பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 6, 2012

கெட்டவார்த்தை...


அடிக்கடி மோக வார்த்தையொன்றை உளறும்
வரமளிக்கிறேனென்று சொல்லி மறைந்தான் கடவுள்
இதைப் பரிசோதிக்கப் பெரு விருப்பம் கொண்டவள்
காசி நகர வீதிகளில் அலையும் அகோரியைப் போலே
சுயம் மறந்து பிண்டம் சுமந்து திரிந்தாள்
உடல் உபாதையில் மருத்துவரைச் சந்திக்கையில்
தன்னையுமறியாமல் அவள் அந்த வார்த்தையை பிரயோகித்தாள்
ஏறிட்ட அவன் என் நீலப்படத்தில் நடிக்கிறாயா? என்றான்
நேற்று துணி வியாபாரி ஒருவனிடமும் இதையே சொல்லப் போக
அவன் இவள் கட்டியிருந்த புடவைக்கொரு விலை பேசினான்
மனநிம்மதி தேடியொரு ஆசிரமம் கண்டறிந்தாள்
யோகியொருவன் கேட்ட கேள்விக்குத் தவறாக
இதையே உளறி வைக்க அவன் முற்றும் ”துறந்து” நின்றான்
அச்சத்தில் உறைந்த அவள் வரம் தந்தவனை வரச் செய்தாள்
அவனை நிந்திப்பதற்கு வாயெடுத்த போது வார்த்தை குழறி
அவனிடமும் இதையே மொழிந்தாள்
அவனோ இந்தா பிடி சாபம் எனக்கூறி
அவளைக் கற்படுக்கையாகி தன் மேனியைச் சரித்துக்கொண்டான்...

இடமாறு தோற்றப் பிழை


சுருட்டிய மயிர்க்கற்றையென
வளைந்தும் நெளிந்தும்
குறுக்கும் நெடுக்குமாய்
சுழன்று கொண்டேயிருக்கிறாய்
நினைவறை முழுதும்
வேனிற்கால உடல் தனில்
வேர்வையாய் வழிகிறாய்
விழி பார்க்கத் தவறினாலும்
மணி அறியும் பசித்த வயிறென
வலிகளினூடே ஆறுதலாக
உன்னையே உணர்கிறேன்
பயணப்பொழுதுகளினூடே
முகத்திலடிக்கும் தென்றலாகிக்
குறுக்கிடுகிறாய்
கரம் குவித்து பிடிக்க முயல்கையில்
கண்ணடித்துப் பிரிகிறாய்
இடமாறு தோற்றப் பிழையென....

பூமராங்


சொற்களை தூதனுப்பிப் பார்க்கிறாய்
துவண்டு உன்னிடமே தஞ்சம் வந்தடைகின்றன
சொற்களை பூமராங்காக்கி
என்னை இலக்காக்குகிறாய்
ஆச்சரியமாய் அவை உன்னைத் தாக்குகின்றன
உன் வார்த்தைகளை யாசித்திருந்தவள் தான் என்றாலும்
தேவைகள் என்றுமே ஒன்றில் நிலைத்திருப்பதில்லையென்பதை
நீயும் ஒத்திசைப்பாய் என்பதறிவேன்
ஜூலை 30 வெள்ளி இரவு 11:47க்கு
என்னை சலித்து விட்டதாய் சொன்னாய்
என் அழைப்புகளைத் துண்டித்தாய்
அழகாய்ப் பிரியவே எனக்கு விருப்பமென்றேன்
அடுத்த நாள் அதுவே நடந்தது
எனக்கான உன் சொற்கள் மறுக்கப் பட்ட பிறகு
உனக்கான என் சொற்கள் ஜாதிக்காய் பலகைகளுக்குள்
புழுக்கள் நெளியக் கிடக்கின்றன
66 நாட்களுக்குப் பிறகு
இயல்பாய்ப் பேச விளைகிறாய்
இறுகிய என்னை இளக்க மறுக்கின்றன
வழிநெடுக சிதறிக்கிடக்கும்
உன் இற்றுப் போன சொற்கள்
விட்டுக்கொடுத்தலின் சுகம் வலிது
அதனால் தான் விட்டுக்கொடுத்திருக்கிறேன்
நான் விரும்பிய உன்னை உனக்கே...

Mar 1, 2012

பீதோவன் - ஒரு புதையல்...

இசை என்றாலே என்னைப் பொறுத்தவரை ராகதேவன் இளையராஜா மட்டும் தான்... எனது இரவுப் பொழுதுகளை மிக மிக ரம்மியமாக்கிய பாடல்கள் பெரும்பாலும் இசைராஜாவின் திரைப் பாடல்களே... இன்றும் கூட அலைபேசி நினைவகத்தில் பெரும்பான்மை அவரின் இசையே நிரப்பி வைத்திருக்கிறேன்... இசை என்றால் இளைய ராஜாவை மட்டுமே அறிந்தவன் நான்.. மிக சில ரகுமான் பாடல்களும் பிடித்தமானவையே... இதில் என்ன வினோதம் என்றால் எனக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது... வெறும் ரசனை மட்டுமே... சுருதி, லயம், தாளம் இன்ன பிற சங்கதிகள் பற்றி எந்த விஷய ஞானமும் துளி கூட இருந்ததில்லை.... வெறுமனே ரசிப்பதும், அதன் போக்கிலேயே மகிழ்வதும், சோகமாவதும், சிரிப்பதும், ஆடுவதுமாய் என்னை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தவை ராஜாவின் பாடல்கள்...

சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் இருள் இனிது... ஒளி இனிது வாசித்துக் கொண்டிருந்தேன்... இசை கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்ற கலைஞர்களை பற்றி வெளியான உலக திரைப் படங்களைப் பற்றி மிக அருமையாக எழுதி இருந்தார்... அதில் தான் "பீத்தோவனின் காதல்" இருந்தது... அதுவரை பீத்தோவனின் இசை என்று விண்டோசில் இருக்கும் இரண்டு மூன்று இசை கோர்வைகளை கூட என்னால் சரியாக கேட்கவில்லை என்பது மறுக்க முடியா உண்மை...அது போக பீதோவன் ஒரு காது கேளாதவர், அவருக்கு வெளி உலகம் அறியா காதல் இருந்தது என்பது வரை மட்டுமே தெரியும்...

பீதோவனைப் பற்றிய திரைப் படம் IMMORTAL BELOVED பற்றி சொல்லும் முன் அவரது தனிப் பட்ட வாழ்க்கைப் பற்றியும் சொல்லி இருந்தார் எஸ்.ரா. கூடவே இடை செருகலாக மொசார்ட் பற்றிய AMADEUS திரைப் படம் பற்றியும் ... அந்த நூலில் பீதோவன் வாழ்வைப் பற்றிய சிறு குறிப்பையும், திரைப்படம் குறித்த தனது பார்வையையும் அழகாக சொல்லி விடுகிறார் எஸ்.ரா. ஆனால் எனக்குள் எஸ்.ரா அறிமுகப் படுத்தியது பீதோவன், மொசார்ட் என்னும் இரு இசை மேதைகளின் இசையை... இணையத்தில் பதிவிறக்கம் செய்து முதலில் பீதோவனை கேட்ட்கத் தொடங்கினேன்.. அது வரை இசைக்கு பாடலின் வரிகள், அதன் பொருள் மிக முக்கியம் என்று சொல்லி வந்தவன் நான்... வெறும் இசை பொருளற்றுப் போய்விடுகிறது, இசையையும் பொருளையும் மிக அற்புதமாக கோர்த்ததே இளைய ராஜாவின் மிகப்பெரும் சவால் என்று நம்பிக் கொண்டிருந்தேன்...



அனால் என் முடிவுகளை பொடிப் பொடியாக்கி, மௌனமாய் என்னை மாற்றி வைத்தான் பீதோவன். மெல்ல மெல்ல இசை உருமாறி உயிருக்குள் ஊடுருவதும் அதை தள்ளி நின்று நானே வேடிக்கை பார்ப்பதுமான விந்தை... இன்றும் பீதோவன் கொண்டாடப்படுவதன் காரணத்தை மிக மிக காலம் கடந்து அறிந்து கொண்டிருக்கிறேன்...மூன்லைட், சிம்போனி 9.. போன்ற மிகச் சிறந்த இசைக் கோர்வைகளை காது கேளா ஒருவரால் எப்படி இவ்வளவு ரம்மியமாக உருவாக்க முடிந்தது என்று புலம்ப வைத்திருக்கிறான் பீதோவன்... எத்தனையோ அவமானங்களையும், சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும், வலிகளையும் தாங்கி கொண்டே தனது இசை பயணத்தை தொடர்ந்திருக்கிறார் மாபெரும் இசை மேதையான பீதோவன்...அதுவே அவரது இசையில் வெளிப் படுகிறது... உணர்வுகளை பாடிய, இசைத்த ஒருவனின் வெற்றியே பீதோவன் என்னும் தனி மனிதனின் வெற்றி...

அப்புறம் மொசார்ட்... பீத்தோவனின் தந்தை ஒரு இசை பாடகர்.. தனது மகன் மொசர்ட்டைப் போல் பெரிய இசைக் கலைஞனாக வர வேண்டும் என்ற ஆசையில் தான் இசை கற்றுக் கொடுத்திருக்கிறார்... மொசார்ட் மற்றுமொரு சகாப்தம்.. பீதோவனுக்கு முந்தையவர் எனினும் அவரது இசை சொல்ல முடியா மகிழவையும் அதே சமயத்தில் நம்மில் எதோ இழந்த ஒன்றை நினைவு படுத்தவும் செய்கிறது... அந்த மகிழ்வில் இனம் புரியா சோகத்தையும் படரச் செய்கிறது...

இசையை மட்டுமே தான் வாழ்நாளென கொண்டிருந்த இரு இசைமேதைகளை அறிமுகப் படுத்தியது இருள் இனிது... ஒளி இனிது...நன்றி எஸ்.ரா வுக்கு...

எஸ்.ராவின் வரிகளில் சொல்வதெனில்... "இவ்வுலகை சந்தோசப் படுத்த நினைத்த எல்லோரின் பின்னாலும் மறைந்திருக்கிறது சொல்ல இயலா துயரங்கள்..."




உண்மை தான் நாமும் இசையிடம் மயங்கி நிற்பது நாம் எதோ ஒரு வகையில் காயம் பட்ட மனதை மயிலிரகென வருடுவதால் தான்... இசை நம்மை மகிழ்விக்கிறது,துயரங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுவிக்கிறது... மறக்க முடியாத சில உறவுகளின் நேசத்தை மீண்டும் மீண்டும் நினைவு கொள்ள வைத்து, அவர்களே நம் வாழ்வெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதை நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது....