பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 11, 2011

புன்னகையொன்றை களவாடிய பொழுது...








உன்னைச் சந்தித்த அந்த நள்ளிரவுப்
பொழுதொன்றின் தொடக்கத்தில்
களவாடிக் கொண்டேன்
உன் இதழ் உதிர்த்த
வெட்கப் புன்னகையொன்றை...

காலில் சதங்கைகளைக்
கட்டிக்கொண்டு என்னுடன்
வந்தது அப் புன்னகை
திரும்பிப் பார்த்த பொழுது
நீ மேலும் சில புன்னகைகளை
பிரசிவித்துக் கொண்டிருந்தாய்....


ஒற்றைப் புன்னகையோடு வந்திருக்காலாம்
எல்லாவற்றையும் கவர்ந்து செல்ல
நினைத்து மீண்டும் வந்தேன்
ஒரு கூடைப் புன்னகை மலர்கள்
நடக்கும் பொழுது பாரம் தாங்காமல்
விழுகிறேன் தரை மீது...

விடுபட்ட புன்னகைகள் திசைக்கொன்றாய்
பறக்கிறது பட்டாம் பூச்சிகளென
நட்சத்திரத்திடம் ஒன்று
வயல் வெளிகளில் ஒன்று
நதியிடம் ஒன்று
மலரிடம் ஒன்று
மரத்திடம் கொடியிடம்
துள்ளிக் குதிக்கும் கன்றிடம்
நடனமிடும் பறவையிடம்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில்...


தொலைத்து விட்ட புன்னகைகளை
திரும்ப பெற இயலா சோகத்துடன் நான்
கேட்கவா முடியும் அவற்றிடம்
திருடத் தெரிந்தவனுக்கு
பத்திரப் படுத்த தெரியவில்லை....

உன்னைப் பார்க்கிறேன்
தவற விட்ட புன்னகைகளை
திருப்பி தாவென கேட்கிறாய்
ஒரு மழலையின் சிணுங்கலோடு
புதிய புன்னகையை மறுதலித்து...

வீடு திரும்பி என் கால்கள்
வரும் வழியெங்கும்
தெருவில் என்னை கேலியாய்
பார்த்து புன்னகைக்கிறது
நான் தவற விட்ட புன்னகை கீற்றுகள்...

வெறுமையாய் அறையில்
வீழ்ந்த பொழுது
காற்று பறித்த புன்னகையொன்று
வந்து பதுங்கி இருந்தது
என் படுக்கை அறையில்
உன் முத்தங்களை சுமந்து கொண்டு....

எப்படி வந்தாய் என
முத்ததிடம் கேட்டேன்
முகவரி சொன்னது நீதான் என்றது
காலையில் கேட்டால்
ஆமென்றா சொல்லப் போகிறாய் நீ....

No comments: