பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Sep 17, 2011
பெயரற்ற உறவு...
விடுமுறை நாளென
நீ நேரம் வரை தூங்கிப் போக
விடிந்த பின்னும்
விடியாமலிருக்கிறது
எனது இன்றைக்கான நாளொன்று...
நேற்றிரவு உனக்கென
நான் எழுதி வைத்த
பனித்துளி கவிதைகளை
அதிகாலை கதிரவன்
திருடிக் கொண்டிருக்கிறான்...
எப்பொழுதும் போல்
உதாசீனப் படுத்தப் படும்
கோரிக்கைகளையே நான்
வைத்திருக்கிறேன்
உன்னிடம் ஏமாறு வதற்கென...
வீட்டில் நீ மீன் சாப்பிடும்
பொழுதெல்லாம் கூரிய முள்ளொன்று
சிக்குகிறது என் தொண்டையின்
மெல்லிய இடுக்குகளில்...
நேற்றிரவு இரவு விளக்கின்
ஒளியில் நீ தூங்கும் போது
அனல் கக்கும் சூரியனின்
ஒளிக் கதிர்களில் தவித்திருந்தேன்...
விட்டுக் கொடுக்கவே இயலாத
சில மணித்துளிகளை
யாரிடமோ கொடுத்து விட்டு
கொதிக்கும் மனதை
மறைக்கத் தெரிவதில்லை எனக்கு...
அடிக்கடி கோபம் கொள்வதில்
அர்த்தங்கள் இல்லையென
சொல்லி தேற்றுகிறாய்
முடிந்தால் தானே
முயற்சித்துப் பார்க்க...
இயலாமையின் கரங்களில்
சிக்குண்ட நினைவுகளை
கொல்லவும் தவிர்க்கவும்
நீ வேண்டும் என்னுடன்...
தொடரத்தான் செய்யும்
மனதின் மரண ஒத்திகை
கடைசியாய் துடித்து
அடங்கும் நொடிவரை...
எப்படி முடிக்க என்று
தெரியாமல் தொடங்கிவிட்ட
கவிதையென
அழகாகவும் அழுகையுடனும்
நம் பெயரற்ற உறவு...
லேபிள்கள்:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment