பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 16, 2011

தோளில் உறங்கும் தேவதை


ஆயிரம் முறை கூட
சண்டை போடலாம்
மீண்டும் மீண்டும்
மன்னித்து ஏற்றுக் கொள்வதால்...

என்னுடன் பேசும்
எல்லா நேரங்களிலும்
சிவந்தே இருக்கிறது உன் முகம்
வெட்கத்திலோ கோபத்திலோ...

ஒரு நாள் உன் வெட்கம்
பார்க்க ஓடி வந்து விட்டு
ஒரு கவிதையோடு
திரும்புகிறேன் என்
வெட்கங்களை தொலைத்து...

உறங்க விடா உன்
உறவுக்கென தினமும்
செதுக்கிக் கொண்டிருக்கிறேன்
நமக்கான
கனவுக் கவிதைகளை...

நீ உறங்கு
உனக்கும் சேர்த்து
விழித்திருக்கிறோம்
நானும் இரவும்
கூடவே குளிரூட்டும்
உன் முத்தங்களும்...

காதலியாகத் தான்
இருந்தாய் நேற்றிரவு
உன் கண்களால்
அணைத்த அந்த நொடியில்
மனைவியானாய்...

நீ இல்லாத பொழுதுகளில்
கொட்டி விட்ட விண்மீன்களில்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்
நாம் தனித்து மயங்கி
கிடந்த நிமிடங்களை...

நாளையும் ஒரு
வெட்கத்தோடு வா
நான் உனக்கான ஒரு
முத்தத்தோடு வருகிறேன்
சந்திக்கட்டும்
வெட்கமும் முத்தமும்...

குழந்தைகள் மட்டுமே
உறங்கும் பொழுது அழகு
விதிவிலக்காய் என் தோள்களில்
உறங்கி விடும் போதெல்லாம்
குழந்தையாகி விடுகிறாய் நீ...

தேவதை கதைகளில்
நம்பிக்கை இன்றிப் போனேன்
ஒரு தேவதையோடு
இந்த இப்பிறவி முழுதும்
வாழும் வரம் கிடைத்த பின்...

No comments: