பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 3, 2011

அந்த நிமிடம் எது?


நிஜம் என நெருங்கவும் இல்லை..
நிழல் என விலகவும் இல்லை..
காத்திருக்கிறேன்
எனக்காக என்றாவது பொழியும்
என் மேகம்....

சிறகு முளைத்து
உயரப் பறக்கிறேன்
உதிர்ந்து கிழ் விழும் போது
நீ தாங்கிக் கொள்வாய் என்ற இறுமாப்பில்...

நேற்றிரவு நல்ல மழை..!!!
எப்படித் தான் முடிகிறதோ
உன்னால் மட்டும்...
கதகதப்பான ஒரு முத்தத்தில்
என் குளிர் விரட்ட....

கடற்கரையில் சிப்பிகளை
சேகரித்து விளையாடுவேன்
நீ வந்து அலை புகும்
அந்த நொடி வரை...

தூங்காத இரவொன்றில்
கதை சொல்ல யாருமில்லை...
உறவாட உன் விழிகள்
துணையென...

கோவிலின் படிக்கட்டுகளில்
ஏறும் போதும் இறங்கும் போதும்
யாருடன் பேசி சிரிக்கிறது
உன் கால் கொலுசுகள்....

நீ புன்னகைக்கும்
ஒவ்வொரு முறையும் ஏதாவது
ஒன்றை தவறவிடுவேன்
கடந்த முறை தவறியது
நான்....

என்னைப் பற்றி
எழுதிக் கொண்டிருந்தவனுக்கு
உன்னை பற்றி
எழுதக் கற்றுக் கொடுத்த
அந்த நிமிடம் எது?

May 30, 2011

மழைக் குறிப்பு...



பகலெல்லாம் வடிந்து போய்
இரவாகிப்
போனது இன்றைய நாள்...
லேசாக
வெட்டிய மின்னல் கீற்றுடன்
மெல்லிய
தூறலாய் நனைகிறது பூமிப் பந்து....
அசதியாய்
தூங்குகிறாய் நீ
பிள்ளையை
அணைத்துக் கொண்டு...
சப்தமின்றி
கதவு திறந்து
மழை
நுழைகிறேன்
நனைக்கும்
உடையின் ஈரத்தில்
சிலிர்க்கிறது
எனக்கான கனவுகள்...
காலையில்
நிச்சயம் திட்டுவாய்
ஆனாலும்
உன் அக்கறையான கோபத்தை விட
மழைச்
சாரலில் கைகோர்த்து நடக்கத்தான்
என்
மனம் ஆசைப் படுகிறது...
எப்படி
சொல்வது உன்னிடம்?
போனது
போகட்டும்
அடுத்த
மழை வரை சேகரிக்கிறேன்
என்
பால்ய நினைவுகளை மீண்டும்.....

Oct 30, 2007

கோபத்தின் விரல்கள்

தூரத்து விண்மீன் கூட்டங்களை
எண்ணி முடிக்கும் தருணத்தில்
பூஜ்யத்தில் தொடங்கும்
உன் ஸ்பரிசங்கள்
மறக்க செய்கிறது யாவையும்...

பூக்களின் நறுமணத்தை
மூச்சாய் உள்ளிழுக்கும் வேளைகளில்
என்றோ நீ வீசிப்போன
பார்வை சிக்கி
வெளியேறாமல் தவிக்கிறது
உள் சென்ற காற்றுத் துளி....

அமைதியான ஒரு மழை நாளில்
ஆர்ப்பரித்து வரும்
உன் நினைவுகளின் மெளன மொழி
ஆவேசமாய் உடைத்தெரிகிறது
என் கனவு கலங்களை....

என் தோட்டம் நோக்கி வந்த
வண்ணத்து பூச்சியின்
வர்ணங்களை திருடிச் செல்கிறது
உன் கோபத்தின் விரல்கள்...

சில மணி நேர தடங்களுக்காய்
வாழ்க்கையை வெறுக்கத் துடிக்கும்
உனக்காய் நாள்தோறும்
இரவில் அழுகிறது
என் கவிதைக் குரல்...

கண்டதை எழுதுகிறாய்

ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்குமான
இடைவெளியில் செல்லும் ஒரு மரண ஊர்வலம்....

காட்டு குயிலோடு போட்டியிட்டு கூவி
தண்ணீர் தேடும் வீட்டுப் பறவை....

நாள் காட்டியில் விரைவாய் கிழிபடும்
காகிதங்கள் யாருடைய இறுதி நாளைத் தேடி....

இன்று மதியம் உணவு கிடைத்தது
இனி இரவுக்கு யாரைத் தேட...

எழு ஜென்மங்கள் உண்டாம் கொடுமை
எல்லாவற்றிலும் நான் மனிதன் ....

பொதி சுமக்கும் கழுதை போல
நினைவுகள் குட்டிசுவர் தேடி புறப்படுகிறது....

காரமான குழம்பு, ரசம் குடித்து
அதிலும் காரமென தயிர் தேடுகையில்
நிறைந்து விடுகிறது பசித்த வயிறு...

என்னடா இது கண்டதை எழுதுகிறாய்
என்ன செய்ய? சொல்லாமல் விட்டதை நீ புரிந்துகொள்...