பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 28, 2011

சொல்லாத நிஜங்கள்


ஏதோ ஒரு சுமையை
மனதில் ஏற்றி விட்டதாய்
குழம்பித் தவிக்கும்
பொழுதுகளில் நான்...
என்ன செய்யப் போகிறாய்
என்னை நீ
இப்படியே தவிக்க விடுவதால்
முரண்பட்டு திரிகிறது
எனது நாட்கள்...
பேச வேண்டும் என
பேசும் சொற்களில்
நிறைய உணமைகளை
மறைத்து விடுகிறாய் போலும்...
மரகொத்தி ஒன்றின்
இடைவிடா முயற்சியென
துளைகளாகிக் கொண்டிருக்கிறது
வினாக்களின் விசாரணை...
குரல்வளை இருக்கும்
கயிருகளென திணறிக்
கொண்டிருக்கிறேன் என்
தனிமைப் பொழுதுகளில்...
விடுபட நினைத்து
உயிர் கழற்றும் வேளையில்
கனவுகளோடு வருகிறாய்
கரங்களை பிடித்துக் கொள்ள...
முடிவிலா ஏக்கங்கள்
திசை தேடும் பயணங்களென
உன்னை தேடும் என்
உயிர் காற்றில் நிரம்பி
தவிக்கிறது நமக்கான
ஒரு வாழ்வு...

கலர் மீன்களும் கடிகார முட்களும்...


அணிலோ
கிளி ஒன்றோ
வருமென காத்திருக்கிறது
இடி தாக்கிய
ஒற்றைப் பனை மரம்...

காகங்களே இல்லா
உலகொன்றில் நதியென
நானும்
அகத்தியனின் கமண்டலமாக
நீயும்..

திருவிழா கால
குழந்தைகளாடும்
குடை ராட்டினத்தில்
புலியை துரத்துகிறது
மானொன்று...

கண்ணாடிக் கூண்டுக்குள்
அலைந்து கொண்டே
இருக்கின்றன
கலர் மீன்களும்
கடிகார முட்களும்...

என் மரணம் பற்றி
எனக்கு தெரியும்
காதல் முடிந்து கனவுகள் முடங்கி
எங்கே எப்பொழுது
இது மட்டுமே ரகசியம்...

என்னால் வரிசையாக
அடுக்கப்பட்ட விண்மீன்கள்
எரிகற்களாய் மாறிப் போய்
கிழே விழுகிறது
சிரிக்கிறது நிலவு...

அதிகம் சிரிப்பவனும்
அதிகம் சிரிக்கவைப்பவனும்
தன்னுள்
அடங்காத துயரத்தை
வைத்திருக்கிறானோ என்னவோ...

உன் வீட்டுக் குப்பைத்
தொட்டியில் கிழித்துப்
போட்ட கடிதங்கள்
அனைத்தும் எனக்காக
நீ எழுதியவை...

பேசத் துடித்து
தனித்திருக்கும் உனக்கு
உன்னுடன் மட்டும்
பேசும் மொழியொன்றில்
கவிதைகளை அனுப்புகிறேன்
இவை பேசும்...

அதிகாலை கவிதைகள்
விடியலோடு கரைந்து போகிறது
எனினும் காலவெளிகளில்
கலந்து இருக்கும்
ஒரு கருவைப் போல...

Aug 26, 2011

பலி



மெய்மையும் பொய்மையும்
இரண்டற கலந்து விட
தனிமை வெளி
நிலவின் கொஞ்சலாய்
தாயின் மடியாய்
வண்ணத்துப் பூச்சி ஒன்றின் இறகுகளாய்
கனவுகளின் வர்ணங்களாய்
இரவு விளக்கின் மெல்லிய ஆறுதலாய்
இன்னும் இன்னும்
அனைத்துமாய் ஆன பின்
யதார்த்த வாழ்வின்
விரிசல்களில் தொடங்குகிறது
நமக்கான கண்ணீர் ஊர்வலம்
முகம் காணமுடியா பொழுதுகள்
வறண்ட புன்னகையின் சிதைவுகள்
மூடப் பட்ட பாத்திரத்தின்
கொதிக்கும் நீரென நிமிடங்கள்
நிழல் கொடுக்க மறுக்கும்
மரமொன்றில் கூடு தேடும் தனிப் பறவையாய்
வெறுமை சுவற்றில்
கரிக்கோடுகளாய் கனவு வெடிப்புகள்
கொடுக்க எதுவும் இல்லாததால்
பெறவும் தகுதி இல்லாதவனாய்
சில நினைவுகள் தொலைக்க
வாழ்வை பலியிட தொடங்குவேன்
தொலைக்க முடியா சில நினைவுகளுக்கு
என்னையே பலிகொடுக்கலாம் நான்...

Aug 25, 2011

மறக்க துடிக்கும் நாளொன்று...


நெடு நாட்கள் கழித்து
புகையால் நிரம்புகிறது
நுரையீரல்
இப் புகையோடு சேர்த்து
உன் நினைவுகளையும்
வெளியேற்றி விட
முடியுமா என்ன?

எத்தனையோ மறக்க
நினைத்த கணங்களோடு
சில நாட்களும்
சேர்ந்து கொள்ள
நீள்கிறது காலம்...

நினைப்பதையெல்லாம்
சொல்லிவிட முடியாது
அது போல் தான்
எழுதி விடவும்
முடிவதில்லை என்னால்...

இதுவரை முற்றுப் புள்ளியில்
முடிந்து விடாத என்
கவிதைகளில்
இறுதி வார்த்தைக்கு பிறகு
நழுவி விழுகிறது
கண்ணீர்த் துளியொன்று...

அன்று யாருமற்ற
தனிமை பொழுதின் தொடக்கத்தில்
பூக்களோடு நான் காத்திருந்தது
உனக்கு வாழ்த்து
சொல்வதற்கென்று
நினைத்தாயா...

காலணிகள் எப்பொழுதும்
தெருவின் ஓரத்திலேயோ
வீட்டின் மூலையிலோ
அனாதையாய்
விடப் படுகின்றன
மனதின் ஓரமாய் நானும்...

உறவுகளும்
நண்பர்களும் வாழ்த்த
மீண்டும் மனம் நகரும்
அந்த காலம் தேடி
நான் இல்லாத அந்த
நாட்களை நோக்கி....


மறதி ஒரு வரம்
மறக்க வேண்டிய நிமிடங்கள்
மறக்க முடியா நிகழ்வுகளாய்
மாறி விடுவது
வேடிக்கை தான்...

நிஜங்களும்
நிழல்களும்
ஒன்றாக முடியாதென
உண்மை மெதுவாய் சிரிக்க
விடிகிறது
சிவந்த கண்களோடு
மறக்க துடிக்கும்
அதே நாளொன்று...