
கண்கள் சிரிக்க
சிந்தை மயங்கி கிடந்த
நடுக்கம் பெற்ற மனதில்
பயமும் மகிழ்வுமாய்
அந்த நொடிகள்....
விரல்கள் தீண்டினாய்
மென்மையாய் தூண்டிவிட்ட
தீபமாய் மாறி
எரியத் துவங்கினேன் ...
உனக்குள் நானும்
உணரும் நீயுமாய்
கலந்திட்ட காதலின்
முதல் சிலிர்ப்பு அது...
யாருக்கும் கேட்காமல்
நீ கொடுத்த முத்தத்தின்
மெல்லிய ஓசைகளை
உணரும் என் காது மடல்கள் ...
ஒற்றை விரலால் என்
முகத்தில் நீ எழுதிய
கவிதைகளின் பொருள்
இன்னும் தேடி அலைகிறேன் நான்...
கழுத்தின் உதடு வருடல்கள்
முதுகில் வரைந்த ஓவியங்கள்
சிவந்து போன கன்னங்களுடன்
மயங்கும் விழிகளில்
நீங்கா கனவுகள்...
ஈரக் கூந்தல்
விரல் நுழைத்து
உச்சி முகரும் அந்த நொடியில்
உணர்வுகள் தடுமாறும்...
உடலெங்கும் நனைத்தது
வியர்வையா
உன் முத்தங்களா
ஐயம் கொண்டு இதழ் வெடிக்கும்...
உடைகள் பாரமென
பாரங்கள் சுகமென
பயமொன்று உள் நுழைய
வெளியேறுகிறது மீதமான
தயக்கமொன்று...
வெட்கத்தால் முகம் சிவக்கும்
என்னை முழுதுமாய்
சிவக்க வைக்கும்
கலை ஒன்றை எப்படி
அறிந்தாய் ...
அனுமதி கோரும்
பார்வையில்
அந்த அரைநொடி கணமொன்றில்
புன்னகையால் சம்மதம்
தருகிறேன் நான் ...
தங்கஆபரணங்கள் நீக்கி
உயிரை அணிகிறாய்
குழைந்த தேகத்தில் அவிழ்கின்றன
இன்ப முடிச்சுகள் ஒவ்வொன்றாய்
ஒரு மெல்லிசையின் தேடலென...
கொடுத்தலுக்கும்
பெருதலுக்குமான போராட்டங்கள்
பந்தயக் குதிரைகளென
வேகமான மணித் துளிகள்
அனலடிக்கும் குருதியின்
அடங்காத தொடக்கமாய்..
இன்பமும் வேதனையும்
கலந்த இடமொன்றில்
இருளும் ஒளியும்
சங்கமித்த காலம்
கண் மூடிய ஏகாந்தம்...
உடல் சிலிர்த்து
நீயடங்கும் வேளையில்
இறுகி கொள்ளும்
கைகளை பிரித்து விட
நிமிடங்கள் போதுமானதாக இல்லை...
வெப்பப் பெருமூச்சில்
உனை அணைத்து
விரலால் தலை கோதி
நெற்றியில் நான்
தந்த முத்தத்தின் ஈரம்
என் உதடுகளில் இன்னும்
எஞ்சியிருக்கிறது உனக்கென ...