பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 22, 2011

நினைவுகளின் மிச்சத்தில்


ஒவ்வொரு நாளின்
முன்னிரவுப் பொழுதுகளில்
நான் விழித்திருக்கக் காரணம்
நீயாகவும் இருக்கலாம்....
இதுவும் கடந்து போகும்
நிலையில் இல்லை நான்
எதையும் இழக்கா
நினைவுகளின் மிச்சத்தில் ...
இதே தெருவில் ஆயிரம் முறை
நடந்தவன் தான்
நீ இல்லாத இந்த நாட்களில்
கொதித்துக் கிடக்கிறது
தெருவும் நீ நடந்த இதயமும் ...
உறக்கம் தொலைக்கும் இரவுகளில்
நிலவை ரசிக்கும் மழலையாய்
உன் நினைவுகளை
ரசிக்க பழகி விட்டேன்
ஒரு வேளை நீயும்
வாழ்வின் விதிகளால் கட்டுண்டு
அதே தெருவில் விட்டு
வந்திருக்கலாம் எனக்கான உன்னை..






Aug 13, 2011

மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?


ஆகவே தான் கேட்கிறேன் நீங்கள்
மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா என்று?
அவர்கள் எப்பொழுதும்
நிலைத் தன்மையையும்
நம்பிக்கையையுமே எதிர் பார்கின்றனர்
நானோ சாகசத்தையும்
தெரியாத புதிரையும்...
நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்
நானும் உங்களை..சரி தானே!
தோழமை உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்றால்
"ஆமாம்" என்பேன்
நீ இல்லாமல் தனியாக வாழ முடியுமா என்றால்
அதற்கும் "ஆமாம்" என்பேன்...
ஆண்களே எப்பொழுதும்
ஒரு வீட்டை நிர்வகிக்க
காதல் செய்ய
குழந்தைகளை வளர்க்க
பணம் சம்பாதிக்க
வெற்றியாளராக விளங்க
அனைத்துமாய் எதிர் பார்க்கப் படுகிறான்..
உங்கள் நாடி நரம்புகளில்
பரவசம் ஓடிக் கொண்டிருக்க வேண்டுமென்பதே
உங்கள் விருப்பமாய்...
ஆனால் அதில் ரத்தம் தான்
ஓடிக்கொண்டிருக்க வேண்டுமென்பதை
மறந்து விடுகிறீர்கள்...
நான் வற்புறுத்தினால்
எப்பொழுதும் இல்லாத ஒன்றைப் பற்றி
அதிக பணமும் சுதந்திரமும் வேண்டும் இல்லத்தரசி
காதலியை இழந்து விடுவோமோ என
பயந்து கொண்டிருக்கும் காதலன்
விரும்பிய பேரத்தை முடிக்காத வியாபாரி
பாடகராக விரும்பும் வைத்தியர்
அரசியல்வாதியாக விரும்பும் பாடகர்
விவசாயியாக விரும்பும் எழுத்தாளன்
இப்படி என்னவெல்லாமோ...
ஆகவே உங்களை மீண்டும்
ஒருமுறை கேட்கிறேன்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

Aug 12, 2011

இரோம் ஷர்மிளா


நேற்று ஒரு பதிவை கணினியில் எழுதிக் கொண்டிருந்த பொழுது தோழர் சந்தோசு செல்வா அரட்டையில் வந்தார்... பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம், சேகுவேரா, ஈழத் தலைவர் பிரபாகரன் ஆகியோரை பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது " மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா பற்றி சொன்னார்.. மிக சமீபத்தில் ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் வாசித்த நினைவு வந்தது... நாம் அனைவரும் விளம்பரப் படுத்தப் பட்ட அன்னா ஹசாரே போன்றோரை மட்டுமே தூக்கிப் பிடித்து கொண்டிருக்கிறோம்... வட கிழக்கு மாநிலங்களில் இந்திய பேரினவாத அரசு எப்பொழுதும் முறைகளையே கையாண்டு வருகிறது.. நாம் இந்தியாவின் வடகிழக்கு மாநில முதல்வர்களின் பெயர்களைக் கூட தெரிந்து வைத்திருக்கப் போவதில்லை... இங்கே இரோம் ஷர்மிளா குறித்த சில தகவல்கள்....

"மணிப்பூர் அயர்ன் லேடி" அல்லது "Menghaobi" என்று அழைக்கப்படும் ஷர்மிளா(மார்ச் 14, 1972 இல் பிறந்தார்,பெற்றோர் கேட்ச் நந்தா (தந்தை), Ongbi சக்தி (அம்மா) ஒரு சிவில் உரிமைகள் ஆர்வலர், அரசியல் ஆர்வலர், மற்றும் கவிஞர் . அவர் முதல் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வன்முறை சட்டங்கள் இது ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம், 1958 (AFSPA), நீக்கப் பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக உணவு மற்றும் நீர் மறுத்து, அவர் "உலகின் மிக நீளமான பசி" என்று அழைக்கப்படுகிறார்.

நவம்பர் 2,2000 தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பத்து அப்பாவி மக்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் எனும் இந்திய துணை ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர்."மலோம் படுகொலை" என்று அழைக்கப்பட்ட இந்த கொடிய நிகழ்வு இந்திய வன்முறை ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப் படவே இல்லை. அக்கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தண்ணீர் இன்றி போராட்டத்தை துவக்கினார் ஒரு கால்நடை தொழிலாளியின் 28 வயது மகள். அவர் இரோம் ஷர்மிளா.

அவர் உண்ணா விரதம் தொடங்கிய மூன்று நாட்களுக்கு பின்னர், போலீஸ் மூலம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 309 கீழ் சட்டவிரோத "தற்கொலைக்கு முயற்சி", என்கிற பேரில் கைது செய்யப் பட்டார் , பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை வேகமாக சீரழிந்து, காவலில் பின்னர் வலுக்கட்டாயமாக உயிரோடு வைக்க nasogastric செருகல் பயன்படுத்த பட்டது . அதிலிருந்து IPC பிரிவு 309, இன் கீழ் ஒவ்வொரு ஆண்டும், ஷர்மிளா கைது செய்யப் படுவதும் வெளியே விடப்படுவதும் வழக்கமாகிப் போனது. மீண்டும் கைது "தற்கொலை முயற்சிகள்" [அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து] ஒரு வருடம் நீட்டிக்க மீண்டும் மீண்டும் தண்டிக்கப் பட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் 2000 ல் இருந்தது "காலவரையறையின்றி ஒரு கிளர்ச்சி" என்ற சந்தேகத்தின் பேரில் எந்த குடிமகனையும் தடுத்து அனுமதிக்கும் AFSPA,. சட்டம் எதிர்ப்பு மற்றும் சித்திரவதை, மனித உரிமைகள் மறுத்தல் , கட்டாய காணாமல் போதல் ஆகியவற்றை பொது மக்களிடையே கடைப்பிடித்து வருகிறது.


அவருக்கு 2005ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்க சிபாரிசு செய்ய ஒரு மகளிர் அமைப்பு கோரியது.அவருக்கு "அமைதி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் உயர்வு மற்றும் வாதிடும் செயல்படும் ஒரு சிறந்த நபர் அல்லது குழு," இது மனித உரிமைகலுக்கான Gwangju பரிசு 2007 இல் வழங்கப்பட்டது."மக்கள் காவல் துறையினர்" என்ற லெனின் "ரகுவான்ஷி" விருதை பகிர்ந்து மனித உரிமைகள் குழு.

28 நவம்பர் 2010 அன்று, பிரிட்டன் பசுமை கட்சி தலைவர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கெய்த் டெய்லர் ஷர்மிளா கோரிக்கையான AFSPA நீக்கப்பட வேண்டும் என இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இது போன்ற தேவதைகளும் இந்த மண்ணில் பிறந்தது துயரப்படவே தவிர வேறெதற்கும் இல்லை. வணங்குகிறேன் தோழி.

நன்றி தோழர் சந்தோசு செல்வா... இந்த தோழியின் புகைப்படத்தை உங்கள் முகவரியாக கொண்டதற்கு...

Aug 11, 2011

நினைவு காலங்களில்....






நினைவிருக்கிறதா?
இல்லை நினைவு படுத்திக் கொள்ள என்னைப் போலவே காலத்தின் ஏணிகளில், வருடப் படிக்கட்டுகளில் கிழிறங்கி தயக்கமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயா?... மனிதன், வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் எத்தனையோ இருந்தாலும், எல்லோருடைய நினைவிலும் நிச்சயம் இருக்கும் அந்த பருவ கால ஈர்ப்பு, காதலின் ஞாபகங்கள் என்றும் பசுமையாக.. என் மனமும் விரிகிறது உனக்காக வாழ்ந்த அந்த சில காலங்களின் இனிமையான கனவுகளில்....

கண்களின் கண்கள் சந்தித்தோ, குரல் கேட்டு மயங்கியோ தொடங்கவில்லை நம் உறவு... நமக்கான தொடர்பை உறவேன்றே நம்புகிறேன், நட்பென்றும் காதலென்றும் சொல்ல இயலாது.. நீ அனைத்தும் கடந்து என்னில் நிலை பெற்றவள். உறவென்றே இருக்கட்டும் அதில் தான் சொல்ல முடியா அத்தனை பந்தங்களும் இருக்கின்றன.

சரியாக இயங்காமலோ, இயக்கத் தெரியாமலோ என்னை அழைத்தாய்... நான் பழுது நீக்குபவன் தொலைபேசி இயந்திரங்களை... எத்தனை சொல்லியும் புரியவில்லை உனக்கு... வேறு வழி இல்லை என்று பதினைந்து நிமிட நடைக்குப் பின் அடைந்தேன் உன் அலுவலகம், வியர்த்த முகத்துடனும் அதில் நனைந்த உடையுடனும்...

நான் சரி பார்க்கும் பொழுது சரியாகவே வேலை செய்தது உன் தொலை பேசி. கோபம் இருமடங்காய் மாற, கொட்டி விட்டு வந்தேன் நெருப்பில் கலந்த வார்த்தைகளை... திரும்பி என் அலுவலகம் வருகையில் அலறிக் கொண்டிருந்தது என் தொலை பேசி, கையிலெடுத்து செவி மடுக்க " மன்னியுங்கள்" என்றாய், உன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு...

தொடர்ந்து வந்த நாட்கள், இதோ இதனை மகிழ்வும் வேதனையும் எழுத காரணமானவை. எனக்கென நான் கனவுகண்ட பெண்ணின் சாயலோடு என்னில் நுழைய நினைக்கிறாய் அன்று. விருப்பங்கள் கேட்டாய், பிடித்த திரைப் படம், வண்ணம், எழுத்துகள், பாடல்கள், பாரதி எல்லாமும்... இறுதியில் கேட்காமல் கேட்டாய் " உன்னை எனக்கு தருவாயா?" என....

என் மீதான உன் அன்பு என்னை எப்படி சலனப் படுத்தியது என்று தெரியுமா உனக்கு? என் புகை பிடிக்கும் பழக்கத்திற்காக நீ பட்டினி கிடந்த நாட்கள், இருந்தாலும் அழைப்பாய்!! சரியான நேரத்தில் நான் உண்ணுவதை அறிந்து கொள்ள...சொல்லிக் கொண்டே இருந்தேன் நீ ஏமாந்து விடுவாய், தூக்கி எரிந்து விடுவேன் என்று... நீ நம்பவில்லை நான் பலவீனமானேன் உன்னிடம்...

உனக்கும் கவிதைகள் பிடித்திருந்தது... சிலவற்றை எழுதி என்னிடம் கொடுப்பாய், பெரும்பாலும் காதல் கவிதைகள். எண்ணங்கள் ஒன்றாகி ஒரே பாதையில் பயணிக்கத் தொடங்கிய காலம் அது. தினமும் என்னை கடக்கும் பொழுது புன்னகைத்தபடியே செல்கிறாய். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் வேளையொன்றில் கேட்டாய் " என்னிடம் சொல்ல நினைத்து சொல்லாத விஷயம் ஏதாவது இருக்கிறதா என்று?" மௌனமாய் இருந்தேன், புரியாமல் இல்லை... ஆனால் உன் அளவிற்கு அன்பு செலுத்த முடியுமா என்னால்? மனதில் மட்டும் ஏனோ இனம் புரியா ஆரவாரம்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது, உனக்கு வேறு ஒரு இடத்தில் வேலை கிடைத்திருப்பதாக சொன்னாய், மகிழ்ச்சியில் வாழ்த்தினேன். என் மகிழ்ச்சியில் நீ துயருற்ற தருணம் அது. சமாதானம் செய்யவே போராட வேண்டி இருந்தது.கவலையின்றிப் போ நானிருக்கிறேன் என்று சொல்ல வந்த வார்த்தைகளை உமிழ் நீரோடு விழுங்கிக் கொண்டேன். ஆறுதல் சொல்லும் நேரமெல்லாம் நீ அழுகைக்கு தயாராகி கொண்டிருந்த நிமிடங்கள் அவை.

இறுதியாய் அந்த நாள், நீ என்னையும், நான் உன்னையும் பார்த்துக் கொண்ட இறுதி நாள். என்னை காத்திருக்க சொல்லி விட்டு வந்தவுடன், தேநீர் விடுதிக்கு அழைத்தாய். இருவரும் அருகருகே நடந்த முதல் நாள் அன்று. எதிர் படும் பார்வைகளில் கிண்டல். உன் கண்களில் நீர். ஏதாவது பேசு என்று சொல்லி நான் பேசிக்கொண்டே இருக்க நடந்தோம். உன் மனதின் வேதனையை உணர்ந்தும் மௌனமாய் நானும் கூடவே...
தேநீர் விடுதிக்கு மிக அருகில் வந்ததும் வேண்டாம் திரும்பலாம் என்றாய்...ஏன் என்றேன்.. ஒரு வேளை நாம் தேநீர் அருந்தும் பொழுது நான் உன் எதிரில் அமர்வேன், உன் கண்களை நேரடியாக சந்திக்க வேண்டியிருக்கும் என்றாய். அது என்னால் முடியாது, இன்னும் அதிகமாக வேதனை தரும் நிகழ்வு என்றாய். என் அருகில் அமர்வாய் எனில் வருகிறேன், இல்லையெனில் வேண்டாம் எனச் சொல்ல, சிதறிப் போனது இதயம்... திரும்பி நடந்தோம்...

பேருந்து நிறுத்தத்தில் உனக்கான பேருந்து இல்லை. வேறு ஒரு பேருந்தில் ஏறி உன்னை பேருந்து நிலையத்தில் விட வந்தேன். பின்னால் அமர்ந்த என்னை, உன் கண்களாலேயே அருகில் வா என்றாய். அந்த நொடியில் நீ சொல்லுவதை செய்ய வேண்டும் போலிருந்தது எனக்கு. உன் வலிகளை குறைக்க வேறு என்ன வழிகள் இருக்கிறது.உன் அருகில் அமர்ந்தவுடன் என் தோள்களில் தலை சாய்த்தாய், உன் கண்ணீர் என் தோள்களில் வழியத் தொடங்கியது. நீ எனக்கானவள் ஆகியிருந்தாய் அந்த நொடியில்...


பேருந்து நிலையம். சற்றே அதிகமான உன் அழுகை இப்பொழுது, அதை மறைக்கும் முயற்சியில் நீ தோற்றுக் கொண்டிருந்தாய். அழுகையின் உச்சம். அப்பொழுதும் கேட்டாய் அதே கேள்வியினை... " "இப்பொழுதாவது சொல்! என்னிடம் சொல்ல நினைத்து சொல்லாத விஷயம் ஏதாவது இருக்கிறதா என்று". நான் அன்று போலவே இன்றும் மௌனமாகிறேன். என் பைத்தியகாரத் தனத்தை என்னவென்று சொல்ல... தலைகுனிகிறேன் உன்னை நேரில் சந்திக்க துணிவில்லை எனக்கு..


பேருந்து வந்தது, உள் சென்று மீண்டும் பார்த்தாய் ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்த படி. ஆயிரம் அர்த்தங்கள், பரிதவிப்புகள், வலிகள், எதிர்பார்ப்புகள் என ஒன்றாய் கலந்த அப் பார்வை.. காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. நகர்ந்து செல்ல துவங்கியது பேருந்து... நீ என்னை பார்த்த இறுதி நொடிகள் மனதில்... அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த என் கண்ணீர் கரை தாண்டத் தொடங்கியது எனக்கு. தவறு செய்தவன் போல் புலம்புகிறேன் தினமும்...

இன்றும் சற்று நேரத்தில் விடிந்து விடும், நானோ சிவந்த விழிகளுடன் கடமையென துவங்குகிறேன் என் இன்னுமொரு நாளை. மீண்டும் சந்திப்போமா?. ஆனால் எங்காவது கவிதை வாசிக்கும் பொழுதோ, பேருந்தில் பயணம் செய்யும் பொழுதோ கூடவே வரும் உன் நினைவுகளும்... நீயும் இதே போல் ஒரு நிலையில் இருந்துவிடக் கூடாது என வேண்டுகிறேன். என் நினைவு காலம் முழுதும் உன்னில் இருக்க வேண்டுமென விரும்பியவன் தான்.. ஆனால் இனிய நினைவுகள் கூட வலி மிகுந்தவையே... வலிகளும், வேதனைகளும் என்னோடு போகட்டும்...

எனக்காக நீயும்
உனக்காக நானும்
வாழ்ந்த அந்த காலங்கள்!!!
கடந்து போய்விட்டால்
என்ன?
வாழ்ந்து கொண்டே தான்
இருக்கிறேன்
நீ விட்டுப் போன
நினைவு காலங்களில்....