பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Showing posts with label இரோம் சர்மிளா கவிதைகள். Show all posts
Showing posts with label இரோம் சர்மிளா கவிதைகள். Show all posts

Mar 6, 2013

பாக்கியவாதி.



இனிமேல் என்றும் எனக்குச் சொந்தமில்லாத
என் அன்பு
கழிவிரக்கத்துடன் என்முன் வரும்போது
காதல் என் உணர்வுகளைச் சீண்டுகிறது
என் விழிகளால் அவன் விழிகளைச் சந்திக்கும்
ஏக்கம் மூழ்கிறது

கட்டுப்பாடுகளின் சுவர்களுக்குள் நான்
அதனால் தான் மனமே இல்லாமல்
பின்வாங்கல்
என்னை மறந்துவிடு என் அன்பே
இன்று நான் வேறு ஒருவனுக்கு
உரிமையானவளாக இருக்கலாம்

அன்று நீ பச்சோந்தியானாய்
இப்படித் தான்
நாம் பிரிந்தோம், அன்புடன்
உன்னை நான் ஆராதித்தேன் மனமார
ஆனால் இன்று நீ
பாக்கியம் செய்த இன்னொருத்திக்கு
உரியவன்.

Feb 27, 2013

போலீஸ்காரனின் அந்தக் கழி!



முகம் மூடியிருக்கும் ரிக்ஷா ஓட்டியே!
உனக்கு பயந்த சுபாவம் எனத் தோன்றுகிறது
வெயில் பொறுக்காமல் கொஞ்சம் ஓய்வு எடுக்கிறாய்
ஆனால் எனக்கென்னவோ உன்னை நினைத்துக் கவலை
இந்த நேரத்தில்
மினுதாங்கின் நடுவில்
உன்னைப் பார்த்த கணமே
மனத்தை உலுக்கிய வேறொரு நிகழ்வு
நினைவுக்கு வருகிறது.
கவனமாகக் கேள்
இது உன்னைப் போன்ற இன்னொருவனின் கதை
எதற்கெடுத்தாலும் தன் விதியை
நொந்து கொள்ளாத ஒருவன்
உன்னைப் போல
தைரியமான இளைஞன்
இன்றுபோல் அன்றும் தகிக்கும் சூரியன்
இதே பாலத்தின் தெற்குக் கோடியில்
ஓய்வெடுக்க ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்தான்
அவன் அருகே வயதான மற்றவர்கள்
அந்த கணம்
கிழக்கிலிருந்து வந்த லாரியில் போலீஸ்காரர்கள்
வண்டியின் வேகத்தைக் குறைத்ததும்
முன் பகுதியில், இடது மூலையில்
இருந்த கான்ஸ்டபிள் எழுந்து, கழியை எடுத்து
அடித்தான்
நிறுத்தாமல் ஒன்று, இரண்டு, மூன்று முறை
! எப்படிச் சிரித்தார்கள்
அந்த லாரியில் இருந்தவர்கள்!
வெட்கத்துடன் அவன் தலை குனிந்தான் வலியுடன்
வலிமை வெற்றிபெறும் இவ்வுலகில்
அர்த்தமற்றுப் போன வாழ்க்கை வாழும்
அந்த இளைஞன்
வலி தாளாமல் முதுகை வளைத்தபடி
பாலத்தைக் கடந்துபோனான் ரிக்ஷா ஓட்டியவாறு
மேற்கை நோக்கி
ஏன்தான் அங்கே வந்தேனோ என்று நொந்தபடி
இதயம் கனக்க
அன்று நான் பார்த்த
போலீஸ்காரனின் அந்தக் கழியைப்
படைத்தது யார்?

மினுதாங்: மணிப்பூரின் தலைநகரான இம்பாலின் துரெல் நதி மேல் உள்ள பாலத்தின் பெயர்.

- இரோம் ஷர்மிளா (தமிழில் அம்பை)