பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 18, 2011

ம்ம்ம்ம்ம்ம்....


உன்னால் அதிகமாய்
உச்சரிக்கப் பட்ட ஒரே வார்த்தை
இது தான்...

இது வார்த்தையா,எழுத்தா?
என்னிடமிருக்கும் போது
எழுத்தாகவும்
உன்னிடமிருந்து வரும் போது
வார்த்தையாகவுமே
இருப்பதால் தடுமாறி போகிறேன் நான்!!!!

காலையில் படுக்கை அருகே
தேநீர் வைத்து எழுப்பும் போது
சலிப்பாய் ஒரு ம்ம்ம்ம்...
எழுந்து உடல் வளைத்து
சோம்பல் விடும் போது
உதடு சுளித்து ஒரு ம்ம்ம்ம்....
சரி என்று தலை அசைத்தலும்,
வேண்டாம் என மறுத்தலிலும்,
உதடுகளை உள் மடித்து...
புருவம் உயர்த்தி...
இப்படியாய் சில ம்ம்ம்ம்.....

எத்தனை கூட்டத்தில்
இருந்தாலும் என்னை எச்சரிக்கும்
ஒற்றைச் சொல்!
எத்தனை முறை கோபப்பட்டாலும்
என்னை குளிரவைக்கும்
ஒரு எழுத்து!!

கண் மூடி கதை கேட்கும்
நேரம் இடையிடையே மெலிதாய்..
மழை சாரல் நனையும் போது புன்னகையாய்....
வேகமான பயணத்தில் கட்டிக் கொண்டு காதோரமாய்...
ஒற்றை எழுத்தில்
எத்தனை விதம்
எத்தனை உச்சரிப்பு...

இன்னும் சொல்லாத "ம்ம்ம்ம்" கள்
நிறைய....
சொல்லி விட முடியாத "ம்ம்ம்ம்" களும்
நிறைய....

சொல்லிவிடாதே என்கிறாய்...
"ம்ம்ம்ம்" என்ற எச்சரிக்கையோடு...

No comments: