பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 1, 2011

இன்னும் எதோ ஒன்று சொல்வதற்கென மீதமாய்...

கடிதமென்றே எழுதத் துவங்குகிறேன் இதை...எத்தனையோ வருடங்களை தாண்டி நெடு நாட்களுக்குப் பிறகு இன்று தொடங்கும் பொழுது கடிதமென எழுதும் கலை கைவரவில்லை. இருந்தும் தொடங்கியாயிற்று...

ஒரு ஒய்ந்து அடங்கிய ரயில் பாதையில் தனியே அமர்ந்து கொண்டு இதை ஆரம்பிக்கிறேன்.ஒரு சிறுவனை போல தண்டவாளத்தில் காதினை வைத்து ஒலிகளை உணர முடியவில்லை என்னால். இப்போதிருக்கும் மன நிலையில், பயன்பாட்டில் இருக்கும் தன்டவாளமென இல்லாமல் மழையிலும் வெயிலிலும் நனைந்தும் காய்ந்து துருவேறிக் கிடக்கிறது. சில நாட்களாக அடித்துக் கொட்டிய மழையில் இருப்புக் கம்பிகளை மறைத்து உயர்ந்து நிற்கிறது புற்களின் கூட்டம். இன்னும் வெப்பம் தயாரிக்காத கதிரவனிடமிருந்து தப்பிய படி படர்ந்திருக்கிறது அதிகாலை பனி துளிகள்.என் கரங்கள் என் இரு அலை பேசிகளையும் கவனித்துக் கொண்டே இருக்கிறது... உன்னிடமிருந்து வரும் ஒரு குறுஞ்செய்திக்கோ, ஒரு தவறிய அழைப்புக்கோ...

தண்டவாளக் கம்பிகள் முன்னாளில் எத்தனை நீராவி இயந்திரங்களையும், பயணிகள் ஏற்றப் பட்ட பெட்டிகளையும் சுமந்திருக்கும்.எத்தனை மனிதர்கள் எந்தெந்த காரணங்களுக்காகவோ பயணம் தாங்கி இருக்கும் இந்தப் பாதை, இப்பொழுது கையசைத்துப் பார்க்கிறேன் அப் பயணங்களில் சென்றிருக்க கூடிய குழந்தைகளுக்கென... முன்னால் விரியும் கனவுக் காட்சியில் பதிலுக்கு கையசைக்கும் குழந்தைகள். பயணம் முடித்த பெட்டிகள் இப்பொழுது எங்கிருக்கும், ஒரு வேளை பயன்படாதென உடைத்து போட்டிருக்கவும் கூடும். அலை பேசியில் மெல்லிசை தவழ்கிறது, நீயோவென எப்பொழுதும் போல எதிர் பார்த்து ஏமாறுகிறது மனதும் நினைவும்...

பயன்பாட்டில் இல்லையெனும் பொழுதும் ஏன் இன்னும் இப் பாதையை, கம்பிகளை, குறுக்கு கட்டைகளை இப்படியே வைத்திருக்கிறார்கள். யாருடைய நினைவுப் பொருளாக இன்னமும் இது காலம் காலமாய் காத்துக் கொண்டே இருக்கிறது. எத்தனையோ உறவுகளை புதிதாய் ஒரு காலத்தில் மலர வைத்திருக்கலாம், எத்தனையோ காதலர்களை சுமந்திருக்கலாம், பின்னர் அவர்களின் பிள்ளைகளையும் அவர்களின் காதல்களையும். என் தலைமுறைக்குத் தான் தகுதியின்றி போனதோ என்னவோ...எப்போதோ ஒரு முறை தனிமையில் சந்திக்கும் காதலர்களும், விடுமுறை நாளன்று மதுப் புட்டிகளோடு கூடுபவர்களையும் தவிர்த்து, வேறு யாருடைய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது இப் பாதை.

என்ன இது உனக்கென்ன எழுதும் ஒன்றில் இருப்புப் பாதைகளைப் பற்றி எழுதுகிறேன்... சரி தான், இதே போலத் தான் தட தடத்திருக்கும் உன் மனமும் உன் அழைப்புகளை நான் நிராகரித்து மௌனமாய் இருந்த போதும்...எல்லாவற்றையும் பரந்து விரிந்து பார்க்கிறேனோ இல்லையோ, கொஞ்சம் புரிந்து கொள்ளவாவது செய்கிறேன். உன்னிடம் மட்டும் ஏன் இந்த அழிச்சாட்டியம் செய்கிறது மனசு. எந்த ஒரு நொடியிலும் அறிவை வைத்து உன்னையும் என்னையும் சிந்திக்க விடுவதே இல்லை. வெறும் உணர்ச்சி களின் கொந்தளிப்பாகவே மாறி விட்ட பிறழ்வு நிலையில் கோபம் கொண்ட மிருகமென மாறி விடுகிறது என் மௌனம். அதீத கற்பனைகளில் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன். நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லி விடலாம் ஒரு நொடியில், எனக்கு அந்தக் கவலைகள் இல்லை. இவ்வுலகில் நான் யாரையும் விட உன்னையே நம்புவேன்... என்னை விடவும். பிறகு ஏன்?

அருகில் உள்ள பாதையில் கடக்கிறது மின்ரயில். புகையில்லை, அருகாமை வெப்பமில்லை. அதிக பட படப்பும் இல்லை. அதிக வேகம் இருக்கிறது. குழந்தைகளும் மற்றவர்களும் வேகமாகவே கடந்து போகிறார்கள். இப்படித் தான் உன் மீதான என் கோபமும் கூட அதி வேகமாக கடந்து விடுகிறது. மிஞ்சும் அன்பைக் கொண்டு என்னை தவிக்க விடுகிறது அதே கோபம். மீண்டும் அழைக்கிறது அலை பேசி, ஆர்வமே இல்லாமல் எடுக்கும் பொழுது யாரோ ஒருவர் தஞ்சாவூருக்கு பஸ் எத்தனை மணிக்கு தம்பி என்கிறார்? என்ன பதில் சொல்ல... தெரியலைங்க என்ற படி துண்டிக்கிறேன்.

உண்மையில் உனக்கு நேசிக்கவும், அன்பை பகிர்ந்து கொள்ளவும் உறவுகளும் நட்புகளும் அதிகமாகவே இருக்கலாம். சில பகிர்வுகள் மட்டும் நமக்கானவை சில நம் கனவுகளுக்கானவை. தனிமையில் புலம்பித் தவிக்கும் எனக்கு, உன்னைத் தவிர வேறு யாரிடமும் சிரிக்கவும், அழவும் தோன்றுவதில்லை என்பது மறுக்க இயலா நிதர்சனம்.நான் கோபம் கொள்பவன் தான் ஆனால் சந்தேகிப்பவன் அல்ல. எனக்கென்று ஒரு இடம், நானிருந்த ஒரு இடம், வேண்டாம் என நீயே சொல்லி தள்ளி வைத்த ஒரு இடம்... எப்படி முடிகிறது உன்னால், அதை வேறொன்றால் நிரப்ப...காரணங்களே இல்லை எனும் போதும்... அது என் இடம்.

எல்லோரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி தான், ஏன் எழுதுகிறீர்கள்? என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வசதியாய் இருக்கிறது... உண்மை உனக்குத் தெரியும், காரணம் அதுவல்ல... நீ என்னை நேசிக்க, நான் உன்னை நேசிக்க... உன் நேசத்தினால் எழுதத் துவங்கியவன், என் கனவுகளை வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகளில் வண்ணங்கள் எனத் தீட்டி உன் வீட்டுத் தோட்டத்தில் பறக்க விட்டவன். உன் கனவுகளை கடன் வாங்கி சில கற்பனைகளை கலந்து கவிதைகள் செய்து அதில் வாழத் துவங்கியவன்...இன்னும் சொல்வதென்றால் நான் வாழ்வது உன் நாட்களை கடன் வாங்கிக் கொண்ட பிறகு தானே...

கை நிறைய மீதமாய் நாட்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென தெரியாமல் இடுக்குகளின் வழியே ஒழுக விடுகிறேன். நீ இல்லாத நாட்கள், உன்னுடன் பேசாத மொழிகள், உன்னைப் பேசாத கவிதைகள்... போடி... நீரின்றி அமையாது உலகு என்பதைப் போல நீ இன்றியும் அமையாது என் உலகு...இத்தனைக்குப் பிறகும் ஏதோ ஒன்று சொல்வதற்கென மீதமாய் உணர்கிறேன்... உன் காதுகளில் சொல்கிறேன் ,அழைத்து விடு தேவதைகளின் ராட்சசியே...

மழை...



4 comments:

Deepa said...

கை நிறைய மீதமாய் நாட்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென தெரியாமல் இடுக்குகளின் வழியே ஒழுக விடுகிறேன். நீ இல்லாத நாட்கள், உன்னுடன் பேசாத மொழிகள், உன்னைப் பேசாத கவிதைகள்... போடி... நீரின்றி அமையாது உலகு என்பதைப் போல நீ இன்றியும் அமையாது என் உலகு...

Deepa said...

அழகான நினைவுகளின் வலி......

Jagadeesh V G said...

இன்று தான் முதன் முதலில் உங்கள் வலைப்பூவை பார்க்கிறேன்... காலத்தால் காத்துகிடக்கும் இரும்பையும் , காதலால் காத்திருக்கும் இதயத்தையும் ஒருசேர எழுதி இருப்பதை கண்டு வியந்து போகிறேன்... இப்பதிவை மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இவ்வுலகை விட்டு வேறு எங்கோ பயணிக்கின்றேன்

யாழினி said...

Nice