பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 29, 2013

கொடுமணல் - ஒரு பயணம்.



           நேற்று மாலை நானும் குக்கூ சிவாவும் மாலையில் பேசிக் கொண்டிருந்த போது, எந்த வித திட்டமுமின்றி நண்பா கொடுமணல் போகலாம், வண்டிய எடுங்க என்றார். இது தான் சிவாவின் சிறப்பே. என்ன முடிவு செய்கிறோம், எப்போது முடிவு செய்கிறோம் என்பது அவருக்கே தெரியாது. அதுவும் மாலை 4.30 க்கு மேல் என்பது குறிப்பிடத்தக்க விசயம். சரி என்று கிளம்பியாயிற்று. ஊத்துக்குளியிலிருந்து சென்னிமலை செல்லும் பாதையில் சென்று, கொடுமணல் என்று வலதுபுறம் திரும்பிய பாதையில் சிறிது தொலைவு சென்றதும் முதலில் நாங்கள் பார்த்தது பாதையின் இடதுபுறத்தில் மக்களால் கைவிடப்பட்ட ஒரு சுதைசிற்பக் கோயில். சமணர் காலத்துக் கோயிலாக இருக்க வேண்டும். வழக்கம் போல் அது சித்தாந்தங்கள் மாற்றப்பட்டு இந்துக் கோயிலாக உருமாற்றம் பெற்றிருந்தது. உடைந்து கிடைந்த கதவுகள் மற்றும் கோயிலின் உட்புறத்தில் விரவிக் கிடந்த குப்பைகள் யாரும் வந்து போவதில்லை என்பதை சொல்லிக் கொண்டிருந்தது. கோபுர வேலைப்பாடுகளும், முன்சுவரில் இருந்த இரு உருவங்களும் அழகானவை. நிச்சயம் பாதுக்காக்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பினும் மக்களாலும் அரசாலும் கைவிடப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று.
 முதல் கோயிலின் கோபுரம்

     பக்கத் தோற்றம்
 
 
முன்பக்கத் தோற்றம்.       

அங்கிருந்து கிளம்பி கொடுமணல் செல்லும் பாதையில் சென்றோம்.அங்கு சென்று சரியான பாதையை விசாரித்துக் கொண்டு செல்கையில் அங்கும் ஒரு சுதைக் கோயில். அது புணரமைக்கப்படவில்லையெனும்போதும் கைவிடப்படவில்லை. அதற்கு அருகில் வேறு சிறு கோயில் ஒன்றை உருவாக்கி இருந்தார்கள். மின்வசதி இருந்தது. மக்களின் வழிபாட்டில் இன்னும் தொடர்கிறது. இக்கோயிலில் முன்சுவரில் இருந்த ஆண், பெண் உருவங்கள் பிரம்மாண்டம். இக்கோயில் அக்கிராம மக்களால் தூய்மையாக பேணப்படுகிறது. இந்த இரண்டு கோயில்களும் ஏறக்குறைய சமகாலத்தவையாக இருக்கக்கூடும். முன்சுவரில் இருந்த உருவ அமைப்புகள், கோபுரம், உட்புறம் என எல்லாமே ஏறக்குறைய ஒரே மாதிரியான அமைப்புக் கொண்டவை.
 முன் சுவரிலிருக்கும் பெண் உருவம்:

முன்சுவரிலிருக்கும் ஆண் உருவம்:


          அதற்குப் பிறகு சுமார் இரண்டு கி.மீ தொலைவில் இருக்கிறது தொல்லியல் துறையால் ஆராய்ச்சி செய்யப்பட்ட இடம். நொய்யல் நதி கரையோரம் முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம் இப்போது மூடப்பட்டு சமதளமாக வெறும் மண்பரப்பாக காணப்படுகிறது. அங்கு அகழ்வாராய்ச்சி நடந்தது என்பதைக் குறிக்கும் எந்தவித அறிவிப்புப் பலகைகளும் இல்லை. ஆனால் உடைந்து கிடக்கும் பலநூற்றாண்டுகளைக் கடந்த மண்பானையின் சிதிலங்கள் அங்கு சிதறிக் கிடக்கின்றன. யாரும் கவனிப்பாரில்லை. சிறிது நேரம் அவ்விடத்தில் உலவி விட்டு திரும்புகையில் அருகிலிருக்கும் வீட்டின் முன் பெரும்குவியலாக் கிடந்தது இதே போன்ற பானை சிதிலங்கள். அப்படியானால் எத்தனை பானைகள் இங்கு இருந்திருக்கும் என்று மனம் கணக்கிடத்தொடங்கியது.
அடுத்தாக அதற்கு எதிர்புறத்தில் கற்களால் ஆன வீடு போன்ற அமைப்பு இருந்தது. மேல் கல் அகற்றப்பட்டிருக்க வேண்டும். அப்பகுதி இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு புறத்திற்கும் ஒரே ஒரு கல்பலகை. அவ்வளவு பெரியதாக எப்படி உருவாக்கினார்கள் என்பதே அதிசயமாக இருந்தது. அதில் பாதி மண்ணில் புதையுண்டும் மீதி வெளியிலும் இருந்தது. ஒரு புறம் மட்டும் ஒரு ஆள் நுழையும் அளவில் துளையிடப்பட்டிருந்தது. கல்லில் இது எப்படி சாத்தியம் என திகைத்துப் போனேன். 
 
சரியான அளவில் இரு அறைகளுக்கும் தனித்தனியே தனித் தனியாக. அதற்கு அருகில் இரு பெரிய பாறை கற்பலகைகள் நடப்பட்டிருந்தன. சிவா ஆச்சர்யம் தாளாமல் தன்னை விட உயரமாக இருந்த அக்கல்லை அணைத்துக் கொண்டார். அவர் ஏறக்குறைய சிலநூற்றாண்டுகள் முன்னோக்கிச் சென்று பிறகு நினைவு பெற்றிருக்கக்கூடும். அதற்கும் அருகில் ஒரு விவசாயம் செய்யப்படாத நிலத்தில் கற்கள் பெரிதும் சிறிதுமாய் கொண்டு ஒழுங்கான வட்டவடிவில் ஒரு அமைப்பு இருந்தது. அங்கு சென்று பார்த்த போதே தெரிந்தது அதுவும் பலநூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது என்று.
 

          
 

அங்கிருந்து கிளம்புகையில், உடைந்த பானைத் துண்டுகளில் சிலவற்றை சேகரித்துக் கொண்டோம். பளீரென இருந்த இரு வெங்க கற்களும். திரும்பி வந்ததும் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம் தான். நூறு ஆண்டுகள் கடந்தாலே நினைவுச் சின்னமாகக் கொண்டாடும் அயல்நாடுகள் இருக்கையில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வை அறிவிக்கும் அற்புதங்கள் பற்றி சிறிது தூரத்தில் வசிக்கும் நம்மக்களுக்கு தெரிவதே இல்லை. அதுவும் அந்த கற்பலகைகளால் ஆன வீடு போன்ற அமைப்பு யாராலும் கண்டு கொள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்கிறது. அதன் முக்கியத்துவம் குறித்து அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு நிச்சயம் தெரியும். ஆனால் அவர்களுக்குத் தேவையெல்லாம் நம்முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள், தங்க, வெள்ளிக் காசுகள், பட்டு போன்றவை மட்டுமே. மற்றவையெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அது தான் தமிழகமெங்கும் அனாதையாய் இன்று நிற்கும் பல சுதை கோயில்கள், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்கள் ஆகியவற்றின் நிலை. 



         இன்று காலை இதைதட்டச்சு செய்ய்து கொண்டிருக்கும் வேளையில் என் நினைவிலிருப்பதெல்லாம், தங்கமும், வைர, வைடூரியங்களும், மணிகளையும் எடுப்பதற்காக தோண்டி பின் வெற்று மண் பரப்பாக கிடக்கும் இடத்தின் புழுதிமண் வாசம் மட்டுமே. சிதிலமடைந்த மண்பானைத் துண்டுகளின் ஒழுக்கமற்ற உருவங்கள் மட்டுமே. ஒரு மனித நாகரீகத்தை தன்னுள் புதைத்து இப்போது நீரின்றி வறண்டு கிடக்கும் நொய்யலின் வழித்தடம் மட்டுமே. யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு எது தேவையோ அதற்காக மட்டுமே அவர்கள் வருகிறார்கள். கொடுமணல் கிராமத்தில் இப்பொழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள் அவர்களில் எத்தனை பேருக்கு அவ்விடத்தின் நூற்றாண்டுகால தொன்மை, தொழில்நகரமாக விளங்கிய கொடுமணலின்
அருமை தெரியுமென்று தெரியவில்லை. அதற்கு அம்மக்கள் எந்தவகையிலும் பொறுப்புமில்லை. தொன்மை தெரிந்தும் கைவிட்ட அரசைத் தவிர.

-------------------------------------------------------------------------------------------------------------
 **** பிறகு கொடுமணல் பற்றிய இணையத் தேடலில் கிடைத்த சில தகவல்கள் உங்களுக்காக. 

--------------------------------------------------------------------------------------------------------------





      கொடுமணல் தொல்லியல் களம்  இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்நொய்யல் ஆற்றின்  வட கரையில்ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் அமைவிடம்சங்ககாலச் சேரநாட்டின் தலை நகரமான  கரூரைமேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில்  இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய அடக்கக் களமாகக் காணப்படுகின்றது. இதனை அண்டிச் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.
இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன.

புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் புதுப்பிக்கப்பட்ட, சமீபத்திய முறையிலான அகழ்வாராய்ச்சி ஒன்றை நடத்தியது. அதனை முன்னின்று நடத்தியவர்களுக்கு மிகச் சிறந்த செல்வச் செழிப்பான தொல்பொருட்கள் தற்போது கிடைத்துள்ளன.

ஆராய்ச்சியின்போது, நான்கு அகழிகளில் வைக்கப்பட்டிருந்த தொல் பொருட்கள், கி.மு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். அப்பொருட்கள், சிக்கலான தொழில் துறை அமைப்பை வெளிப் படுத்தியுள்ளன. தொழில் பொருட்களான, இரும்பு மற்றும் எஃகு, நெசவு, கல், காமதகம், விலை உயர்ந்த குண்டு மணிகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான வளையல்கள், மாணிக்கம் போன்ற கற்கள், இரத்தின கல் வகைகள்ஓனிக்ஸ்ஐவரி, காணீலியன் மற்றும் கருப்பு-பூனைக் கண் போன்ற விலை மதிப்பிலாத பல பொருட்கள் கிடைத்துள்ளன.

இப்பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளில் வைக்கப்பட்டிருந்தவை ஆகும். அப்பானைகள், மங்கல் சிவப்பிலான நிறத்தைக் கொண்டவை ஆகும். பருத்தி இழைகள் மற்றும் மெல்லிய தங்கத்தினாலான இழைகளால் நெய்யப்பட்ட மேற்பரப்பை கொண்டிருக்கின்றன. அவற்றில் 30 பானைகள் தமிழ் எழுத்துருவான பிராமி வரி வடிவங்களைக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் தனிப்பட்ட மனிதர்களுடைய பெயர்கள் ஆகும். அவை சப மகதாய் பம்மதன்’, ‘சாத்தன்’, ‘விசாகி’, ‘சிலிகன்’, ‘உரணன்மற்றும் திசன்ஆகியவை.

இதில் ஒரு ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால், பெரிய பானை ஒன்றில் தெளிவாகத் தெரியும் வகையில், ‘சம்பன் சுமணன்என்று பொறிக்கப்பட்டுள்ளது. பெயர் எழுதியிருக்கும் வரி வடிவமானது, தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ்-பிராமிஎழுத்துரு வடிவமாகும். (பிராமி எழுத்துருவைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு: பிராமி_எழுத்துமுறை)

இவ்வகழ்வாராய்ச்சியின் இயக்குனரான கே.இராஜன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசியர் ஆவார். அவர் தரும் தகவல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றது.
இதில் ஒரு சிறப்பம்சம் என்வென்றால் கொடுமணல், முழுமையான தொழில் நகரமாக இருந்திருக்க வேண்டும். இப்பகுதியில், குறிப்பிடத்தக்க அளவு கூட இல்லாத, மிகச்சிறிய அளவே விவசாயம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. இது மாதிரியான தொழில்துறை வளம் மிகுந்த பகுதிகளில் இவ்வளவு ஆவணங்கள் இதற்கு முன்பு கிடைத்ததில்லைஎன்கிறார். மேலும் கூறும்போது, “இதற்கு முன்பு பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட தமிழ் சங்கப் பகுதிகளாக விளங்கிய கொற் கை, பூம்புகார், கரூர், உறையூர், அழகன்குளம் மற்றும் பொருந்தல் போன்ற பகுதிகளில் கூட பெரிய அளவில் தமிழ்-பிராமி எழுத்துருக்களைக் கொண்ட பானைகள் காணப்படவில்லைஎன்றார்.

சம்பன்-சுமணன்என எழுதப்பட்டிருக்கும் பெரிய பானை, கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அப்பானை, நான்கு அகழிகளின் நடுவில் இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில பானைகளில், ‘சம்பன்என்றோ அல்லது, ‘சுமணன்என்று மட்டும் எழுதப்படிருந்தது.

சம்பன்என்பது தந்தையின் பெயராகவும், ‘சுமணன்என்பது மகனைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்கிறது ஆய்வு செய்த குழு.எனவே, இத்தொழிற்பகுதி சம்பனுடைய குடும்பத்திற்கு சொந்தமானதாக இருந்திருக்கலாம்.

டாக்டர்.இராஜன் மற்றும் அவரது குழுவினர் மேலும் தோண்டியபோது, பழங்காலத்தில் புனித பொருட்களை வைக்கும் கல்லால் செய்யப்பட்ட பெட்டியும், கல்லறை போன்ற அமைப்பினையும் கண்டுபிடித்துள்ளனர். இப்பெட்டிகள் கிரானைட் கற்களால் செய்யப்பட்டவை. கற்களால் ஆன மூடிகளைக் கொண்டுள்ளன.மேலும் கிடைத்த சில பெட்டிகளில், உடைந்த எழும்புத் துண்டுகள் இருந்தன. இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தும் பொருட்களாக, நான்கு ஜாடிகள், மோதிரம் மற்றும் சிதைந்த காணீலியன் மணிகள் கிடைத்தன.
புனித பொருட்களை வைக்கும் பெட்டியில் வரையப்பட்டிருக்கும் அம்புக்குறிக்கான அர்த்தம் தெரியவில்லை.மேலும், அப்பெட்டிகளில் கற்று புகும் அளவிற்கு சிறு துளைகள் இடப்பட்டிருந்தன.

தொழிற்பகுதியில் தண்ணீர் உபயோகத்திற்கான வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருக்கின்றன. அவை, இரத்தினக்கற்கள், சிறுமணிகள், நீலக்கல், காமேதகம் ஆகியவற்றை தயார் செய்ய பயன்படுத்தியிருக்க வேண்டும்.
நீலக்கல், சிவன்மலை மற்றும் பெருமாள் மலையில் இருந்தும், கடல் நீர் வண்ணக் கல்லானது, படியூரில் இருந்தும், இரும்புத்தாது வெண்ணி மலையிலிருந்தும் வரவழைக்கப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இப்பகுதிகள், கொடுமணலில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருப்பவை.

மேலும் சில கற்கள், மகாராஸ்டிராவில் இருந்தும், ஆப்கானிஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டவை ஆகும். கொடுமணலில் அழகிய மணிகள் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின.

தஞ்சாவூரை சேர்ந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இதுவரை, 48 அகழிகள் மற்றும் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் 1985 , 1986 , 1989 , 1990 ஆகிய ஆண்டுகளில் படிப்படியாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் 1998 மற்றும் 1999 இல் மேலும் 15 அகழிகளைக் கண்டுபிடித்தது.

இராஜன் பேசும்போது, “கொடுமணலில் நடத்தப்பட்ட ஆய்வு, தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வாகும். இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான அகழிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதேயில்லை. வெவ்வேறு வகையான கல்லறைகள், வெவ்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததை பிரதிபலிக்கின்றன. மேலும், ‘திசான்’, ‘விசாகிபோன்ற பிராகிருத மொழிச் சொற்கள் தமிழ்-பிராமி எழுத்துருக்களில் பொறிக்கப்பட்டிருப்பது அக்காலத் தமிழர்கள் வடஇந்தியர்களுடன் கலாசார மற்றும் தொழில்ரீதியான தொடர்புகளை கொண்டிருந்தமையை நமக்கு அறிவுறுத்துகிறதுஎன்றார்.

கொடுமணலில் நடத்தப்பட்ட மேற்கண்ட ஆய்வு தமிழுக்கும், தமிழர்களுக்கும் மேலும் சிறப்பு சேர்ப்பதாய் உள்ளதுதானே?இதுபோன்ற ஆய்வுகள் தமிழக அரசால் பெரிய அளவில் முன்னின்று நடத்தப்பட்டால் சங்க கால தமிழ் மக்களின் வளமான வாழ்க்கை உலகமறிய வெளிச்சத்துக்கு வரும் என்பதே அலை செய்திகளின் கருத்தாகும்.
 

May 11, 2013

Peepli (Live) - ஒரு விவசாயியின் தற்கொலை



          கருப்பு நகைச்சுவை அப்படின்னு ஒரு வகையான திரைப்பட கதை சொல்லல் இருக்கிறது. ஹாலிவுட்டில் இது போன்ற படங்கள் அடிக்கடி வந்து பட்டைய கிளப்பும். அங்கு நாட்டின் அதிபர் முதல் யாரை வேண்டுமானாலும் நடுரோட்டில் இழுத்து வைத்து சந்தி சிரிக்க வைக்கும் இயக்குனர்கள் உண்டு. அப்படிப் பட்ட திரைப்படங்கள் இந்தியாவில் சில சமயங்களில் வருவதுண்டு. மிக அழுத்தமான ஒரு செய்தியை, நகைசுச்வை ததும்ப சொல்லுவது தான் கருப்பு நகைச்சுவை (பிளாக் காமெடி). அமீர்கான் தற்போது சமூகத்தின் சில அவலங்களை இது போல் நகைச்சுவை ததும்ப, சொல்ல வந்த கருத்தை சுவையாகவும் சொல்லும் படியான சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். அப்படி ஒரு படம் தான் “பீப்ளி (லைவ்)”. இது அவரது இயக்கம் அல்ல, ஆனால் தயாரிப்பு.


        நம்ம தமிழ்நாட்டில் பாளையம், புதூர், பட்டி இப்படி முடியும் பல ஊர்கள் இருப்பது போல் மத்திய இந்தியாவில் பீப்ளி என்று முடியும் நிறைய கிராமங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு கிராமத்தில் நிகழும் கதை. கதை என்று எடுத்துக் கொண்டால் இன்றைய விவசாயிகளின் நிலை என்பது மட்டும் தான். அவர்கள் தங்கள் விவசாய நிலத்தை காக்க முயலுவதையும், தற்கொலை முடிவுகளையும், அதை இந்த அரசாங்கமும், பத்திரிக்கைகளும் எப்படி எதிர்கொள்கின்றன என்பது தான் காட்சிகளாக்கப்பட்டிருக்கிறது.

         நிலத்தை அடமானம் வைத்து விவசாயம் செய்யும் ஏழை விவசாயக் குடும்பம். தவணைத் தொகைகளை செலுத்தாமல் தவறி இருப்பதால், நிலத்தை விற்று விடுவோம் என அறிவுறுத்த, சொந்த நிலத்தையும், தன் குடும்பத்தையும் காக்கும் பொருட்டு, அரசாங்கம் விவசாயிகளின் தற்கொலைக்காக அறிவிக்கும் ஒரு லட்ச ரூபாயை பெற்றால் எப்படியாவது கடனை அடைத்து விடலாம் என தற்கொலை முடிவெடுக்கும் ஒரு எளிமையான விவசாயி மற்றும் அவரின் குடும்பம், கிராமத்தின் எளிய மக்கள் இவர்களே கதை மாந்தர்கள்.

           அடுத்தகாக மிக முக்கியமானது, பத்திரிக்கை உலகின் மீதான சாடல். உலகின் ஒருவர் இறந்தால் அது செய்தியல்ல, ஒரு குடும்பமே இறந்தால் காமிராவையும், மைக்கையும் தூக்கியபடி அங்கே வரும் கூட்டம், யாரோ ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தால் அது செய்தியல்ல, ஆனால் ஒரு பெட்டி கவிழ்ந்து மொத்தமாக இறந்து போனால் அங்கு சென்று செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை கூட்டங்கள்… இவர்கள் சாவையோ, இன்னும் பிற நிகழ்வுகளையோ தங்கள் வணிகத்திற்கான் செய்தியாகவே பார்க்கும் விதத்தை நச் என சொல்லி இருக்கிறார்கள். உணமையில் இன்றைய பத்திரிகை தர்மமும் இப்படித் தான் இருக்கிறது. பேருந்து எரிவதை படம் பிடித்துக் கொண்டே, இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று மைக் பிடிக்கும் கூட்டமாகவே பத்திரிக்கை உலகம் மாறி விட்டது.

         அடுத்து அரசாங்கம், மாநில அரசும், மத்திய அரசும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக் கொள்வதையும், காவல்த் துறையும், சட்டமும் சாதாரண மக்களுக்கு செயல்படும் விதமும், அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எப்படியெல்லாம் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள் என்பதையும் நகைச்சுவை பொங்க சொல்லியிருக்கும் படம் தான் “பீப்ளி லைவ்). 


          இனி படத்திலிருந்து, அக்கிராமத்திலிருந்து அருகிலிருக்கும் நகரத்தின் வங்கிக்கு செல்லும் தொடக்ககாட்சி, அது முடிந்ததும் வீடு, அங்கு கேட்கப்படும் கேள்வி எனத் தொடங்குகிறது. தங்கள் நிலம் பறி போவதைத் தவிர்க்க, அருகிலிருக்கும் அரசியல்வாதியை உதவிக்காக சந்திக்கச் செல்கிறார்கள் அண்ணனும், தம்பியும். அங்கு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசாங்கம் பணம் தரும் அதனால் செத்துப் போ என்று சொல்லி அனுப்புகிறார்கள். அதை கேட்டு தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். திருமணமாகத அண்ணன் இறந்தால் எதுவும் கிடைக்காது என்பதன் பொருட்டு, தம்பி தற்கொலை செய்வதாக முடிவாகிறது. அந்த விசயம் வெளியில் தெரிந்து, அதன் பிறகு நடக்கும் அட்டகாசங்களே திரைப்படமாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.

           முதலில் ஊடக வியாபாரிகள் வந்து அந்தக் குடும்பத்தை பேட்டி எடுத்து, எப்பொழுது தற்கொலை செய்யப் போகிறீர்கள், எப்படி தற்கொலை செய்யப் போகிறீர்கள் என்பதை நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்புகிறார்கள். அதன் பிறகு காவல்த்துறை பாதுகாப்புக்கு வருகிறது. அரசியல்வாதிகள் வருகிறார்கள். வழக்கம் போல் சிறுவயது நண்பர்கள், பக்கத்து வீட்டினர், குழந்தைகள் என அனைவரின் பேட்டிகளும் எடுத்து ஒளிபரப்பப் படுகின்றன. அரசியல்வாதிகள் சாதிப் பிரச்சனையாக மாற்ற முயலுகிறார்கள். அதிகாரிகளோ தற்கொலையைத் தடுப்பது தங்கள் கையில் இல்லை, அது காவல்துறையின் பொறுப்பு, நீதிதுறையின் பொறுப்பு என்று தட்டிக் கழிக்கிறார்கள். முதல்வர் முதல் பிரதமர் வரை அடுத்தவர் மீது பழியைப் போடுகிறார்கள். 

           இடையில், இந்த பத்திரிக்கை, டீவி கூட்டங்களால் நாடெங்கும் செய்தி பரவி விடுகிறது. கிராமம் திருவிழாக் கோலம் பெறுகிறது. கடைகள் முளைக்கின்றன. விவசாயின் ஒவ்வொரு அசைவும் படம் பிடித்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லோருக்கும் அவர் எப்பொழுது தற்கொலை செய்து கொள்வார் என்பது மட்டுமே தேவையாக இருக்கிறது. இடையில் ஒரு காலை நேரத்தில் மலம் கழிக்கச் செல்லும் போது அவர் கடத்தப்படுகிறார். எங்கே என்று எல்லோரும் குழம்பித் தவிக்கிறார்கள். அவரின் மலத்தைச் சுற்றி சுண்ணாம்புத் தூள் வட்டமிட்டு, இங்கு தான் அவர் கடைசியாக மலம் கழித்தார் என்பதை தொலைக்காட்சிக்காரர்கள் படம் பிடித்துக் காட்டும் போது, உண்மையில் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்பது விளங்குகிறது.

         கடத்தபட்ட விவசாயி இருக்குமிடம் தற்செயலாகத் தெரியவர, ஊடக்கூட்டம் அங்கும் குவிகிறது. அங்கு நடக்கும் எதிர்பாரா விபத்தில், அந்தப் பகுதி எரிந்து விட, இறந்த ஒருவரின் சடலத்தை எடுத்துக் கொண்டு, அது தான் அவ்விவசாயின் பிணம் என்று சொல்லி அலப்பறைகளோடு அதன் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. மெல்ல மெல்ல அந்த கிராமம் காலியாகிறது. இவர்கள் உருவாக்கிய குப்பை கூளங்களுடன் வெறிச்சோடிய கிராமத்தை காணமுடிகிறது. இறுதியில் மழிக்கப்பட்ட முகத்தோடு ஒரு நகரத்தில் கட்டிடத் தொழிலாளியாக அவ்விவசாயி வேலை செய்வது காட்டப்படுகிறது. கடந்த 1991 முதல் 2001 வரை 8 லட்சம் விவசாயிகள் தங்கள் கிராமங்களை, தொழிலைக் கைவிட்டு நகரத்தின் கூலிகளாக மாறி இருப்பதாகச் சொல்லி படம் நிறைவடைகிறது.

         உண்மையில் மக்களுக்கு எப்பொழுதுமே பரபரப்பான ஒரு நிகழ்வு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பத்திரிக்கை உலகமும், தொலைக்காட்சிகளும் ஏன் அரசியல்வாதிகளும் கூட அந்த பரபரப்பை தக்க வைத்துக் கொள்வதையே விரும்பிகிறார்கள். ஒரு விவசாயின் தற்கொலை என்பது ஒரு நாட்டின் கேவலம். அதை ஊடகங்களும், அதிகாரிகளும், அரசியவாதிகளும் எப்படி அனுகிறார்கள் என்பதை வெளிப்படையாக இது வரை யாரும் சொன்னதில்லை. இது அந்த வகையில் மிக முக்கியமான திரைப்படமாகவே இருக்கிறது.  இது போன்ற ஊடகங்களை, அதிகாரிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும் என்பதும், ஒரு சாதாரண விவசாயின் தற்கொலை முடிவென்பது, எந்த விதமான துயர நிலையை அக்குடும்பத்தில் உருவாக்கும் என்பதும் நாம் கவனிக்க வேண்டிய செய்தி.

          பருவமழை பொய்த்துக் கிடக்கும் இன்றைய சூழலில், வங்கிகளிடம் வாங்கிய கடனை, பிறரிடம் வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் நாடெங்கும் இருக்கிறார்கள். வெறும் எண்ணிக்கை, புள்ளி விவரங்களாக அரசாங்கமும், அதிகாரிகளும் பார்ப்பதை, பரபரப்புக்குரிய விசயமாக ஊடகங்கள் சித்தரிப்பதன் பின்னால் இருக்கும் விவசாயக் குடும்பத்தின் துயரங்களை யாருமே அறிவதில்லை. சிந்திக்க வேண்டிய விசயங்களை நாம் சுலபமாகக் கடந்து விடுகிறோம் என்பதும், ஒவ்வொரு விவசாயி கிராமத்தை விட்டு வெளியேறும் போதும் இழப்பு நமக்குத் தான் என்பது அறியாத வரை, இது போன்று நகரத்தின் கூலிகளாகக் குடியேறும் விவசாயம், நெசவு இன்னும் பிற பாரம்பரிய தொழில் செய்யும் மக்களின் வாழ்வை பழிவாங்கும் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருக்கிறோம் என்பதை உணர்ந்து வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கும். 

      இத்திரைப்படத்தில் வரும் எந்த ஒரு கதாபாத்திரத்தின் பெயரையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. ஏனென்றால் இதில் காட்சிப்படுத்தபடும் விவசாயி நாடெங்கும் இருக்கிறான். இதே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஊடகத்துறையினரும் தான் அவர்களின் சாவை வேடிக்கை பார்க்கிறார்கள். செய்திகளாக்குகிறார்கள். புள்ளி விவரங்களாக குறித்து வைத்துக் கொள்கிறார்கள். மற்ற எல்லோரையும் விட, நான் நேசிக்கும் ஊடகத்துறையின் மீது தான் எனக்கு கோபம் அதிகமாக இருக்கிறது. ஒரு தவறைச் சுட்டிக் காட்டி, மக்களோடு மக்களாக நின்று போராட வேண்டிய ஊடகத்துறை பரபரப்பு செய்திகளாக மாற்றி தங்கள் விற்பனையை, டி.ஆர்.பி யை உயர்த்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்கள் பாதிக்கப்படும் போது மட்டும் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் போராட வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

        நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு சமூக அவலம் எப்படி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டுமே தவிர, நடைபெறும் அவலத்தை பயன்படுத்தி எப்படி வாழ்வை ஓட்டுவது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் இத்திரைப்படம் மிக முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.

       ""இந்தப்படத்தில் அந்த மனிதன் தற்கொலை செய்து கொள்கிறானோ இல்லையோ, நிச்சயம் ஒரு விவசாயி இறந்து விடுகிறான் என்பதே உண்மை... ""


Apr 17, 2013

The Japanese Wife - Aparna Sen




 
இந்தியாவில் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் நிறைந்த ஒரு சிறுகிராமத்தின் கணக்கு வாத்தியாருக்கும், ஜப்பானின் ஒரு இளம் பெண்ணுக்குமான பேனா நட்பு, காதல், திருமணம், திருமணத்திற்குப் பின்னதான வாழ்வில், அவர்கள் அதற்கு உண்மையாக வாழும் வாழ்க்கை, இவையெல்லாம் வெறுமனே கடிதப் போக்குவரத்தும், மிகச் சில தொலைபேசி அழைப்புகள் மூலம் சாத்தியப்படும் என்று தோன்றுகிறதா? சாத்தியமே என்கிறார் அபர்னா சென். இவர் வங்காளத்தின் மிகமுக்கிய இயக்குனர்களில் ஒருவர். இதுவே ஜப்பானிய மனைவியின் ஒற்றை வரி கதை. குணால் பாசு இதே தலைப்பில் எழுதிய கதையை ஒரு திரைப் படமாக, இல்லை ஒரு திரைக் கவிதையாக மாற்றி காட்சிகள் வழியே ஓடவிடுகிறார் அபர்ணா சென்.(அக்கதையை இதுவரை நான் வாசித்ததில்லை. தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தால் குறிப்பிடலாம்). அதற்கு முக்கிய உறுதுணையாக இருப்பது ஒளிப்பதிவு. சுந்தரவனக் காடுகளில் பொழியும் மழையை, ஆற்றை, படகுப் போக்குவரத்தை, ஒரு சிறு கிராமத்தை, ஜப்பானின் சாதரணக் குடும்பத்தை அழகாகக் காட்டியிருக்கிறது.

ஒரு சிறுகிராமத்தின் கணக்கு வாத்தியார் செனமாய் சேட்டர்ஜியாக ராகுல் போஸ். ஜப்பானிய இளம் பெண் மியாகியாக ஜப்பானிய நடிகை சிகுசா டகாகு. இருவருக்கும் கடிதங்கள் மூலமான் நட்பு பின் காதலாக மாறி ஒரு நிலையில் இருவரும் கடிதங்கள் மூலமாகவே திருமணமும் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழத் தொடங்குகிறார்கள். ஒருவருவருக்கு ஒருவர் மிக உண்மையாக இது போல் வாழ சாத்தியமா எனும் எண்ணம் எழுகிறது தான், ஆனால் படம் முடியும் வரை அவ்வெண்ணம் தோன்றாது என்பது உறுதி. இதற்கிடையில் உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் கணக்கு வாத்தியார் (உறவினராக மெளஷிமா சேட்டர்ஜி), பின் அங்கு இளம் விதவையாக தன் மகனுடன் வந்து சேரும் சந்தியா (ரெய்மா சென்), அச்சிறுவன் ஆகியோர் மட்டுமே முக்கிய கதைமாந்தர்கள். சந்தியா வந்த பிறகு கதையின் போக்கு சற்று மாறக் கூடும் என்றே நினைக்கிறோம். இருவருக்குமான நேசம், சிறுவனின் மீதான பற்றுதல் ஆகியவை பார்வையாளர்களை அப்படியே தோன்ற வைக்கிறது. ஆனாலும் ஜப்பான் மனைவிக்கு ஏற்படும் நோயும் அதற்கான மருத்துவத்திற்கான செனமாய் –யின் தேடலும் அவர்கள் இதுவரை சந்திக்காத போதும் இருவருக்குமான ஒரு கட்டுக்கோப்பான வாழ்வை, அடுத்தவர் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. 

சரி முடிவு எப்படி இருக்கலாம் என யூகிக்க முடிகிறதா? அதை எந்த விதமான விமர்சனங்களையும் வாசிக்காமல் படத்தை ஒருமுறை பார்ப்பவர்களுக்கான ஒரு அதிர்வாக, அவர்கள் வாழ்ந்த வாழ்வின் அடையாளமாக அம்முடிவு இருக்கக் கூடும்.
இப்படத்தில் மெல்ல மெல்ல கடிதங்கள் மூலமாகவும், பரிசுகள் மூலமாகவும் கல்கத்தாவின் மூலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம் ஜப்பானிய நகரத்தின் ஒரு அறை போல, பொம்மைகள், மேசை விரிப்புகள், அலங்காரப் பொருட்கள் என மாறிவிடுவதும், ஜப்பானியப் பெண் தன் கணவன் அனுப்பும் சித்த மருத்துவ மருந்துகளை தன் நோய் குணமாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதும் ஏறக்குறைய இருவரும் கலாச்சார மாறுதல்களை, புரிதல்களை தங்கள் காதலுக்காக ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது காதலின் விதியாகவே இருப்பதை நினைவுபடுத்துகிறது.

சந்தியாவுக்கும், செனமாய்க்குமான திருமணப் பேச்சு எழுவதும், மியாகி தன் காதலை அவனிடம் கடிதம் மூலம் தெரிவிப்பதும், அதை ஏற்றுக் கொண்டு கடிதம் மூலமாகவே இருவரும் திருமணம் செய்து கொள்வதுமாய் இருப்பினும், ஏற்கனவே தனக்கான ஒருவனாக சந்தியா செனமாய் யை உருவாக்கிக் கொள்வதால் இருவருக்குமிடையே இருக்கும் நேசம் மிக மிக இயல்பான ஒன்றாகவே நமக்குத் தெரிகிறது. சந்தியாவுக்கும் செனமாய்க்குமான நேசம் ஒரு வெளிப்படுத்த இயலாக் கவிதையென நிகழ்கிறது. இரவில் தனிமையில் அழும் அவளுக்கு ஆறுதல் சொல்ல வருபவனின் மார்பில் சாய்ந்து அழும் போது கதையின் போக்கில் மாறுதல் நிகழுமோ எனும் எண்ணம் பார்வையாளர்கள் எல்லோருக்கும் எழுவதைத் தவிர்க்கவே இயலாது.

பட்டம் விடும் காட்சிகள் ஒளி ஒவியம். அதற்கான மாஞ்சா கயிறு தயாரித்தலும், ஜப்பானிய காற்றாடிகள் போல உருவங்கள் செய்து பறக்க விடுதலுமாய் அழகாகத் தொடங்கும் பட்டம் விடும் போட்டி, மற்றொரு பிரிவினரால் கயிறு துண்டிக்கப்பட்டு தோல்வியடையும் போது, அச்சிறுவனை விட அதிகம் ஏமாற்றமடைபவனாக செனமாய் இருப்பதும், சிறுவனுக்கும் அவனுக்குமான அன்பை வெளிப்படுத்தும் காட்சியாக அமைகிறது. 

இறுதிக் காட்சிக்கும் முன்வரும் மழையும், பெருக்கெடுத்து ஓடும் ஆறும், சுழன்று வீசும் காற்றும் படத்தின் கதையோடு ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறது. இசை பற்றி சொல்லவே வேண்டாம் எந்த இடத்திலும் உறுத்தலே இல்லை, கதையோடு பயணிக்கும் இயல்பான இசையாகவே இருக்கிறது. ஜப்பானிலிருந்து மியாகி அனுப்பும் கடிதத்தை, செனமாய் யிடம் கொடுக்க அச்சிறுவன் ஒவ்வொருமுறை சந்தோசமாக ஓடிவருகையிலும் நம் மனதில் சந்தியா, சென்மாய் இருவரும் இணைந்தால் தான் என்ன எனும் எண்ணமும் தோன்றாமல் இல்லை.
இங்கே இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதை மட்டும் சொல்லாமல் விட்டிருக்கிறேன். ஒரு அழகிய காதல் கவிதையை வாசிக்க உங்களுக்கு விருப்பமிருக்கிறதா? அதை காட்சிகள் வழியாக, தன் திரை மொழியில் தர இயலும் என்பதை நிரூபித்திருக்கிறார் அபர்னா சென்.

*நிச்சயம் பார்க்கலாம்.

மிஸ்டர் அன் மிஸஸ் அய்யர் படத்திற்குப் பிறகே அபர்னா சென் படங்களை தேடிப் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் ஒரு அழகான காதல் கதையே…. அதை வேறு ஒரு நாள் பார்க்கலாம்.






Mar 6, 2013

பாக்கியவாதி.



இனிமேல் என்றும் எனக்குச் சொந்தமில்லாத
என் அன்பு
கழிவிரக்கத்துடன் என்முன் வரும்போது
காதல் என் உணர்வுகளைச் சீண்டுகிறது
என் விழிகளால் அவன் விழிகளைச் சந்திக்கும்
ஏக்கம் மூழ்கிறது

கட்டுப்பாடுகளின் சுவர்களுக்குள் நான்
அதனால் தான் மனமே இல்லாமல்
பின்வாங்கல்
என்னை மறந்துவிடு என் அன்பே
இன்று நான் வேறு ஒருவனுக்கு
உரிமையானவளாக இருக்கலாம்

அன்று நீ பச்சோந்தியானாய்
இப்படித் தான்
நாம் பிரிந்தோம், அன்புடன்
உன்னை நான் ஆராதித்தேன் மனமார
ஆனால் இன்று நீ
பாக்கியம் செய்த இன்னொருத்திக்கு
உரியவன்.