பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 4, 2007

ஒரு தந்தையின் தாலாட்டு



என் மகளை தொட்டிலில்

இட்ட பின்சிணுங்கி

கொண்டே இருக்கும் அவளுக்காய்......

இது ஒரு தந்தையின் தாலாட்டு....


உறக்கமில்லா இரவுகளில்

எழுதும் என்கவிதைகளில்

புன்னகை பூக்களை

நட்டு போகும்

பூங்காற்றே கண்ணுறங்கு....


தோளில் ஏற்றி

வேடிக்கை காட்டும்

நாட்கள்

தொலைவில் இல்லை

பூ மகளே கண்ணுறங்கு.....


கை பிடித்து

நடை பழக்கும்

நாட்களுக்கும் பஞ்சமில்லை

கண்மணியே கண்ணுறங்கு.....


அமுதூட்டி உன்

எச்சில் தன்னில்

பசியாருவேன்

கண்ணுறங்கு....


தாயிடம் தாலாட்டு

நான் பயின்று

தயங்காமல் பாடுவேன்

தங்கமே கண்ணுறங்கு......


கொஞ்சும் மொழி

பேசுகையில்

பூரிக்கும் என் நெஞ்சம்

புது மலரே கண்ணுறங்கு....


ஆணென்பதை நான்

மறந்து தாயென்றே

எனை மாற்றிய என்

தாயே கண்ணுறங்கு.....


நீ கொடுத்த

முத்தத்தில் முக்கணியின்

சுவை உணர்ந்தேன்

தீஞ்சுவையே கண்ணுறங்கு...


தத்தை நடை

கை பிடித்து பழகிய

களைப்பெல்லாம்

போகட்டும் கண்ணுறங்கு.....


புன்சிரிப்பும்

இதழோர கதை சிரிப்பும்

காட்டி எனை வென்றவளே

உயிர் பூவே கண்ணுறங்கு.....


ஓடி விளையாடியதும்

கண்டு பிடிக்க சொன்னதும்

கனவெல்லாம் இனிததிருக்கும்

பொன் மகளே கண்ணுறங்கு....


ஆயிரம் பேர் சொன்னதுண்டு

ஆனாலும் என் பெயரை

நீ சொன்ன சொல் கேட்டு

முத்தமிழும் நான் பெற்றேன்

தமிழ் மகளே கண்ணுறங்கு.....


ஒரு மடியில் நீ உறங்க

மறு மடியில் உன் தாய் உறங்க

இருவரின் கனவினையும்

கண் விழித்து காத்திருப்பேன்

கவலை இன்றி கண்ணுறங்கு........

1 comment:

Gurumoorthi said...

அருமை... தன மகளை கண்ணுறங்க வைக்க, தந்தை பாடும் தாலாட்டு., அவரது பாசத்தை காட்டும் இந்தக் கவிதை மூலம் வெளிப்படுத்தும் உணர்வை, ஒரு மகளின் தந்தையாக என்னால் உணர முடிகிறது..