பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Apr 6, 2012
சிதம்பர நினைவுகள்
எனது ஊரில் நான் இரண்டு விசயங்களால் கவனத்தில் கொள்ளப்பட்டேன், படுகிறேன்... ஒன்று.. மழை வரும் போதெல்லாம் நனையும் என் அடங்கா வெறி .. இன்னொன்று அதிகாலையிலோ அல்லது அனைவரும் உறங்கும் இரவுகளிலோ தனிமையில் நடந்து கொண்டிருப்பது. இரண்டிலும் எனக்கு பிடித்தமான தனிமை வாய்த்து விடுகிறது. மழை அதன் போக்கில் தான் நினைத்த போது தான் வரும், நனைக்கும்.பெரும்பாலும் தனிமையில், இரவுகளில் ஊர் முழுக்க சுற்றித் திரிந்திருக்கிறேன். புதிதான சிந்தனைகள், வாசித்த புத்தகங்கள், ரசித்த திரைப் படங்கள் என எனக்குள்ளேயே சுமந்து திரிந்து கொள்ளப் பழகி இருந்தேன்.
நேற்றும் அப்படித்தான், தோழர் அரசுவிடம் இரவல் வாங்கிய பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர நினைவுகள் வாசித்து முடித்த பின் மெதுவாய் கதவைத் திறந்து கொண்டு யாரையும் தொந்தரவுக்கு உள்ளாக்காமல், காலணிகள் எதுவும் அணியாமல் நடக்கத் துவங்கினேன். சிதம்பர நினைவுகள்- அவரின் ரகசிய நாட்குறிப்பின் பக்கங்கள் போல நிதர்சனத்திற்க்கு மிக அருகில், ஒருவன் தான் புகைப்பதையோ, குடிப்பதையோ, தனக்கிருக்கும் பெண் மோகத்தையோ எந்த நிலையிலும் தனக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகவே புதைத்திருப்பான்... இங்கே அந்த பாசங்கு உடைத்து தன் வாழ்வின் அனைத்தையும் பொதுவில் வைத்திருக்கிறார் பாலன். ஒரு கவிஞன், எழுத்தாளன் எனும் அனைத்தையும் தாண்டி ஊர்ந்து கொண்டே இருக்கிறது அவரது எழுது கோல்.
முதலில் தொடங்கும் சிதம்பர நினைவுகளில் வயதான தம்பதிகளிடம் பேசுவதில் தொடங்குகிறது வாசிப்பவனுக்கும் அவருக்குமான சினேகம். மெல்ல கைபிடித்து நடை பழக்கும் குழந்தையென நம்மை அவரின் வாழ்வின் பகுதிகளுக்குள் அழைத்துச் செல்கிறார். அப்பாவைப் பற்றிய அவரின் நினைவுகளில் எனக்கும் என் தந்தையின் நினைவு வருகிறது, எனக்கும் அதே நிலை வந்த போது அவரின் மன உறுதி என்னிடம் இல்லை, வீட்டிலேயே இருந்து விட்டேன். சாஹினாவைப் போல் எல்லோருக்கும் ஒரு பள்ளிக் கால நினைவு நிச்சயம் இருக்கும் ஆனால் அவரைப் போல் அதன் எடையை சரி செய்து கொள்ள இயலுமா எனத் தெரியவில்லை. காலடிச்சுவடுகளில் ஒரு வயாதன பெண்ணுக்கு உணவளித்து விட்டு தன் தாயின் நினைவுகளில் மூழ்கும் சாராசரி மனிதனாய் பாலன் நம்மோடு கைகோர்க்கிறார். என்னோடு பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து இன்று கண் முன்னே மனநிலை தவறிய ஒருவனாக நடமாடும் ஒருவனை நான் அடிக்கடி எந்த குற்ற உணர்வுமின்றிக் கடந்து போகிறேன். அதுவே பாலனின் மோகனுக்கும் நிகழ்கிறது. கவிதைகளுக்கு கைதட்டல் வாங்கிய மேடைகள் கடந்து உணவுக்கு வழியின்றி பண்டிகை நாளில் பிச்சை புகுவதும், கவிதைகளுக்கு கைதட்டிய உயிர் அப்பொழுது அடையாளம் கண்டு கொள்வதுமான நிலை, கூனிக் குறுகி நிற்கும் பாலனோடு நாமும் நிற்பதாய் உணர்கிறோம்.
தன்னை நம்பி வந்த பெண்ணிடம் தன்னுடைய முதல் கருவைச் சுமக்கும் பெண்ணிடம், தானே தகப்பன் என அறிந்தும் சூழ்நிலைக் கைதியென கலைக்கச் சொல்வதும் அதற்கான அவரின் செய்கையும், அவரை கொலை செய்தால் தான் என்ன என்று நினைக்க வைக்கிறது. தன் குருதியை விற்று அதனை இன்னொரு உயிரின் மருத்துவச் செலவுக்காக கொடுத்து விடுகையில் இவர் எந்த மாதிரியான மனிதன் என வியக்கவும் வைக்கிறார். ஒரு தெரு விபச்சாரியை பரிதாபம் கொண்டு வீட்டிற்கே அழைத்து வந்து மனைவியிடமே அறிமுகம் செய்யும் போக்கு சற்றே வியக்க வைக்கிறது. அய்யாவு செட்டியார், ஸ்ரீதேவி,லைலா,ராதிகா என மெல்ல மெல்ல அவருக்கு அறிமுகமான அனைவரையும் நமக்கு அவர்களின் போக்கிலேயெ அறிமுகம் செய்கிறார். சிவாஜி கணேசனுடனான சந்திப்பில் அவருக்கும் முன் வசனம் பேசியதை, அவரோடு குடித்ததை சிலாகித்திருக்கிறார். கிடங்கரை ஸ்ரீவத்சன் பற்றிய குறிப்பு அவரால் மட்டுமல்ல வாசிக்கும் அனைவராலும் மறக்க இயலா ஒரு நினைவாக, ஒரு வறுமையில் உழலும் கவிஞனின் வாழ்க்கைக்கு சான்றாக நிழாடிக் கொண்டே இருக்கிறது. ஒரு வேசியின் மடியில் விடிய விடிய தலைவைத்து படுத்திருப்பது என்பது மிக சுலபமாகத் தெரிந்தாலும், அக்கா என அவர் அழைத்ததும், அவள் செல்லும் போது கொடுத்த ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ள எழாத தயக்கமும் பாலனை மேம்பட்ட மனிதனாக்கி விடுகிறது. இறுதியாக டால்ஸ்டாய்க்கு நோபல் பரிசு தராமல் போனதன் கோபத்தில் இனி எனக்கு தந்தாலும் அதை வாங்க வரப் போவதில்லை என்று அமைப்பாளர்களிடமே சொல்லும் தைரியமும் பாலனுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.
குறிப்பாகச் சொல்லப் பட வேண்டியது மொழிபெயர்ப்பு... மிக அழகாக, இயல்பான வார்த்தைகளை கோர்த்து கொடுத்த கே.வி.சைலஜா அவர்களுக்கு நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இனி என்ன? நடந்து முடிக்கையில் ஒரே ஒரு சிந்தனை மனம் முழுதும் நிறைந்திருந்தது... நம்ம சேரனின் ஆட்டோகிராப் படத்தை அதன் திரைக்கதைக்காக ரசித்தாலும், ஒரு ஆணின் பார்வையில் சரியாகவே தெரிகிறது. எனினும் ஒரு பெண் அதே போல் பல்வேறு நேசத்தை சொன்னால்,பதிவு செய்தால் இந்த சமூகம் கொண்டாடி இருக்குமா?
அது போல ஒரு பெண் தன் எழுத்துகளின் வாயிலாக வாழ்வில் தான் கடந்த இது போன்ற நாட்களை, மனிதர்களை, நிகழ்வுகளை, பிறரிடம் தனக்கிருந்த மோகத்தை வெளிப்படுத்த இயலுமா என்பதே? காலம் பதில் சொல்லும்.
தோழர் சிந்தன் எழுதிய சில வரிகள் நினைவுக்கு வருகிறது...
எத்தனை பேர் பின்னால் வேண்டுமானாலும் சுற்று, வேசி என்று எந்த ஆண் மகனும் அழைக்கப் பட்டதில்லை...
நடந்து வீட்டுக்கு வந்து விட்டேன், யாருக்கும் தெரியாமல் போய் படுத்துக் கொள்ளவேண்டும்.
புத்தகம் - சிதம்பர நினைவுகள்
மலையாள மூலத்தின் ஆசிரியர் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
மொழிபெயர்ப்பு - கே.வி.சைலஜா
வம்சி புக்ஸ் வெளியீடு
விலை:100 ரூபாய்.
லேபிள்கள்:
வாசிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
"அது போல ஒரு பெண் தன் எழுத்துகளின் வாயிலாக வாழ்வில் தான் கடந்த இது போன்ற நாட்களை, மனிதர்களை, நிகழ்வுகளை, பிறரிடம் தனக்கிருந்த மோகத்தை வெளிப்படுத்த இயலுமா என்பதே? காலம் பதில் சொல்லும்'
100 சதவிகிதம் முடியாதுங்க.வெளிப்படுத்தவும் கூடாது என்பதே என் கருத்து.அதனால் பல குடும்பங்கள் நிர்கதியானதை நான் பார்த்திருக்கிறேன்.
ரொம்ப பீல் பண்ண வச்ச புத்தகம்ல . நான் ஐந்து மணி நேர பயணத்தில் முன்று முறை படித்தேன். இப்பொழுதும் சில சமயம் அந்த புத்தகத்தை பற்றிய நினைவுகள் வந்து கொண்டு தான் இருக்கும்.முக்கியமாக ஓணம் பண்டிகையின் போது ஒரு வீட்டில் பிச்சைகாரனை போன சாப்பிட்டது, குழந்தையை கலைக்க சொல்லும் இடம்.. சான்ஸ் இல்ல .. உங்கள் விமர்சனமும் அருமை.
புத்தகத்தை பற்றி நான் எழுதியது
http://romeowrites.blogspot.in/2011/01/blog-post_17.html
good writing boss... i too have something to share about this book, if time permits i will do it...
thanks for good remembered of a good book.
Post a Comment