பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 2, 2012

சொற்களைச் சுமக்கும் மேகங்கள்...


இறைந்து கிடக்கும்
சொற்களிலிருந்து விதையென
எடுத்துக் கொள்ளகிறேன்
என் கவிதைக்கான முதல்
சொல்லொன்றை...

எனக்குள் விதைக்கப் பட்ட
விதையிலிருந்து துளிர்க்கிறது
சிறிய வேருடனும்
இரு மெல்லிய இதழ்களுடனுமான
ஒரு உயிர்...

வேர்கள் பதிய
உடலொன்று உருவெடுக்கிறது
மேல் நோக்கிய
வளர்ச்சியும்
கீழ் நோக்கிய தேடலுமாய்...

செடியாகிறது
மரமாகிறது
உறிஞ்சும் நீரை
மேகத்துள் விதைக்கிறது
கிளைகளின் அசைவில்
மென் காற்றை உருவாக்கி
மேகத்தை நகர்த்த...

பல விதைகள்
பல மரங்கள்
பல மேகங்கள்
இப்பொழுது ஒரு காடும்
வான் நிறைய நீர்
சுமக்கும் மேகங்களுமாய்
ஒற்றை சொல் ...

மெல்ல மெல்ல நகர்ந்து
உன் வீடு நோக்கி வருகிறது
மேகங்களென
சொற்களைச் சுமக்கும்
என் கவிதை...

சூழ் கொண்டு
பொழிகிறது மழை
உன்னைச் சுற்றி
தவறிய சொற்கள்
காற்றென மாறி
கண்ணாடி சட்டமிடப்பட்ட
சன்னலின் வழியே
ரசிக்கும் உந்தன்
முகத்திலும் தூவலாம்
என் நினைவுகளை...

No comments: