பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 27, 2012

பூரணமாதல்...


ஒற்றை நேசத்தில் மயங்கிக் கிடக்கிறது உயிர்
அதன் பிரதிகளை தினமும் சேகரிக்கிறேன்
ஒன்று கூட மற்றொன்றின் சாயலின்றி
நினைவுகளில் காதலின் வர்ணம்
குழைத்து வானவில்லென நிறைகிறது மனது
சில வேளைகளில் நாள் முழுதுமாய்
ரசிக்க நேரிடுகிறது அதன் நிறப் பிரிகைகளை
என்னில் துவங்கும் காதல் நதிகள்
உன்னைத் தேடி சங்கமிக்கிறது
நமக்கான கனவுகளைச் சுமந்தபடி
ஒரு படகும் அதில் வரலாம்
பெருங்காடு சூழும் நெருப்பென
எனை எரிக்கிறது உன் காதல்
நினைவு தவற விழுகிறேன் உனக்குள்ளேயே
எரித்த காதலே அணைக்கும் விந்தை
உன்னிடம் மட்டுமே நிகழக்கூடும்
காற்று எந்தச் சுவடையும் விடுவதில்லை
சில நேரம் எல்லாவற்றையும் விட்டு விடுகிறது
உன் காதலும் எதையும் எடுத்ததாகவும் இல்லை
எனக்கென எதையும் விடுத்ததாகவும் இல்லை
காதல் ஒரு பரிபூரணம்
நீ காதலானாய்
நான் அதில் பூரணமானேன்...

Jan 26, 2012

PARTITION


இந்திய ராணுவத்திலிருந்து திரும்பிவிட்ட சீக்கிய இளைஞனுக்கும்,பிரிவினையின் போது நாட்டிலிருந்து வெளியேரும் வழியில் பாதிக்கப்படும் ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்குமான காதலை,வாழ்க்கையை,இந்திய பாகிஸ்தான் பிரிவினையை, அதன் வலிகளை அதனால் அவர்கள் வாழ்வில் எற்படும் துயரங்களை அற்புதமாய் சொல்லும் ஒரு திரைக்கவிதை....


இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் அப்பாவி இஸ்லாமியர்களை கொல்லத் துரத்துபவர்களிடமிருந்து ஒரு வனப் பகுதிக்குள் புகும் நசீமை காப்பாற்றுகிறான் கியான்.
மாறுவேடம் தரித்து தன் இருப்பிடம் அழைத்துச் சென்று மறைத்து வைக்கிறான்.அவளை பாகிஸ்தானுக்கு தான் அனுப்பி வைப்பதாக உறுதியளிக்கிறான்.இதனிடயே கிராம மக்களுக்கு விசயம் தெரிந்து விடுகிறது.டெல்லி சென்று அவளை பாகிஸ்தான் அனுப்ப முயற்சிக்கிறான். கிராம மக்கள் சிலர் ஏற்றுக் கொள்ள, இயல்பு திரும்புகிறது.இருவருக்குமான உறவு நெருக்கமாகி திருமணத்தில் முடிகிறது.வருடங்கள் ஓடிவிட ஒரு குழந்தையோடு மகிழும் வேளையில், நசீமுக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி கிடைக்கிறது. கணவனையும், குழந்தையையும் விட்டு தனியே செல்கிறாள்.வாரங்கள்,மாதங்களாக கியானின் கடிதங்கள் அவளது சகோதரர்களால் மறைக்கப்படுகிறது.இந்தியாவிலோ குழந்தையுடன் அவனது தவிப்பும் காத்திருப்பும் நீள்கிறது.நசீமுக்கு உண்மை தெரிய வீட்டினுல் சிறைவைக்கப் படுகிறாள்.பொறுமை கடக்கும் கியான் மகனுடன் டெல்லி சென்று அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல முயல்கிறான்.தன் மதம் துறந்து, பெயர் துறந்து இறுதியில் இரவில் திருட்டுத்தனமாக நுழைந்து இறுதி ரயில் நிலையக் காட்சி வரை நம்மையும் தொடர்கிறது பதற்றம்.
கியானும், நசீமும் நடிகர்களாக இல்லாமல் கதாபத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.மேலும் குறிப்பிடப்பட வேண்டிய கதாபாத்திரம், கியானின் படைத் தோழனாக வந்து இறந்து போகும் ஆண்ரு வின் காதலி மார்கரெட்.குழந்தையாக வரும் சிறுவன். அற்புதமான தேர்வு.

குறிப்பிடத் தக்க காட்சிகள் நிறையவே இருக்கிறது.குறிப்பாக கலவரத்தில் இறந்து கிடக்கும் தாயிடம் பாலருந்தும் குழந்தை, சிதறிக் கிடக்கும் கால் நடைகள், பாகிஸ்தானிலிருந்து வரும் கோர ரயில் இப்படி பதற வைக்கும் சிலவும்...
தந்தையும் சிறுவனும் நசீமை எதிர்பார்த்து மழையில் நனைந்த படி நின்றிருக்கும் காட்சி, ஒரு சீக்கியன் தன் நீண்ட கூந்தலை வெட்ட நடுங்கும் நாவிதனின் கைகள், இறுதி கட்ட ரயில் நிலைய காட்சி என நம்மையும் படத்தினுள் இணைத்து விடுகிறார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி கவிதையென மஞ்சள் நிறப் பூக்கள் இடையே இருவரின் மகிழ்ச்சியான வாழ்வும் கண்முன்னே அகல மறுக்கிறது.

இன்னுமொரு குறிப்பிடத்தக்க விசயம் ஒளிப்பதிவு.கலவரத்தையும், அழகிய கிராமத்தையும், மஞ்சள் பூக்களையும் காட்டி விடுகிறது.



நடிப்பு:

கியான் - ஜிம்மி மிஸ்ட்ரி
நசீம் - கிறிஸ்டியன் க்ரூக்

இசை - பிரையன் டைலர்


ஒளிப்பதிவுடன் திரைக் கதை எழுதி இயக்கி இருப்பவர் - விக் சரின்

வெளியான வருடம் - 2007

ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்களின் இடப் பெயர்வு, ஒற்றைக் கிறுக்கல் கோட்டின்
மூலம் நிகழ்ந்தது.இது தான் உலகில் மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்த பெரும் வரலாற்று புலம் பெயர்தல். இந்த நிகழ்வில் ஏறக்குறைய பத்து லட்சம் மனித உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன.

இப்ப்டத்தின் பெரும் பகுதி இருவரின் தனிப் பட்ட வாழ்வெனினும், இடையிடையே மிக இயல்பாகத் தோன்றும் மத சிக்கல்களும், லட்சக்கணக்கான உயிர்களின் அலறல் துடிப்பும் கலங்க வைக்கிறது.இந்திய எல்லையில் இந்துக்கள் ஆடிய கோரத்தாண்டவமும், அதற்கு பதிலடியாக அங்கிருந்து வரும் புகைவண்டி சடலங்களை சுமந்து வருவதும் “நள்ளிரவில் சுதந்திரம்” படித்ததை காட்சியாக்கியது போல் இருந்தது.

# திரைப்படம் பற்றிய முதல் பதிவு இது,எழுத காரணமாக இப்படத்தை எனக்கு அறிமுகம் செய்தவருக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

Jan 25, 2012

நீ நான் ஒரு நேசம்...


யாருமற்று தனிமையில் இருப்பதில்
உன் நினைவு வருகிறது தடைகளின்றி
என்றோ நீ வந்து போன சில மணி நேர
அருகாமையின் வாசம் நினைவுகளின் வழியே
அறையெங்கும் பரவி சுவாசமெங்கும் நிறைகிறது
உன் வாழ்விற்கான என் கனவு
என்னில் மிகப் பெரிய கனவாகவே தொடர்கிறது..

உன் நேசத்தின் ஈர்ப்பில் உன்னில்
மயங்கிக் கிடந்த பொழுதுகள்
நீ பேசும் அனைத்தும் கவிதையென மாறி
உன்னுடனே என் சுயம் தொலைத்து
நீ நானாகவும் நான் நீயாகவும்
மாறிக் கிடந்த அற்புத நாட்கள்
நீ அழகில்லை தான்
நான் விரும்பியது போல
மின்னும் வெண்மை பற்களும் இல்லை தான்
இன்னமும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன்
உன்னிடம் என்னை எப்படித்
தொலைத்தேன் என்று...

என் மீதான உன் அக்கறைகள்
அறிந்தவை மிக அழகானவை
நேரில் சந்திக்கும் கணமொன்றை
கனவுகளில் எதிர்பார்த்து காத்திருந்த நாட்கள் பல
அதே கனவு இன்னும் நிழலென
விடைபெறாமல் இருக்கிறது
அந்த முன்னிரவின் இறுதியில்
வந்தாய் சில நிஜங்களோடு
பயமும் தயக்கமும் முன் தள்ள
ஆவலும் ஆசையுமாய்
பதற்ற நொடிகள் துடித்துக் கடந்தன
மெல்லிய உருவமென நுழைகிறாய்
காற்றென மாறி...

அதன் பிறகான காலம்
காதலுக்கானது
உன் மீது நானும் என் மீது நீயும்
கொண்ட அதீத நேசத்திற்கானது
உன் முதல் தீண்டலில் தேகம்
சிறகுகளை கட்டிக் கொள்கிறது
தடுக்க நினைக்கும் அறிவை எப்படியோ
மழுங்கடிக்கிறது உன் அரவணைப்பின் அருகாமை
விரல்கள்
கண்கள்
கன்னங்கள்
இதழ்கள் என தொடரும் உன் தீண்டலில்
மறந்து மயங்கி தேங்குகிறது உலகம்...

தளர்கிறது கட்டுகள் ஒவ்வொன்றாய்
எதையும் மறுக்க இயலவில்லை
இன்றும் விளங்காத புதிர் அது
என்னை உன் வசம் செய்தாய்
தேர்ந்த வசியக்காரனின் அரவனைப்பு
அறையெங்கும் நிறைகிறது நம் காதலின் சுகந்தம்
அடைபட்ட சன்னல் கதவுகளில் முட்டி மோதி
மீண்டும் நம்மையே சுழலும் அதில்
கிறங்கிக் கிடந்த அவ்விரவு ஒரு
ஒளிர்கிறது என்னுள் தீபமென...

அழகான உறவில் அடிக்கடி வந்த
சிறு சிறு அன்புப் பூசல்கள்
விவாதங்கள்
மறக்கப்பட்ட பிடிவாதங்கள்
சாமர்த்தியங்களால் சமாளிக்கப்பட்டன
பிறகு இன்றைய பிரிவை
கொண்டு வந்த நிமிடம் நினைவிருக்கிறதா?
என் முதல் காதல் உன்னிடமில்லை
உன் கவிதைகளிடம்
எது அன்பை சுமந்து திரிந்ததோ
அதுவே உன் மீதான சங்கடங்களையும்
சுமந்து நிற்கிறது...

அறிவேன் உன் மனதின் துயரங்களை
வேறு வழிகள் இல்லை என்னில்
அதற்கு காரணமானவனும் நீ தான்
வார்த்தைகளில் வெறுப்பை கொட்டவும்
உன்னை புறக்கணிப்பதாய் நடிப்பதுமாய்
தொடங்கி பின்பு அதுவே பழகி விடுகிறது போலும்
என் யதார்த்த வாழ்வின் கட்டுகளை
உறவுகளின் விதிகளை
புற உலகின் நிபந்தனைகளை மீறி
என்னால் செய்யமுடிந்ததில்லை எதுவும்...

உனக்கென வாங்கிய பரிசுப் பொருள்
உன்னை அடையாமல் என்னிடமே
உன் நினைவுகளை சுமந்தபடி
என்னை விட என்னை உணர்ந்தவன் நீ
எந்த செயல்களுக்கும் காரணத்தை
சொல்லிக் கொண்டிருப்பதில் உடன்பாடில்லை
நான் நேசித்தது உண்மை
நம் வாழ்வும் உண்மை தான்
இதோ வெகு நாட்களுக்குப் பிறகான
இந்த தனிமை உன்னை மட்டுமே
நினைவு கொண்டிருக்கக் காரணம்
உன் எதிர் பார்ப்பில்லா நேசமும்
அக்கறை அரவணைப்புகளுமே...

மீண்டும் எதாவது ஒரு நாளில்
ஒரு புள்ளியில் உன்னை
சந்திக்க விரும்பவில்லை நான்
நீ என்னுள் எப்பொழுதும்
காதலாகவே நிறைகிறாய்
கனவாகவே மலர்கிறாய்
உன் நினைவுகள் இதோ இவ்வறை
நிறைக்கும் மெல்லிய சுகந்தம்
என்னுளும் நிறைந்திருக்கிறது அதில்
என்றும் உனக்கான என் உலகம் அறியாக் காதல்
சுமந்து கொண்டுதானிருக்கிறது
அன்பின் நினைவுகளையும்
பிரிவின் வலிகளையும்...

உன்னைப் போல் வார்த்தைகளை
அலங்காரமாக்கத் தெரியாதவள் நான்
அதனால் என்ன?
நம் இருவருக்குமான உன் கவிதைகள்
இவ்வுலகில் பறவையென
சிறகடித்துக் கொண்டுதானிருக்கும்
நம் இருவரின் காதலை
நமக்கு தெரிந்த
மொழியில் எழுதியபடி....

Jan 24, 2012

தேவதையின் பொழுதுகள்...


எப்பொழுதும் ஏதாவது ஒரு
கதைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்
தன் பொம்மையிடம்
உயிரற்ற பொருள்களையெல்லாம்
உயிர் கொடுத்து நடமாடச் செய்யும்
வித்தை கற்றவள் அவள் மட்டுமே

ஒரு விடுமுறை நாளில்
தன் சிறிய தோழியின்
உடை அலசி
குளிக்க வெந்நீர் வைக்கிறாள்
கதிரவின் வெப்பத்தில்
குளிருக்கு கம்பளி போர்த்துகிறாள்
அரவணைப்பில் மயங்க வைக்கிறாள்
உடல் நிலை சரியில்லையென
மருத்துவமனை கூட்டிச் செல்கிறாள்

தன் பசி மறந்து
வேளை தவறாமல் உணவூட்டுகிறாள்
நிலவை காட்டுகிறாள்
பூக்களை பறித்துச் சூட்டுகிறாள்
அவள் அன்னையாகிறாள்
தோழியாகிறாள்
கல்விக் கூடம் அழைத்துச் செல்கிறாள்
மாலை வேளைகளில்
விளையாட்டுப் பொருளாகி
வேடிக்கை காட்டுகிறாள்

இரவில் கதை சொல்கிறாள்
அதில் பறவைகளை
விலங்குகளை
ஒரு ராஜ குமாரியை
தனது பாட்டியை எல்லோரையும்
கதாப்பாத்திரமாக்குகிறாள்
பிறகு தூங்க வைக்க
தாலாட்டுகிறாள்
பிறகு தான் தேவைப் படுகிறது
அவளுக்கான அரவணைப்பும்
தாலாட்டும்....