பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 31, 2012

நானும் ஒரு சிறுவனே...


இன்று காலை ஒரு மின் ரயில் ஒன்று கடப்பதற்காக பூட்டப் பட்ட ரயில்வே கேட் முன் நின்றிருந்தேன். ரயில் பாதி கடக்கும் போதே ஒரு சிறுமி தன் கையினை நீட்டி "டா டா" காட்டிய படி பயணித்துக் கொண்டிருந்தாள். நானும் பதிலுக்கு என் கைகளை அசைக்கத் தொடங்கினேன். எங்கே செல்கிறாள், நான் யார், அச் சிறுமி யார் என்பது பற்றியெல்லாம் நான் கவலைப் படுவதில்லை. அச் சிறு பெண்ணுக்கு மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி...

சுற்றிலும் இருந்த நாகரிக கூட்டம் என்னை வித்தியாசமாய் பார்த்தது. அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட எதுவுமே இல்லை. நான் பதிலுக்கு கையசைத்ததும் தன்னுடன் இருந்த மற்ற சிறுவர், சிறுமியரிடம் சொல்ல, ரயில் என்னை கடந்து சிறிது தூரம் செல்கையில் என்னை நோக்கி ஐந்து, ஆறு கைகள் அசைந்து கொண்டிருந்தன... நல்ல வேளை மற்றவர்களைப் போல் எனக்குள் இருக்கும் சிறுவனை நான் கொன்று விடவில்லை... :-)

உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் குட்டீஸ்....

காதலெனும் மது

காதலின் குடுவையில்
சேமிக்கப் படுகிறோம்
இருவருமாய்...

ஆயுள் முழுதும் போதை
வேண்டுபவன்
காதலைக் குடிக்கிறான்...

சிறிது சிறிதாய்
காதலை குடித்தவன்
வாழ்வில் நிதானமாகிறான்...

அவசரமாய் குடிப்பவன்
தடுமாறி விழுகையில்
பொய்யென புலம்புகிறான்...

சிலர் மயங்கிக் கிடக்க
பலரை தெளிய வைக்கிறது
காதலெனும் மது...

குடித்தவனும் சொன்னதில்லை
குடிக்காதவனும் சொன்னதில்லை
காதல் போதுமென...

ஒரு தேநீர் சந்திப்பில்...

ஒரு தேநீர் பருகிய
மாலை நேரம் நினைவிருக்கிறதா?
மெல்லிசை பரவிய
தருணத்தின்
ஆவி பறந்த கோப்பைகள்
நினைவிலிருக்கிறது
பிரிந்து விடலாமா
முதல் வார்த்தையை
நீ ஒலித்தாய்
இயலாதென்பதை
நான் ஒளித்தேன்
தோற்றப் பிழையோ
காட்சிப் பிழையோ
ஏதுமின்றி முடிந்து போனது
அந்நாள்
நினைவில் பிழைகள் ஏதுமின்றி
எப்பொழுதும் இருவருமாய்
செல்வதும்
திரும்புவதுமே வழக்கம்
நீ மட்டும் முதலில்
திரும்பிய நாள் அன்று
நான் மட்டும் தனித்து
தவித்துக் கிடந்த நாள் அன்று
இதே போன்றொரு
காலை வேளை
தேநீர் சந்திப்பில் தான்
சொன்னாய்
என் கவிதைகளை நேசிப்பதாக
இன்றும் அப்படித் தான்
எப்பொழுதுமே
உன் கவிதைகளை
நேசிக்கிறேன் என்பதாய்
சொல்லிச் செல்கிறாய்
இடையில் வந்தவனும்
பிரிந்தவனுமாய் நிற்கிறேன்
சுற்றிலும் பரவிக் கிடக்கிறது
நீ வாசித்த
கவிதைகளின் வாசமும்
உன் சுவாசமும்...

May 30, 2012

கடைசி வார்த்தை....

நம்மைப் பிரித்தபடி ஒழுகும்

மழைத் திரைக்கு அப்பால்

என் கடைசி வார்த்தைக்காக

காத்து நிற்கிறாய் நீ

.

நீர்மூடிய மூக்குக் கண்ணாடியைத்

துடைக்கும் சாக்கில் குனிந்தபடி

நானும் தேடிக் கொண்டிருப்பது

அந்தக் கடைசி வார்த்தையைத்தான்

நாக்கு நுனிவரை வந்த சில வார்த்தைகளுமே

அர்த்தமற்றுக் கரைய

அப்படியே உள்ளிழுத்து எச்சிலோடு விழுங்குகிறேன்

வாழ்வில் முதன்முறை

மொழியின் போதாமையை

முழுதும் உணர்கிறேன்

.

கடைசியில் எந்த வார்த்தையும் கிடைக்காமல்

கண்ணாடியைப் போட்டுக்கொள்கிறேன்.

மங்கலாகத் தெரியும் ஈரக் கண்ணாடியையும்

உன் புருவங்களில் சொட்டும் மழையையும்

காரணம் காட்டி

நீ அழவில்லையென்று

எனக்கு நானே சமாதானம் சொல்கிறேன்.

“வலுத்துவிட்ட மழைக்கு

ஓரமாய் நிற்கலாமே”

என்றது நிச்சயமாய்

என் கடைசி வார்த்தை அல்ல..

தெரிந்தும் நீ

சட்டென்று வாகனத்தில் ஏறிப்

போய்விட்டாய்..

நிரந்தரமாய்.

.

இதோ

என்னைச் சூழ்ந்து சுவரெழுப்பி

உலகிலிருந்து தனியாக்கிய

மழை அறைக்குள்

நான் கண்டுகொண்டேன்

அந்தக் கடைசி வார்த்தையை..

.

“என்னை மன்னித்துவிடு”.

- Director charles