சூழ் கொண்டு அலைகிறது மேகம்
வண்ணங்களை இறைத்து
வில்லாகி நிற்கிறது மேகம்
மத்தளங்களென இடிகள்...
முதல் துளியை நீயும்
நானுமாய் கையிலேந்துவோம்
நனைந்தபின் காணாமல்
போவோம் அத்துளியோடு...
குளித்து முடித்த மரங்களும்
நீர் தாங்கும் மலர்களும்
காற்றோடு கைவீசி அழைக்கும்
புதிதாய் ஒரு பாதையில்...
ஒரு மலைச் சாரலும்
நதியின் சலசலப்புமாய்
சங்கீதத்தின் அலையென
நடுங்குகிறது வெயில்
குயிலொன்றின் மழைப் பாடல்...
குளிருக்கான கததப்பில்
தாயை நெருங்கி அரவணைக்கும்
சிறு குழந்தையொன்றின்
நெருக்கமென காத்திருக்கிறது என் காதல்...
உதிர்ந்து விட்ட இலை களென
பரவி காற்றில் பரிதவிக்கிறது
உன்னை எதிர் பார்த்து துடிக்கிறது
இன்றைய ஏக்கங்கள்...
இதே மழை நாள்
இனி இன்னொரு நாளாக
மாறியும் விடலாம்
நீயின்றி தனிமையில்...
மழை எழுதும் காவியங்களில்
சில வரிகளாக மாறி விடுவோம்
படியிறங்கி வா
மழையும் நானும் காத்திருக்கிறோம்
கவிதையொன்றை தொடங்கியவாறு...
No comments:
Post a Comment