பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 5, 2012

என் உலகானவள்...


உன் பாதங்களை விட மென்மையான பூக்களை
உலகில் இனி யாரும் கண்டுவிடப் போவதில்லை...
ஒற்றை புன்னகையில் உலகை வெல்லும்
வித்தை உனக்கு சொந்தமானது...
பிஞ்சு விரல்கள் என் முகம் வருடும் வேளையில்
மெல்லிய மயிலிறகென மாறிப் போகிறாய்...
சுருள் விழும் உன் பட்டு கூந்தலில்
சிக்குண்டு கிடக்கிறது எனக்கான மகிழ்வுகள்...
எத்தனையோ பேர் முயன்று தோற்றுப் போக
எளிதில் நீ கற்பித்து விடுகிறாய்
பாசத்தின் மொழியை கொஞ்சும் மழலையில்...
கரு விழியின் நடனங்கள் மேடையேற
சில நேரங்களில் மயக்கி விடுகிறாய்
நாட்டிய பாவனைகளில் கிறங்கடித்து...
கால்களை உதைத்து நீந்திய போதும்
மண்டியிட்டு தவழ்ந்த போதும்
சுவர் பிடித்து நின்ற போதும்
உலக அதியங்கள் எல்லாம் அர்த்தமற்றுப் போயின...
எனகென ஒரு உலகைத் தந்தவள் நீ
என் உலகெனவே மாறி போனவள் நீ...
திருஷ்டிப் பொட்டுகள் கூட அழகாகி விடுகிறது
உன் கன்னங்கள் தொடுவதில்...
புதிது புதிதாய் விளையாட்டுகளை
அறிமுகம் செய்கிறாய் எனக்கு ...
வீடு வரும் பறவைகளுக்கு கூட
செல்லப் பெயர் வைத்து விடுகிறாய்
பிறகு நானென்ன மிஞ்சுவது...
நீ தரையில் வரையும் கோடுகள்
அழகிய ஓவியத்தின் தொடக்கமாக...
கால் கொலுசுகளில் சிம்பொனி இசைக்கும்
ரகசியத்தை யாருக்கும் சொல்வதில்லை நீ...
நானோ உன்னைப் பற்றி கவிதைகளை தேட
நீயோ சின்ன சின்ன அசைவுகளில் கூட
காவியங்களை சொல்லி விடுகிறாய்...
அம்மா எனும் அழைப்பில்
என்னுள் இருக்கும் வேதனை முடிச்சுகளை
நானறியாமல் அவிழ்த்து விடுகிறாய்...
எத்தனையோ சொல்ல நினைத்து
வார்த்தைகளில் அடையா கவிதைக்கு
உன் இன்னொரு புகைப் படத்தையே
பதிந்திருக்கலாம் நான்...

Feb 4, 2012

சுதந்திரம் வெறும் வார்த்தையில்..


சுதந்திரத்தை பற்றி எழுத
எனக்கு ஆர்வம் இல்லை -ஏன்னெனில்
இல்லாத ஒன்றை பற்றி
என்னதான் எழுதுவது ?

இதை பற்றி நினைக்கும் போதே
நாம் தொலைத்த ஒவ்வொன்றும்
எனக்குள்
சோக ஊர்வலமாய்

ஆட்டு மந்தைகளாய்
எங்களை
வெட்ட வெளியில்
அடைத்துவிட்டு
நடுவில் சுதந்திரக்கொடி
சுதந்திரமாய் பறக்க விடப்பட்டுள்ளது

சுதந்திரத்தை பற்றி
சத்தமாய் நீ பேசினால்
உன் சத்தம் வெளியே எப்போதும் கேட்காது
இங்கே பேச்சில் மட்டும் தான்
சுதந்திரம் -ஆனால்
வெளியே எதுவும் இல்லை
எல்லாம் அவர்களுக்குள் மட்டுமே...

- மதிவதனி...

Jan 29, 2012

கண்ணீர் வேடிக்கை ....


பல வேளைகளில்
பல காரணங்களால்
தனித்து விடப்படுகிறது நேசம்
சுற்றிலும் கூரிய கத்திகளும்
நீண்ட அரிவாள்களும்
காத்திருக்கிறது எப்பொழுதும்...

சிறிதும் பெரிதுமாய்
சில லேசான காயங்களுடன்
விக்கித்து நேசத்தின் அருகில்
கிடக்கிறது பளபளக்கும்
நட்பின் கத்தி சில ரத்தத்
துளிகளின் கரையோடு...

நேசத்தின் உடலை
கூர் பார்க்க விரும்புவது
கூடவே உறவாடும்
நட்பும் உறவுமே
எதிரிகளிடம் எச்சரிக்கையாய்
இருந்து விடுகிறோம்...

காலம் காலமாய்
தொடரும் நிகழ்வுகளில்
அப்படி என்ன தான் இருக்கிறது
நம்பிக்கை கொள்ளும்
உறவுகளின் கண்ணீரை
வேடிக்கை பார்ப்பதில்...

இறுதியில் கேட்கப்படும்
மன்னிப்புகளுக்கு தலையாட்டி
வாழும் வரை சுமக்க
நேரிடுகிறது நட்பும் உறவும்
உண்டாக்கிய வடுக்களை...

ஆறா ரணமென....


புன்னகையைக் கூட
எல்லோரிடமும் பகிர
கண்ணீரை வெகு சிலரிடம்
அந்த இரவு உன் கண்ணீரை
சுமந்திருந்தது

ஆறுதலாய் தலை கோதி
மடியிலடவே துடிக்கிறது மனது
அலைபேசி மௌனமே
கையறு நிலையென
வாய்க்கிறது எனக்கு

எப்பொழுதும் உன் கண்ணீர்
உனக்காக இருந்ததில்லை
ஏதாவது ஒரு வலியை
நட்பும் உறவும் தந்துவிட
வெடித்தழுகிறாய் இரவில்

உலகின் மிக கடினமான
சூழலை உருவாக்கி விடுகிறது
நேசிக்கும் உயிரின் கண்ணீர் துளிகளும்
அதை தடுக்க இயலா கணங்களும்

உனக்கு ஆறுதல் சொல்லி
தேற்றி விட்டு கதறி
அழுகிறேன் உன் கண் நிறைத்த
நீர்த் துளிகளின் காரணமாய்
தனிமை இரவுகளில்

கண்ணீர் துளிகளுடன்
எனைத் தேடும் உன் நேசத்திற்கென
காலம் முழுதுமாய்
காத்துக் கொண்டுதானிருக்கிறது
உன் மீதான என் நேசம்

அந்த ஒரு இரவு
என் நினைவில் அகல வேண்டிய
அந்த கொடிய இரவு
அகலாமல் தானிருக்கிறது
ஆறா ரணமென....