவுகளால் நிறையும் வாசல்...
அதிகாலையில் விளக்கொன்றை
வெளிச்சத்திற்கென பிடித்திருப்பேன்
தெருவிளக்கு ஒளிரா நாட்களில்...
அக்கா கொஞ்சம் பெரிதானதும்
கோலப் பொடி கை மாறியது...
அம்மா சாணமிட்டு மெழுகி
கருப்படித்த களிமண் அடுப்பில் மட்டுமே
அதன் பிறகு நெளிவுகளை வரைந்தாள்...
அக்காவோ நெளிவுகள் கைவரப் பெறாமல்
கட்டங்களை நிரப்பினால் வாசலில்...
பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்
அவளும் தூரிகை பிடிக்கிறாள் விரல்களில்
அம்மாவின் கருப்பு வெள்ளை கோலங்கள்
அக்காவினால் கலரென மாற்றப்படுகிறது...
கார்த்திகை மாதங்கள் முழுதும்
தீபங்களால் நிறைக்கிறாள்
மார்கழியில் சங்குகள்
தையில் தேர்க் கோலம் என
வண்ணங்களில் மிளிர்கிறது வாசல்...
கிளிகள் மயில்கள் மான்கள்
பொங்கும் பானைகள் கரும்புகள் என...
பச்சை தீர்ந்து போன நாளொன்றில்
நீல நிற கிளிகள் பறந்தது
அது போலவே மான்கள் சில நேரம்
புலிகளென உறுமியது
அதிகாலை சாரல் மழையில்
நனைந்து கொண்டு போட்ட மீன் கோலத்தின்
மீன்கள் மழை நீரில் கரைந்து நீந்தியபடி சென்றது...
எனக்கு எப்பொழுதும் சில புள்ளிகள் வைக்கும்
வாய்ப்புகள் கிடைக்கும்...
விடியும் பொழுது சில நேரம்
திண்ணையில் அமர்ந்து கொண்டு
யாரையும் மிதித்து விடாமல்
காவலிருந்திருக்கிறேன்...
எல்லோருக்கும் சொல்ல முடிந்த என்னால்
என் அப்பாவிடம் சொல்ல முடியவில்லை
பூக்கள் கிளிகள் மயில்கள் தீபங்களை
மிதித்த படி தான் கடந்து செல்வார்
அக்காவோ அம்மாவோ எதுவும்
கேட்டதில்லை எனும் போதும்
அவர் இல்லாத போது
சிறிதேனும் திட்டி இருக்கலாம்
மனதிற்குள்ளாவது...

1 comment:

chittoo said...

nice......................