பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 15, 2011

ஜன்னலோரமாய் மலர்களோடு...


கவிதை கேட்டு
ஒரு மாலை வேளையில்
போனவள் தான்
அதன் பிறகு
கவிதைகளாகவே மாறிப் போனேன்
அவனுள்...

நேசிப்பதற்கே யோசிக்கும்
உனக்கு உன்னிடம்
நான் யாசித்த நாட்கள்
நினைவிருக்குமா என்ன?

கோபங்கள் அன்பின்
வடிவம் என்பதை
எப்பொழுது நீ
புரிந்து கொள்ளப் போகிறாய்...

இந்த உலகை அளக்கும்
உன் பேனாவால்
எனக்குள் நீ எழுதிப் போனது
நமக்கான
ஒரு காவியத்தை...

ஆயிரம் முறை காயப்பட்டும்
உன்னிடம் மயங்கும்
மனதிடம் என்ன தான்
எதிர் பார்க்கிறாய்
காதலைத் தவிர...

உன் புன்னகையில்
நான் சிரித்து மகிழ்ந்த
காலங்களை விட்டு
அகல மறுக்கிறது
என் நிகழ் காலம்...

அமைதி தான் உன்
ஆசையெனில் தவறில்லை
ஆனால் உன் மௌனத்தில்
எரிந்து கொண்டிருக்கும்
மனதை வீசி ஏறிகிறாய்...

உன்னுடன் வாழ
விதிகள் இல்லை தான்
இருந்தும் வாழ்கிறேன்
நீ என்னுள் இருந்த
வசந்த காலங்களில்...

திரும்பி வருவாய் என
தெரியும்
அதுவரை காத்திருப்பதை
தவிர வேறேதும் அறியா
கையறு நிலையில் நான்...

இறுதியாய் ஒன்று
எனக்குத் தெரியும்
உன் எழுத்துகள் எனக்கானவை என
இல்லையென சொல்லி விடாதே
நின்று விடப் போகிறது
உனக்கான இதயம்...

நமக்கான கனவுகளுடன்
என் ஜன்னலோரமாய்
காத்திருக்கிறேன்
தோட்டத்தில் உனக்கென்ன
வளர்த்த மலர்களோடு...

No comments: