பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 1, 2011

கண்ணாடி முகம்...


அடி பட்டு வீழும் ஒருவனை
அச்சோவென கடப்பதில்
யாரிடமும் வேறுபாடில்லை
சாக்கடையில் விழும் காசுகளை தேடும் ஒருவன்
சுத்தம் செய்பவனை கண்டு
முகச் சுழிப்போடு கடந்து விடுகிறான்
சிவப்பழகில் மயங்கி
விற்றுக் தீர்கிறது ரசாயன பூச்சுகள்
பூக்களில் கூட செயற்கை
காடுகளை அழித்து
பூங்காக்கள் வளர்க்கிறோம்
அடிக்கவும் உதைக்கவும்
கற்றுத் தருகிறோம் தற்காப்பென
அணைக்க மறந்த தொலைக் காட்சியில்
இரவு முழுதும் ஓடுகிறது நீலப் படங்கள்
அதிகாலை பயறும் ஓட்ஸ் கஞ்சியும்
மதியம் சப்பாத்தி இரவு பழங்கள் என
பட்டியலிடுகிறது உணவு
இப்பொழுதெல்லாம் கிராமம் நகரமாகவும்
நகரம் நரகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது
சூத்திரங்களும்
எண் கணிதங்களும்
வேற்று மொழி இலக்கணங்களும்
அல்ஜீப்ராக்களும்
புரியாத புதிராகவே இன்னமும்
ஒரு வேளை இவை
சிறார்களுக்கு கற்றுத் தரும்
ஆசிரியர்களுக்கு தேவைப் படலாம்
நான் ஆசிரியனும் இல்லை
அதற்கான தகுதிகளும் இல்லை
எல்லாவற்றிலும் வரைமுறைகளை
பொருத்திக் கொண்டு
தொலைகிறது வாழ்வு
திருமணம் செய்து கொள்
இன்னொரு உயிர் மீதான
அளவற்ற அங்கீகாரம் இது
சந்ததிகளை உருவாக்கு
அவர்களில் உன் கனவுகளை
விதைத்து நாசமாக்கு

சில நேரங்களில் நான் நானாகவே
வாழ ஆசைப் படுவது என் இயல்பு
ஏனெனில் நான்
நிச்சயம் உங்களில்
ஒருவன் இல்லை,
ஒரு பறவையை ரசிக்கிறேன்
அதன் இறகுகளை தொடாமல்
நதியொன்றில் ஆடுகிறேன்
அதன் மூலம் பற்றி கவலை இல்லை
அது போலவே
வீட்டில் வளரும் பசுவும்
மதியம் ருசித்த திராட்சை பழங்களும்...

கண்ணாடியில் தெரிகிறது
என் முகம் மட்டும்...

No comments: