
புன்னகையைக் கூட
எல்லோரிடமும் பகிர
கண்ணீரை வெகு சிலரிடம்
அந்த இரவு உன் கண்ணீரை
சுமந்திருந்தது
ஆறுதலாய் தலை கோதி
மடியிலடவே துடிக்கிறது மனது
அலைபேசி மௌனமே
கையறு நிலையென
வாய்க்கிறது எனக்கு
எப்பொழுதும் உன் கண்ணீர்
உனக்காக இருந்ததில்லை
ஏதாவது ஒரு வலியை
நட்பும் உறவும் தந்துவிட
வெடித்தழுகிறாய் இரவில்
உலகின் மிக கடினமான
சூழலை உருவாக்கி விடுகிறது
நேசிக்கும் உயிரின் கண்ணீர் துளிகளும்
அதை தடுக்க இயலா கணங்களும்
உனக்கு ஆறுதல் சொல்லி
தேற்றி விட்டு கதறி
அழுகிறேன் உன் கண் நிறைத்த
நீர்த் துளிகளின் காரணமாய்
தனிமை இரவுகளில்
கண்ணீர் துளிகளுடன்
எனைத் தேடும் உன் நேசத்திற்கென
காலம் முழுதுமாய்
காத்துக் கொண்டுதானிருக்கிறது
உன் மீதான என் நேசம்
அந்த ஒரு இரவு
என் நினைவில் அகல வேண்டிய
அந்த கொடிய இரவு
அகலாமல் தானிருக்கிறது
ஆறா ரணமென....
No comments:
Post a Comment